இந்தியாவின் தனியார் தொலைக்காட்சிகள், அறியாமை அரக்கனை சங்காரம் செய்திட இந்த நூற்றாண்டின் மின்னணு யுகத்தில் ”அறிவு அவதாரம்” எடுத்து ஓங்கி நிற்கின்றன. அடித்துக் கொண்டு வரும் அத்தனை அலை வரிசைகளிலும் அறிவை வளர்க்கும்(!) நோக்கமே நீக்கமற நிறைந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை மேம்படுத்த மேனிகளைத்துப் பாடுபட்டவர்கள் இப்போது இறுதியாக ஓர் உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஏன் இந்தத் திடீர் அறிவுப் புரட்சியை தனியார் அலைவரிசைகள் பிடித்துக் கொண்டன?

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அறிவின்(!) அடிப்படையில் கோடிகள் கொட்டிக் கொடுத்து அவனை எப்படியாவது சமூக உயர்நிலைக்குக் கொண்டு வந்து விடுவது என்பதுதான் அது. ஒர் ஐந்தாண்டு திட்டத்தை விடப் பொறுப்புணர்வோடும் இலக்குத் துல்லியத்தோடும் “அலைவரிசை முதலாளிகள்” அறிவை சகாய விலையில் சாமானியர்களுக்கும் கிடைக்கச் செய்கிறார்கள். ஸ்டார் டிவி (குரோர்பதி), ஜி.டி.வி (சவால் தஸ் குரோர்கா), சன்டிவி (கோடீஸ்வரன்) என்பவையே அந்த அறிவின் அவதாரங்கள்.

ஏன் இந்தத் திடீர் அறிவுப் புரட்சியை தனியார் அலைவரிசைகள் பிடித்துக் கொண்டன? இதன் பின்னணி மிகவும் வஞ்சகமானதும், அதே நேரத்தில் கூர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டிய அளவுக்கு அடிஆழத்தில் ஆபத்தை உடையதும் ஆகும்.

உண்மையில் அறிவு என்பது இந்த “கோடி ரூபாய் சூதாட்டங்கள்” ஏற்படுத் தும் கருத்துதானா? இல்லை. அறிவு என்பதன் ”நடைவண்டி நிலையோடு” இவர்கள் நிகழ்ச்சிகள் ஒய்ந்து விடுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் கருத்தமைவின் படி, ஒரு கேள்விக்கு சரி, தவறு என்று விடை சொல்வது அல்லது நான்கு விடைகளில் பொருத்தமான ஒன்றைப் பொறுக்கி எடுப்பது – இதைத்தான் நாம் அறிவின் நடைவண்டி நிலை என்கிறோம்.

எப்படி எனில் தகவல்களைப் பதிவு செய்து சேகரம் பண்ணுவது மூளையின் ஒரு பணி. ஆகவே அதை அப்படியே உரிய நேரத்தில் உதிர்ப்பது என்பதை கணிப் பொறியே செய்து விட முடியும். மனித மூளையை இதை விட மகத்தான முறையில் வீணடிக்க முடியாது.

கேள்விகள் ஓர் இலவம் பஞ்சு போல் தனக்குரிய முளைப்பிடம் தேடிப் பறக்க வேண்டாமா? இவை கேள்விகளே அல்ல, “மலிவான தகவல் சரக்குகள்”.

அறிவு என்பது ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நாட்டுச் சூழலுக்கேற்ப ஒவ்வொரு விதமாய்க் கற்பிதம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சான்றாக அரசனுக்கு போர், அரசன் நலம் பற்றி மட்டுமே அறிவுரை வழங்கிய அதிகார மையச் சார்புடைய ஒன்றும் அறிவு என வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த உள்ளர்த்தம் பொதிந்த செய்யுள்கள் (குறிப்பாக வெண்பா) இயற்றுவது என்பதும் அறிவாளியைத் தீர்மானிக்கும் அளவு கோலாக இருந்திருக்கிறது.

முகலாயப் பேரரசின் காலகட்டத்தில் சிறந்த ”சதுரங்க ஆட்டக்காரரே அறிவாளி” என்கிற அபிப்ராயங்கள் நிலவியதுண்டு. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர் வாழும் பகுதிகளில், “கவனகர்கள்” (பதின், பதினெண்) மிகப்பெரிய அறிவாளிகளாக மனப்பாட சக்தியால் மரியாதை பெற்றதுண்டு.

