தமிழ்நாட்டில் பா.ஜ.க கட்சி, பொன்.ராதா கிருஷ்ணனின் கன்னியாகுமரி, குண்டுவெடிப்பு கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் பலம் பெற்ற கோயம்புத்தூர் தவிர்த்து வேறு எங்கும் காலூன்றவே முடியாமல் தத்தளிக்கும் நிலையில் அதற்கு முட்டுக் கொடுத்து ஆதரிப்பார் என்று நம்பப் பட்ட ரஜினியும், கமலும் ஸாரி என்று நாசூக்காக விலகிக் கொண்டார்கள்.

இருந்தாலும் பா.ஜ.கவுக்கு பவர் ஏத்த முடிவு செய்த தமிழிசை மற்ற கட்சிகள் போல் சினிமாத்துறை ஆட்களை உள்ளே கொண்டு வர நினைத்தார். அப்படி உள்ளே வளைத்துப் போடப்பட்டவர் தான் விஜயகுமார். அந்த வரிசையில் பா.ஜ.கவுக்கு பவர் ஏத்த வந்திருப்பவர் நிஜமாகவே பெயரில் பவர் உள்ள நம் பவர் ஸ்டார் சீனிவாசன்.

ஏற்கனவே, கொஞ்சம் பிரபலமான சினிமா நடிகர் ஆன பிறகு அரசியலுக்குள் நுழைய முயன்றார் பவர் ஸ்டார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளிலும் சேர முயன்றார். எங்கே இவர் நம் கட்சியில் சேர்ந்தால் நம்மிடம் இருக்கும் பவரும் போய்விடுமோ என்று பயந்தோ என்னவோ யாரும் கண்டுகொள்ளவில்லை.

இம்முறை பாரதிய ஜனதா கட்சி பவரின் பவரை உணர்ந்து அவரை கட்சியில் சேர்த்து அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளையும் பிடித்து விடும் திட்டமிட்டுள்ளது. நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

.பா.ஜ.கவில் சேர்ந்தது பற்றி சீனிவாசன் கூறும்போது… “நான் எதையும் எதிர்பார்த்து பாரதிய ஜனதாவில் சேரவில்லை. கட்சியின் கொள்கையும் பிரதமர் நரேந்திரமோடியின் செயல்பாடுகளும் பிடித்து சேர்ந்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்வேன். எனது ரசிகர் மன்றமும் பாரதிய ஜனதா வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்கும் என்கிறார்.

அப்பாடா ! இனி கவலையேயில்லை.   பா.ஜ.கவுக்கு இந்தத் தேர்தலில் 49 எம்.எல்.ஏ சீட்களாவது கண்டிப்பாகக் கிடைத்துவிடும்.

Related Images: