பாஜகவுக்கு சங்கு ஊத வருகிறார் கங்கை அமரன்.

சினிமாவில் இருந்து அரசியலில் குதித்து பெரும் ஆளாய் வருபவர்கள் லிஸ்ட்டில் நாமும் இணைந்து விடலாம் என்கிற நப்பாசையாலோ  அல்லது வேறு ஏதாவது கொள்கைப் பிடிப்பாலோ அரசியலில் நுழையும் சினிமா பிரமுகர்கள் தேர்தலுக்குத் தேர்தல் ஏதாவது இருக்கிறார்கள்.

இம்முறை திடீர் லக்கில் அம்மாவின் அடிபணிந்து உடனே தேர்தலில் நிற்க சீட்டும் வாங்கிய அதிர்ஷ்டக்காரர் கருணாஸே. விஜயகுமார் பா.ஜ.கவிற்கு சென்றார். கங்கை அமரனும் அவருடன் க்யூவில் இணைந்திருக்கிறார் பா.ஜ.கவில். இளையராஜா, ரஜினி போன்றவர்கள் தாங்கள் நாடும் ஆன்மீகம் வேறு இது போன்ற அரசியல் கட்சிகள் பேசும் தார்மீகம் வேறு என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டதால் அரசியல் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. ஆனால் கங்கை அமரனுக்கு அந்த ஆன்மீக வெளிச்சம் வரவில்லை போலிருக்கிறது.

சமீபத்தில் ஈரோட்டில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்க வருகை தந்த அவர் விழாவில் ஆன்மீக அரசியலை வெள்ளேந்தியாக பேசியதைக் கேட்டு அவர் மேல் பரிதாபமே வருகிறது. இருந்தாலும் விழாவில் அவர் பேசியதையும் கேளுங்கள்.

“மக்கள் சேவை செய்யவேண்டும் என்று பா.ஜ.க பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது.இப்போது உள்ள கூட்டணிக் கட்சிகளிடையே கொள்கைகளே கிடையாது. ஆனால் பா.ஜ.க நியாயமான கொள்கைகளை நம்பியே உள்ளது. மோடியின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளன.

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் கூறிவருகின்றனர். சினிமாக்காரர்களும் மனிதர்கள் தானே (அவங்களுக்கும் நாலு காசு சம்பாரிக்க ஆசை வரக்கூடாதா?)” –  அடைப்புக்குறிக்குள் இருப்பவை அவர் கோடிட்ட இடத்தில் நாம் ஃபில் அப் செய்தவை.

மாட்டுக்கறி சாப்பிட்டால் ஆளைக் கொல்லு, விவசாயிகளிடம் எல்லாத்தையும் பிடுங்கு, பெட்ரோல் விலையை ஏத்திக்கிட்டே போ என்பவற்றில் ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சல்யூட் அடிச்சு உயிர்காக்கும் மருந்துகளையெல்லாம் இந்தியாவில் தயாரிக்கிறதை நிப்பாட்டு என்று உத்தரவிட்டிருக்கும் சொக்கத் தங்கம் மோடி அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நடந்தால் மக்களுக்கு பின்னால் நிற்காமல் வயித்தால போகப் போவது உறுதி.