வெள்ளைக்காரர்களின் காலனிய ஆட்சியில் அவர்களின் குமாஸ்தாக் கல்வியின் மனப்பாடக் கிளிகளாக விளங்கியவர்கள் மிகப்பெரிய அறிவாளிகளாகப் பட்டங்களோடு பவனி வந்திருக்கிறார்கள். சான்று ஜஸ்டிஸ், ராவ்பகதூர், திவான் பகதூர், சர் போன்றவை.

இதன் தொடர்ச்சியாக இன்று ஒரு கேள்விக்கு விரைவாக விடைசொல்லும் ஒரு நபரை அறிவாளி என மின் – ஊடகங்கள் முன் மொழிய காகித ஊடகங்கள் வழிமொழிகின்றன. இன்றைய சமூகவியல் வரையறுப்பின்படி அறிவு என்பது நான்கு கூறுகளை உடையது அவை.

  1. தகவல்களைப் புலன் வழி பதிவு செய்தல்
  2. அவற்றை எண்ணங்களாக, சிந்தனைகளாக மாற்றுதல்
  3. சிந்தனைகளின் வழி சூழலுக்குத் தகவமைதல் – தகவமைத்தல்
  4. கடந்த அனுபவங்களில் இருந்து நிகழ்வுக்குப் பாடமும் எதிர்கால முன்னகர்வுக்கு தர்க்கபூர்வமான ஊகங்களை மேற்கொள்ளல். செயல்பட உந்துதல்.

ஆனால் இந்த தகவல் திமிர் பிடித்த சூதாட்டமோ இவற்றின் தொடக்க நிலைத் தகுதியான தகவல்களைப் பதிவு செய்து கொண்டு அவற்றை உதிர்ப்பது என்பதை மட்டுமே அறிவுத் திரவத்தின் உச்சபட்ச கொதிநிலை என்கிறது. அதற்கான சூதாட்டப் பரிசு பார்வையாளர்களிலோ, அல்லது பங்கேற்பாளர்களிலோ உள்ள சமூகவியல் தெளிவு உள்ளவர்களையும் ஈர்க்குச்சியைத் துடுப்பாகப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கிறது.

இதன் இன்னொரு சகிக்க முடியாத விளைவு சில மீடியா பண்டிதர்கள் இந்நிகழ்ச்சிகளுக்கு கேள்வி – பதில் தயாரித்து தரும் சூதாட்டத் தரகர்களாக மாறியிருப்பதுதான். இந்தத் தரகு வேலைக்கு அறிவின் பேரால் கோடிகள் கொட்டிக் கொடுக்கப்படுகின்றன. (சில தினமணி, இந்து வாசகர்கள் அதிலும் காலாவதியான தகவல்களைச் சுட்டிக் காட்டி தங்கள் அறிவின் அபாரத்தை மெச்சி தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக்கொள்கிறார்கள்.)

நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் விளம்பர நிறுவனங்களையும் பொறுத்த வரை மக்கள் வெறும் பார்வையாளர்களும் வெறும் நுகர்வோர்களும் மட்டுமே.

கடந்த சில ஆண்டுகளாகவே அழகிப் போட்டிகளின் வருகையை உச்சி மோந்து உயிர்சிலிப்பவர்கள் அப்போட்டிகளில் அறிவுக்கும் போதுமான அளவுக்கு இடம் அளிக்கப்படுகிறது என்றார்கள் (இங்கே அறிவின் பணயமாக வக்கிரம் காப்பாற்றப்படுவதைக் கவனிக்கவும்). அந்த நான்கே நான்கு கேள்விகள் எப்படி அழகியின் அறிவைத் தீர்மானிக்கப் போதுமானவை என்ற கேள்வியை சில காகிதப் புலிகளும் (வணிகப் பத்திரிகையாளர்கள்) கேட்டிருந்தார்கள்.

ஆனால் இன்றைக்கோ அறிவின் பெயராலேயே நடத்தப்படும் இப்போட்டிகள் குறித்து கொட்டாவி விடக் கூட வாய்திறக்க மறுக்கிறார்கள் இந்த மீடியாப் பண்டிதர்கள். ஒருவேளை வாய்திறந்தால் அதுவும் அறிவின் அவதாரம் பற்றிய கதாகாலட்சேபமாக இருக்கிறது.

இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் இந்நிகழ்ச்சிகளின் நடத்துநர்கள் அனைவருமே முன்னாள், இந்நாள் நட்சத்திரங்கள்.

