நான் தலைக்கனம் பிடித்தவளா ? – நித்யா.

தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையம் கோட்டை , ஓ.கே.கண்மணி போன்ற படங்களில் நடித்திருக்கும் நித்யா மேனனாகிய நித்யா தனது இளம் வயது மற்றும் சினிமாவுக்கு வந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

நடிகையாக எப்படி ஆனீர்கள் ?

“நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. சிறுவயதிலேயே சமூகத்தில் நடக்கும் அநீதிகள், அநியாயங்களை பார்க்கும்போது ஆவேசப்படுவேன். இதையெல்லாம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல பத்திரிகை பணியில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் விதி நடிகையாக்கி விட்டது. எந்த துறையாக இருந்தாலும் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு உழைத்தால் ஜெயிக்கலாம். இது என் வாழ்க்கையில் நிரூபணம் ஆகி இருக்கிறது.

நீங்கள் திமிர் பிடித்த பெண் என்று பேச்சு வரக் காரணம் என்ன ?

நித்யாமேனன் திமிர் பிடித்தவள், அகம்பாவம் இருக்கிறது என்றெல்லாம் என் பின்னால் பலர் பேசுவது எனக்கு தெரியும். சினிமாவில் நடித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. என்னிடம் நடிக்க கேட்டு வரும் எல்லா படங்களையும் நான் ஒப்புக்கொள்வதும் இல்லை. கதை பிடித்து இருந்தால் மட்டுமே நடிக்கிறேன்.

இதை வைத்து நான் தலைக்கனம் பிடித்தவள் என்கிறார்கள் அதுபற்றி கவலைப்படவில்லை. நல்ல கதாபாத்திரம் என்றால் சிறிய வேடமாக இருந்தாலும் கூட நடிப்பேன். ருத்ரமா தேவி படத்தில் சிறிய வேடம்தான் கொடுத்தார்கள். அந்த படத்தின் கதை பிடித்து இருந்ததால் நடித்தேன். அதில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

படங்களில் பாடல்கள் பாடுவது பற்றி..

எனக்கு பாடும் திறமை சிறு வயதிலிருந்தே உண்டு. பள்ளியில் படித்தபோதே விழாக்களில் பாடி இருக்கிறேன். இப்போது சினிமாவிலும் பாட வாய்ப்பு கிடைக்கிறது. நடிகை, பாடகி இரண்டில் எது ரொம்ப இஷ்டம் என்று கேட்டால் பாடகி என்பேன்.”

இவ்வாறு நடிகை நித்யா  கூறினார்.