“நிஜமாகவே வாழ்ந்த கேரக்டரை நடித்தேன்” – மியா ஜார்ஜ்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரவான மியா ஜார்ஜ் கடந்த மூன்று வருடங்களில் மொத்தம் நாலே நாலு படங்கள் தான் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஒரு நாள் கூத்து” திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பில் சந்தோஷம் பொங்கியிருப்பவரிடம் பேசியபோது..

அமராகாவியத்துக்குப் பின் பரபரவென இல்லாமல் குறைந்த அளவிலேயே படங்கள் உங்களுக்கு. ஏன் ?

2014ல் இயக்குனர் ஜீவா சங்கர் தான் என்னுடைய மலையாளப் படத்தை பார்த்துவிட்டு அமரகாவியத்தில் நடிக்க அழைத்தார். அப்படித்தான் எனது தமிழ் சினிமா நுழைவு அமைந்தது. முதல் படமே நிறைய கவனமாக நடிக்கவேண்டிய படம். அப்படியே எனது எண்ணம் போலவே இருந்தது. இப்போதுவரை அப்படித்தான். தரமான படங்கள், பாத்திரங்கள் என்று தான் என்னை ஒரு கோட்டுக்குள் வைத்திருக்கிறேன்.  அதனால் படத்துக்கு படம் இடைவெளிகள் உருவாவது சகஜமே.

‘ஒருநாள் கூத்து’ படத்தில் நீங்கள் எப்படி நடித்தீர்கள்?

அப்படத்தின் கதையையும், அதில் எனது பாத்திரத்தையும் கேட்டபோது மிகவும் பிடித்துப் போனது. அப்படி ஒருவர் இருந்திருக்கிறார் என்று கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அதுவே என்னை அந்த பாத்திரத்தை செய்யத் தூண்டியது. இது போன்று வாழ்வைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களில் நடிப்பது தான் எனக்குச் சவாலாக இருக்கிறது. வெறும் டூயட் பாடும் படங்களில் மட்டும் நடிப்பதில் எனக்குப் பெரிய அளவு உடன்பாடில்லை.

ஸ்டார் ஹீரோயினாக உங்களுக்கு விருப்பமில்லையா ?

ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிப்பது எனக்கு முடியாத காரியம். படத்தின் கதை, எனது பாத்திரம் இவற்றை உணர்ந்து சிறப்பாக நடிக்கவேண்டும் என்பது எனக்கு முக்கியம். எந்த ஒரு சவாலான நடிப்பு மிகுந்த பாத்திரம் என்றாலும் எல்லோருக்கும் எனது பெயர் ஞாபகம் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் நான் சாதிக்க விரும்புவது.

திருமணத்துக்கு ஏங்குகிற பெண்ணாக நடித்தீர்கள். திருமணம் பற்றி உங்கள் கருத்து ?

திருமணம் தனிப்பட்ட விஷயம். ஆனால்  அதை பகிரங்கமாகத் தான் கேட்கிறார்கள். பருவம் வந்துவிட்டாலே  உடனே கல்யாணம் பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள். பலருக்கு விட்டுக் கொடுக்கும் எண்ணமே இருப்பதில்லை. ஆண், பெண்  இரண்டு பேருக்குமே திருமணத்தை நிலைநிறுத்துவதில் பொறுப்பு இருக்கிறது. இந்தியத் திருமணமுறை வேறு எந்த கலாச்சாரத்திலும் காணப்படாத முறை. இதனை காப்பதில் எல்லோருக்கும் பங்குண்டு.  எனக்கு தற்போது படிப்பு தான் முதல் டார்கெட். திருமணமெல்லாம் செய்ய இன்னும் மெதுவாகவே யோசிக்கலாம்.