நட்சத்திரங்களைக் காட்டி நடைபெறும் இந்தச் சூதாட்டத்திற்கான பொருளாதாரம் விளம்பர நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன. விளம்பர நிறுவனங்கள் பார்வையாளர்கள் அல்லது நுகர்வோர்களிடமிருந்து பல்முனை ஏய்ப்புகளின் மூலம் சூறையாடி விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் விளம்பர நிறுவனங்களையும் பொறுத்த வரை மக்கள் வெறும் பார்வையாளர்களும் வெறும் நுகர்வோர்களும் மட்டுமே.

அவர்களுக்கென தனித்த வாழ்க்கை அலுவல், பிரச்சினைகள் என எதுவுமே இருக்காது. இருக்கவும் அனுமதியில்லை. பார்வையாளர்களின் மனத்தில் எப்போதும் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும் ஒரு குரல் (விளம்பரங்களில் ஒலிக்கும் கட்டை யான குரல்) “மெகா சீரியல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை இதோ பளிச்சிடும் வெண்மையில் சூதாட்டம்” என்பதுதான் அது.

நட்சத்திர நடிகர்களைத் துண்டில் புழுக்களாக்கி நீரில் மேயும் மீன்களை (மக்களை) தங்கள் குடுவைக்குள் சேகரிக்கிறார்கள் வியாபாரிகள். மத்தியதர வர்க்க மக்களுக்குத் தெரியுமா துண்டில் புழுக்கள் மீனுக்கு இலவசம் அல்ல என்று? இந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரு தனிமனிதனின் மனப்பாடச் சக்தியை நினைவாற்றலைப் பரிசோதிப்பதாக மட்டுமே அமைந்து விடுகின்றன. சான்றாக கல்பனா சாவ்லா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாகக் கேட்கப்பட்டு விடைகளில் ஒன்றை பொறுக்கி எடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார். இது தகவலாகத் தொடங்கி தகவலாகி மட்டுமே முடிவடைகிறது.

இதையே இந்தியாவில் அதிகமான மக்களால் உண்ணப்படும் அரிசி, கோதுமை ரகம் எது என்று அமைப்பார்களேயானால் அதற்கான விடையைச் சொல்கிற ஒரு பங்கேற்பாளர் ஒரு கூட்டிணைவான பண்பாட்டு அம்சத்தை விளங்கிக் கொண்டவராக ஆகிறார். இதன்மூலம் அவர் அறிவும் சமூகமயப் படுத்தப்பட்டிருக்கிறது எனலாம்.

இதேபோல் தான், மக்களின் உடை ரசனை, பொழுது போக்கு சுற்றுலா, நிலவியல், உளவியல், வரலாறு பற்றிய சமூகமயப்படுத்தப்பட்ட கோணங்களில் இல்லை கேள்விகள். ஆமணக்கு விதையைப் போல் மேலிருந்து தன் மர நிழலிலேயே விழுந்து விளையாமல் போகின்றன. கேள்விகள் ஓர் இலவம் பஞ்சு போல் தனக்குரிய முளைப்பிடம் தேடிப் பறக்க வேண்டாமா? இவை கேள்விகளே அல்ல, “மலிவான தகவல் சரக்குகள்”. இதனுடைய பங்கேற்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்படும் தருணம் ஒரு ஆயுள் முழுக்க சிரிப்பதற்கு தகுதியுள்ளது.

மக்களின் உடை ரசனை, பொழுது போக்கு சுற்றுலா, நிலவியல், உளவியல், வரலாறு பற்றிய சமூகமயப்படுத்தப்பட்ட கோணங்களில் இல்லை கேள்விகள்.

அது என்னவெனில் ஒருகோடிருபாய் பரிசு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு மென்பொருள் நிறுவனங்களில் முதலீடுசெய்து சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுப்பேன் என்பதும், அதே போல் யாருடன் விருந்து சாப்பிட விருப்பம் என்பதற்கு மறக்காமல் ’கம்ப்யூட்டர் கடவுள் பில்கேட்ஸ்’ என எழுத்துப் பிசகாமல் சொல்வதும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்விக்காக உதவுவது (இதில் இடஒதுக்கீடு என்பதற்கு மறைமுகமான எதிர்ப்பு பதிவு செய்யப்படுவது கவனிக்கத்தக்கது) என்பது போன்ற “தர்மகர்த்தா சோசலிசத்தை” அவிழ்த்து விட்டுத் தங்களின் மேட்டிமையைக் காட்டிக் கொள்கிறார்கள். இதற்கும் அழகிப் போட்டியில் அழகிகள் கூறும் விடைகளுக்கும் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? அது அழகின் பேரால் அபத்தம்; இது அறிவின் பேரால் அபுத்தம்.

