போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்

தாராளமய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் மக்களின் வாழ்க்கைத் தரம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள். அதற்கு ஆதாரமாக எல்லோருடைய கைகளிலும் செல்போன், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளமை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்கிறார்கள்.

உண்மை என்ன?

மத்திய பிரதேச மாநில காவல் துறையில் காலியாக உள்ள 14,000 காவலர் (Constables) பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2016-த்தில் பெறப்பட்டன. சுமார் 9.24 லட்சம் பேர் இந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். +2 கல்விதான் இந்த வேலைக்கான தகுதி.

ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் 1.19 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகள், 14,562 பேர் முதுகலை பட்டதாரிகள், 9,629 பொறியியல் பட்டதாரிகள், 3,438 பொறியியல் பட்டையதாரிகள் அடக்கம். இது தவிர முனைவர் பட்டம் (PhD) பெற்ற 12 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த வேலையின் சம்பளம், 5,200-ல் இருந்து 20,000 ரூபாய்கள் வரை நிர்ணயிக்கப்படும். இதே மாநிலத்தில் சென்ற ஆண்டு கீழ் நிலை காவலர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட போது, மொத்தம் வந்த 6.1 லட்சம் விண்ணப்பங்களில் சுமார் 12,000 பேர் பொறியியல் பட்டதாரிகளாக இருந்தனர்.

மேலும், கீழ் நிலை வனக் காவலர் பணி இடங்களுக்கு வந்த  விண்ணப்பங்களில் சுமார் 1.17 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகளாகவும், 23,416 பேர் முதுகலை பட்டதாரிகளாகவும், 34 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் சதவீதம் அதிகரித்ததன் விளைவாகவோ, அதன் காரணமாக பட்டதாரிகள் அதிகரித்ததன் விளைவாகவோ இது நடக்கவில்லை. இன்றைக்கும் மத்திய பிரதேசம் இந்தியாவிலேயே கல்வியறிவில் பின் தங்கிய மாநிலமாக – 28ம் இடத்தில் – தான் உள்ளது.

கீழ் நிலைக் காவலர்களின் பணிச்சூழல் மிக கடுமையான ஒன்று. நேரத்திற்கு உறக்கம் இருக்காது, எந்த நேரம் அழைத்தாலும் ஓடிச் செல்ல வேண்டும், மணிக் கணக்கில் நிற்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாகன அணிவகுப்பு சென்று தீரும் வரை சல்யூட் அடிக்க ஓங்கிய கையை அப்படியே விறைப்பாக வைத்துக் கொண்டு நிற்க வேண்டும், சமூகத்தின் அடிப்படை வர்க்கங்களில் இருந்து வந்தாலும் அதே வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் மேல் விழுந்து பிடுங்க வேண்டும், சுய மரியாதையை கழற்றி எறிந்து விட்டு மேலதிகாரிக்கு சேவகம் புரிய வேண்டும் இவற்றையெல்லாம் விட மேலதிகாரிக்குக் கப்பம் கட்ட மக்களிடம் அதிகாரப் பிச்சை எடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் கூலி அடிமையின் வாழ்க்கை. மானம் மரியாதை மனசாட்சி நியாயம் போன்ற அடிப்படை மனித விழுமியங்களை உதிர்த்தாக வேண்டும் என்பது இந்த வேலைக்கான முன் நிபந்தனைகளின் ஒன்று.

”போக்கற்றவன் போலீசாவான்” என்பது கிராமத்துப் பெரியவர்களின் பொன்மொழி. உயர்கல்வி பெறவோ, வேறு தொழில் வாய்ப்புகளோ கிடைக்கப் பெறாதவர்கள் இறுதியில் நாடுவது போலீசு வேலையைத் தான். சீருடையணிந்த அடியாள் வேலையை கணிசமானோர் உணர்வுப்பூர்வமாக செய்கிறார்கள் என்றாலும், சொந்த மக்களை ஒடுக்கும் குண்டாந்தடிகளாக இருப்பதன் வலியை பல காவலர்கள் வாழ்நாள் முழுக்கச் சுமந்து திரிகின்றனர்.

முதுகலை, இளங்கலை, பொறியியல் மற்றும் முனைவர் பட்டம் படிக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு பெற்றவர்களே கூட அரசாங்கத்தின் அடியாள் வேலைகளுக்காக பன்னிரண்டாம் வகுப்புப் படித்தவர்களோடு போட்டி இட வேண்டிய நிலைதான் நமது பொருளாதார வளர்ச்சியின் ‘சாதனை’.

படித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டிய கடமையில் இருந்து அரசாங்கங்களை விடுவித்ததே தனியார்மயத்தின் சாதனை. தனியார் கார்ப்பரேட்டுகளோ படித்தவர்களில் தமக்குத் தோதானவர்களைப் பொறுக்கி எடுத்த பின் எஞ்சியவர்களை ஈவிறக்கமின்றி வீசி எறிந்து விடுகின்றனர். போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.

தனியார்மயம் எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளத்தாக பீற்றிக் கொள்ளப்படுவதன் லட்சணம் இப்படித் தான் இருக்கிறது.

தமிழரசன்