இந்த நிகழ்ச்சியை பார்வையாளனின் மனத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிய வைக்கவே நட்சத்திர நடத்துநர்கள்; பிரம்மாணடமான அரங்க அமைபபுகள்; பார்வையாளனை நிகழ்ச்சியோடு ஒன்றவைக்க பின்னணியில் இதயத் துடிப்பு

இசை, போட்டியாளர் தன் உறவினரோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் வாய்ப்பு. அரங்கத்தில் குழுமியிருக்கும் பார்வை யாளரின் கூட்டிணைவான(!) உதவியைப் பெறல் எனப்பல்வேறு ஜனரஞ்சக அம்சங்களை இணைத்து வேலிக்காத்தான் முள் மரத்துக்கு வேப்ப மரத்தின் ஒப்பனையைச் செய்கிறார்கள்.

இறுதியாக, இந்த நிகழ்ச்சியால் லாபம் அடைபவர்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், சில மத்தியதர வர்க்க மக்கள். இதற்கு அறிவின் பேரால் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம். நம் விலாக்களில் இருந்தே எலும்பை உருவி நம்மில் சிலருக்கு எலும்பு போடுகிற முதலாளித்துவ சூட்சுமம் தான் இது.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சரத்குமார் கூறுகிறார். “நீங்க கோடீஸ்வரன் ஆகணும். நான் ரெடி நீங்க ரெடியா” என்று. இந்தச் சூதாட்டக் கேவலத்தை ஒழித்துக் கட்டும் நிலை வரும் போது உங்களைப் பார்த்து நீங்க ரெடியா என்று மக்கள் கேட்க மாட்டார்கள். அது அறிவின் மீதான பற்று காரணமாக நிகழாது. சமூகத்தின் மீதான பற்று காரணமாக நிகழும்.

வெயில் மொழியன்,
புதிய கலாச்சாரம், ஜனவரி, 2001.

பெட்டி செய்தி: நீங்கள் கோடீசுவரனாக வேண்டுமா?

இந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்த முதலாளிகள் தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்து

வைத்திருந்தார்கள் – அல்லது நிகழ்ச்சி மூலம் புரிந்து கொண்டார்கள்.

எல்லோரும் பணத்தைத் தேடி ஓடுகிறார்கள்- கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் இசை கொஞ்சம் சமையல் எல்லாவற்றையும் சேர்த்து நொதிக்க வைக்கும் ஒருவித்தை மட்டும் தெரிந்தால் போதும்!

உலகம் முழுவதும் இந்த மோகம் பிடித்து ஆட்டுகிறது. கொலம்பியாவில் உள்ள மருந்துக் கம்பெனிகள், அரச குடும்பங்கள் லெபனியர்கள் என்று பலதரப்பையும் பிடித்துக் கொண்டுவிட்டது.

இந்தியாவில் பிழிந்து எடுத்து விடுகிறார்கள்; ஜப்பானில் கேள்விகள் படுசுலபம். அங்கே ரொம்பக்கஷ்டமான கேள்வி என்ன தெரியுமா? ஏப்ரல் முட்டாள் தினம் எந்த மாதத்தில் வருகிறது? ஜனவரியில், பிப்ரவரியில், மார்ச்சில் அல்லது ஏப்ரலில்.

“உங்களில் யார் கோடீஸ்வரர்?” என்ற இந்தி நிகழ்ச்சி ஸ்டார் டிவி வலைப் பின்னல் சொந்தக்காரர் ராபர்ட் முர்தோக்கினுடையது. போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு கோடி கிடைக்கிறதோ இல்லையோ, அமிதாப்பச்சன் போன்ற பிரபல நடிகரோடு ஒரு மாலை நேரத்தில் பொழுதைப் போக்குகிற பரவசம், ஆனந்த லகரி!

பெரியண்ணன் என்று அழைக்கப்படுகிற பச்சன் இந்த நிகழ்ச்சிக்காகவே வண்ண நூலிழைகளால் பின்னப்பட்ட கோட்டு-சூட்டுகளை மாட்டிக்கொண்டுவருகிறார். இந்தப் பிரமாண்டத்தைப் பார்த்து கலந்து கொள்ள வந்த சிலருக்கு வாய் திறந்துபேசக் கூட முடியவில்லையாம். அத்தனைப் பிரமிப்பு!

Related Images: