ஓடிக்கொண்டிருக்கும் சென்னையின் வாழ்க்கையில் சுரங்கப் பாதைகள் ஒரு முக்கியமான வழித்தடம். அலுவலகங்களையும், வீடுகளையும், நோய்களையும், சிகிச்சைகளையும், கேளிக்கைகளையும், அத்திவாசிய பயணங்களையும் பிரித்து விடுகின்றவைதான், அந்த வழித்தடங்கள். ஒரு சுரங்கப் பாதையில் அன்றாடம் கடந்து போவோர் ஆயிரக்கணக்கில் இருக்கும். அந்த ஆயிரக்கணக்கான மக்களின் சில அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், சுரங்கப் பாதை வியாபாரிகள். கிண்டி சுரங்கப் பாதையில் தரைக்கடை வியாபாரம் செய்யும் பெண்களைச் சந்தித்தோம்.

“ஏதோ வயித்து பொழப்புக்காக இங்கன குந்திகினு யாவாரம் பாத்துகினுக் கீரேன். அதுக்கு ஏதுனாச்சும் பெரச்சன வந்துருமுங்களா? கடைய எதுவும் எடுத்துருவிங்களா?”. நாங்கள் பேச முயற்சித்த அனைவரும் முதலில் வெளிப்படித்திய இந்த வார்த்தைகளே அவர்களது அஞ்சி நடுங்கும் வாழ்க்கையை ஒரு முன்னோட்டமாக விளக்குகின்றது.

வடிவம்மாள், வயசு 65. நான்கு பிள்ளைகளுக்கு தாய். தினமும் வண்ணாரப்பேட்டையில் இருந்து கிண்டிக்கு வந்து கூடையில் நாகப்பழம், நெல்லிக்காய் விற்கிறார். குடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் கணவன் ஒரு மீன்பாடி வண்டி தொழிலாளி. வடிவம்மாளுக்கு சொந்த ஊர் சேலம் கள்ளக்குறிச்சி. சென்னை வந்து முப்பது வருடங்களாகி விட்டன. ரெண்டு பொண்ணு, ஒரு பையன் திருமணத்தை முடித்து விட்டார். 29 வயதாகியும் வேலைக்கு போகாத கடைசி மகன் நிதமும் குடிப்பதற்கும் சேர்த்து உழைக்கிறார்.

“எனக்கு கல்யாணம் ஆகயில 14 வயசு. மறுவருசமே எம்மூத்த பையன் பொறந்தான். அப்பறம் வருசையா மூனு பிள்ளைங்க. ஊருல காடு கழனி வேலையின்னு எல்லாம் பாத்தாச்சு. வறுமை தீந்த பாடுல்ல. பிள்ளைகள வளக்கனுமேன்னு சென்னைக்கு வந்தோம். வந்த நாள் முதலா பழ யாவாரம் தான்..”

“நாங்க 24 மனை செட்டியார். 8 மனை வீட்டுல பொண்ணு குடுப்போம் 16 மனை வீட்டுல பொண்ணு எடுப்போம். எங்க சாதியில நல்ல வசதி உள்ளவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா நான் பொண்ணு எடுத்தது, கொடுத்ததுன்னு எல்லாருமே இந்த(வறுமை) நிலையிலாதான் இருக்கோம். மூக்குத்தி கூட பித்தளதான். எங்க தாலி என்னமோ நாமம் போட்ட தாலிதான் ஆனா என் தாலிக்கயிறு வெறும் கயிறுதான்.”

பிள்ளைகளை வீட்டுல போயி கூட பாத்துக்கறது இல்ல. ரோட்டுல பாத்துக்கிட்டா உண்டு. மஞ்சள் பூசக்கூட நேரமில்லாமல் கயிறு கருத்துப் போயிருந்தது.

“சென்னைக்கு வந்த புதுசுல ரொம்பவும் கஸ்டம். ஒரு வேள சாப்புட சோறு இருக்காது. எத்தன நாள் ஒடச்ச கடலையே (பொட்டுக் கடலை) தின்னுட்டு தண்ணிய குடிச்சுட்டு சத்தம் போடாம படுத்துருக்கும் எம்புள்ளைங்க? பெரியவன் மட்டும் 12-வது படிச்சான். மத்தவங்க 5, 6 வரைக்கும் படிச்சாங்க. அவங்களையும் யாவாரம் பாக்க கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப பிள்ளைங்களும் இந்த தொழில்தான் செய்றாங்க.”

“பிள்ளைகள் சென்ட்ரல் ஸ்டேசன்ல தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு, பைனாப்பிள் விக்கிறாங்க. இதுல எவ்வளவு கெடைச்சுற போகுது! அவங்களுக்கு பொண்டாட்டி, பிள்ளையின்னு தனி குடும்பமாச்சு. பேர பிள்ளைங்க கெவுருமெண்டு பள்ளிக் கூடத்துல படிக்குது. அவங்க பசி பட்டினி இல்லாதிருந்தா போதாதா? நாமும் எதுக்கு பாரமா? பிள்ளைகளை வீட்டுல போயி கூட பாத்துக்கறது இல்ல. ரோட்டுல பாத்துக்கிட்டா உண்டு.”

“நான் அப்பிடி இப்படி பழமெல்லாம் வாங்கி விக்க மாட்டேன்! கெட்டு போன பழத்த கொடுத்தா வேலைக்கு போற ஆபிசருங்க சாப்பிட்டு ஒடம்புக்கு ஏதாவது நோவு வந்துருச்சுன்னா? பாவம் அவங்க பொழப்பும் கெட்டுடும், நம்ம பொழப்பும் கெட்டுடும். எம்மேல இறக்கப்பட்டு பத்து இருவது சும்மா தருவாங்க. நான் வாங்க மாட்டேன். நான் சும்மா கையேந்தலயே? யாவரத்துக்குத்தானே கை நீட்டுரேன். பழத்துக்கு மட்டும் குடுங்குங்க சாமின்னுவேன். அவங்க ஆயிரமா சம்பாதிச்சாலும் கஸ்டப்பட்டுத்தானே சம்பாதிக்கறாங்க.”

“ஒரு நாளைக்கி 200 ரூபா கெடைக்கும். வீட்டுக்கு 2,500 ரூவா வாடகை கொடுக்கனும். மழை, உடம்புக்கு நோவுன்னா யாவாரத்துக்கு வர முடியாது. முதியோர் பணம் வாங்குனா கொஞ்சம் கைகொடுக்குமுன்னு நாயா பேயா அலையிரேன்! வாங்கவே முடியல. இங்கன வேலைக்கி போறவங்க வாரவங்க தாயா பிள்ளையா பழகுறாங்க. கையில கொண்டு போற சாப்பாடு ஏதோ காரணத்தால சாப்பிடாம தினமும் யாராச்சும் கொடுப்பாங்க. நான் சாப்பிட்டது போக யாருக்காச்சும் கொடுப்பேன். அவங்க அனுசரணைதான் இங்கன இத்தன காலம் குந்திகினு இருக்கேன்.”

“எனக்கு பெரிய வேதனையே என் சின்ன பையன்தான். நெதமும் நான்தான் சாராயம் குடிக்க 100 ரூபா பணம் கொடுக்கனும். தப்பி தவறி வேலைக்கு போனா ரெண்டு நாளைக்கி வச்சு குடிக்கிறான். கையில காசு இல்லன்னா தகாத வார்த்தையில ஏசுறான், அடிக்கிறான். இந்த வயசுலயும் நாந்தான் கோயம்பேடு போயி பழம் வாங்கி சுத்தம் பண்ணி தாளிச்சு (சின்ன நெல்லிக்காயை தாளிப்பது) ரயிலாண்ட எடுத்து வர்றேன். படுத்தே கெடப்பான் பாவி.”

ஏதோ வாழ்ந்தாச்சு இன்னும் கொஞ்ச காலம்.!” என்றார் வடிவம்மாள். வறுமையும், குடும்ப பிரச்சினைகளும் அவரை அரித்துத் தின்னாலும், யாரிடமும் கை நீட்டக் கூடாது என்று இந்த வயதிலும் போராடுகிறார். அவருடைய ‘ஆரோக்கியத்தின்’ இரகசியம் கூட இந்த போராட்ட குணமாக இருக்கலாம்.

அடுத்தாக செல்வி அம்மாவைப் பார்த்தோம். மகள் அங்கம்மாவோடு சேர்ந்து பூ, பழம் விற்கிறார். 2 மகள், 2 மகன், 1 மருமகன், 2 பேரக் குழந்தைகள் என கூட்டு குடும்பமாக மடுவங்கரையில் இரண்டு அறை கொண்ட அஸ்பெஸ்டாஸ் போட்ட சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் செல்வியம்மாளின் கணவர் வியாபாரம் முடிந்து போகையில் ஒரு கார் மோதி அவரைக் கொன்று விட்டது.

அதனால் அம்மாவுக்கு துணையாகவும் வீட்டு வருமானத்திற்காகவும் மகள் அங்கம்மா வந்துவிட்டார்.

ஸ்டேசன்ல டூட்டி பாக்குற போலீசு மனசாட்சி உள்ளவரா இருந்தா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம். இங்க வைக்காத அங்க வைக்காதன்னு கொடைச்சல் கொடுத்தா காயோட கடையை தூக்கிக்குனு ஓடனும்
“பத்து வருசமா எங்க வீட்டுக்காரரு கிண்டியிலதான் பழ யாவாரம் செஞ்சாரு. அவரு செத்ததும் என்ன செய்றதுன்னு புரியல. வீட்டுலேயே உட்காந்துருக்கவும் முடியல. பசங்களுக்கு கல்யாணம் பன்னணும். 4 வருசமா என் பெரிய பையனும் வேலை இல்லாம இருக்கான். பெரிய பொண்ணும் வீட்டோட இருக்கு. எல்லாத்தையும் மனசுல வச்சு திரும்பவும் யாவரத்துக்கு வந்துட்டேன்.”

“நானும் என் பெரிய பையனும் பத்து வருசமா சென்னை ரேஸ் கோர்ஸ்ல வேலை செஞ்சோம். கேசு நடக்குதுன்னு ரேஸ் கோர்ச மூடிட்டாங்க. அதுலேருந்து வேற எந்த வேலைக்கும் போக மாட்டேங்குறான். சின்னவன் கோல்ஃபு மைதானத்துல பந்து பொருக்கி போட்ற வேலை செய்றான். நாலு பேரும் நாலு பத்து ரூவா சம்பாதிச்சாதான் ஒரு நாள் பொழுத நிம்மதியா கழிக்கலாம். ஒரு நாள் ஒருத்தர் படுத்துட்டா அடுத்த நாள் செய்ற ஒவ்வொரு செலவையும் யோசிக்கனும்.”

அம்மாவுடன் இணைகிறார் அங்கம்மாள்.

“என் வீட்டுக்காரு கொத்தனாரு. வேலை அசதியில குடிக்கவும் செய்வாரு. எங்க அப்பா எறந்ததும் அம்மாவுக்கு துணையா நானும் வர்றேன். எடுத்து செய்யறேன். அரசு பள்ளிக்கூடத்துலதான் எம்பிள்ளைங்க படிக்குது. தங்கச்சி அனுப்பி வைப்பா. நானும் அம்மாவும் விடியக் காலையிலேயே கோயம்பேடு போயி பூ, பழம் வாங்கி வருவோம். முழுசா யாவாரம் நடந்தா தலைக்கி 300 வருமானம் கெடைக்கும். மீந்து போச்சுன்னா மறுநாள் விப்போம். பாக்க ஃப்ரஷ்சா இல்லன்னா வாங்க மாட்டாங்க. வந்த விலைக்கி யாராச்சும் பெரியவங்களுக்கு கொடுத்துருவோம்”.

ஆண்களின் மரணம் செல்வி போன்ற ஏழை குடும்பத்துப் பெண்களின் போராட்டத்தை இருமடங்காக்கி வதைக்கிறது. இவர்களுக்கு எப்படி வாழ வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும் என்ற தெரிவுகளெல்லாம் கிடையாது.

அடுத்ததாக மற்றுமொரு கூட்டு குடும்பத்தை சந்தித்தோம். தேவகி, கற்பகம், சிதம்பரம் மூவரும் உடன்பிறப்புக்கள். வேலூர் ஆம்பூரை சேர்ந்தவர்கள், அப்பா காலத்திலிருந்து கிண்டி ரயில் பாதையில் காய் கடை நடத்தி வருகிறார்கள். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வாங்குபவருக்கு வருமளவு எல்லா காயுமே பிஞ்சாகவும் புதிதாகவும் இருந்தன.

“எங்க கூட சேத்து ரெண்டு வேலையாளு வச்சுருக்கோம். தினம் 300 ரூபா கூலி கொடுத்து சாப்பாடு டீ வாங்கி கொடுத்துருவோம். கோயம்பேட்டில் மூட்டையா எடுக்கும் காய்களை இந்த மரத்தடியில் கொட்டி தரம் பிரிச்சி சுத்தப்படுத்தி வெட்ட வேண்டியதை வெட்டி எடை போட்டு கவர்ல போட்டு கட்டி சுரங்க பாதைக்கு கொண்டு வர்றது இவங்க வேலை. இவர்ங்களோட நாங்களும் ஒரு ஆள் கூடமாட இருப்போம்.”

“காய் வாங்கினது, ஆட்டோ செலவு, ஆளுக்கு கூலி, சாப்பாட்டு செலவு எல்லாம் போக எங்களுக்கு தலைக்கி 500 ரூவா கிடைக்கும். முன்னெல்லாம் வாங்கும் போது எடை போட்டு தருவோம். இப்ப இருக்குற அவசர நெலையில வேலைக்கி போறவங்க யாரும் நின்னு நிதானிச்சு வாங்கிட்டு போக முடியல. அதனாலதான் எதை எடுத்தாலும் பத்து ருவான்னு பாக்கெட்டு போட்டு விக்கிறோம். நம்பிகை வச்சு பிரிச்சு பாக்காம வாங்குறாங்க. துரோகம் செய்யாம நல்ல காயாதான் வாங்கி வச்சுருப்போம்.”

“ஸ்டேசன்ல டூட்டி பாக்குற போலீசு மனசாட்சி உள்ளவரா இருந்தா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம். இங்க வைக்காத அங்க வைக்காதன்னு கொடைச்சல் கொடுத்தா காயோட கடையை தூக்கிக்குனு ஓடனும். மாசம் ஒரு தடவை கேசுக்காக (இலஞ்சம்) பணம் வாங்குவாங்க”.

“நாங்க வாணிபச் செட்டி சாதிய சேந்தவங்க. நானும் அக்காவும் வியாபாரத்துக்கு வந்த இடத்துல பழக்கம் ஏற்பட்டு எஸ்.சி சாதியில கல்யாணம் செஞ்சுகிட்டோம். என் ரெண்டு பொண்ணும் டிகிரி படிச்சுருக்கு. அக்கா பசங்க தினக் கூலி வேலைக்கி போறாங்க. ஆரம்ப காலத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டு, இப்ப எப்படி யாவாரம் செய்றதுன்னு கத்துக்கிட்டோம். ஏதோ சாப்பாட்டுக்கு வழியிருக்கு,” என்றார் தேவகி.

தங்கள் கடையில் வேலை செய்யும் மாரியம்மாவைப் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பற்றி பேசுகிறார் தேவகி.

“மாரி நெய்வேலி பக்கமுங்க. வீட்டுக்காரங்கிட்ட கோச்சுகிட்டு 20 வருசத்துக்கு முன்னாடி மூணு பிள்ளைகளை தூக்கிக்கிட்டு சென்னைக்கி வந்துட்டா. கிண்டி ரயிலடியிலேயே ராப்பகலா இருந்துருக்கா. சின்ன வயசுக்காரி, ஊரும் உலகமும் சும்மா இருக்குமா. சீரழிஞ்சு போச்சு அவ கதை. அந்த வழியா வேலைக்கி போறவங்க பாவப்பட்டு பொம்பள பிள்ளைகள பாண்டிச்சேரியில ஒரு ஆஸ்ரமத்துல சேத்து விட்ருங்காக. இப்ப நல்லா படிச்சுருக்குதுங்க அந்த பிள்ளைங்க.”

“ஆனா மாரிதான் ஒரு மாறியா ஆயிட்டா. பையன் ஒரு பலகார கடையில வேலை செய்யறான். அப்பப்ப வந்து பாத்துட்டு போவான். பெண்ணுகள பாக்கனுன்னா மாரி பாண்டிச்சேரி போவா. இருவது வருசமா இந்த எடந்தான் மாரிக்கி எல்லாம். யார் வேலை சொன்னாலும் கேட்பா. குடுக்குறத வாங்கிப்பா, இங்கனேயே படுத்துக்குவா.”

“என்ன நல்லா படம் பிடிங்க. எம் பொண்ணு நாப்பதாயிரம் சம்பளத்துக்கு கிடைக்கிற வேலைக்கு படிக்கிறா” என்றார் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த மாரி, பரிதாபமாக.

நடந்த கொடுமைக்கும், பிள்ளைகளின் பிரிவுக்கும் மாற்றாக மாரி தஞ்சமடைந்திருப்பது மதுவிடம். ஆரம்பத்தில் சில மிருகங்கள் மாரியை குடிக்க வைத்து அவர்கள் வெறியை தீர்த்து கொண்டன. நாளடைவில் அதுவே அவருக்கு பழக்கமாகிப் போனது.

மனநலம் பாதிப்போடு உள்ள மாரியம்மாள், வேலைக்கான கூலியை கிண்டி இரயிலடி டாஸ்மாக்குக்கே சமர்ப்பணம் செய்கிறார். எங்கள் கண் முன்னே காசை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு பறந்து போனார்.

அதைக் காணச்சகிக்காமல் திரும்பிய போது வழியில் பார்வையற்ற வியாபாரிகளைச் சந்தித்தோம்.

பார்வையற்றோர்
எல்லாம் வித்தா ஒரு பாக்கட்டுக்கு 40 ரூபா கெடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு மூனு பாக்கெட் வித்தா பெரிசு. ஆனா பல நாள் ஒரு பாக்கெட் கூட விக்காது.
“ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் 60 ரூபாய்க்கு எடுப்போம். ஒரு மிட்டாய் 5 ரூபான்னு 100 ரூபாய்க்கி விப்போம். எல்லாம் வித்தா ஒரு பாக்கட்டுக்கு 40 ரூபா கெடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு மூனு பாக்கெட் வித்தா பெரிசு. ஆனா பல நாள் ஒரு பாக்கெட் கூட விக்காது.”

மற்றவர்கள் போல் எதையும் தரம் பிரித்து வியாபாரம் செய்ய முடியாது. தடவிப் பார்த்து எடுத்து கொடுக்கும் பொருளாகத்தான் பார்வையற்றோர் வியாபாரம் செய்கிறார்கள். மின்சார இரயிலில் தட்டு தடுமாறி ஏறி நடைபாதை கடந்து நாள் முழுதும் இடைவிடாமல் ஓடுபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி கூட உத்திரவாதமில்லை என்றால் இவர்களின் வறுமைக்கு விடிவே இல்லை.

“குடும்பத்தை இழந்த பார்வையற்ற 5 பேரு ஒண்ணா வீடு எடுத்து அம்பத்தூர்ல தங்கியிருக்கோம். நாங்க வேற ஸ்டேசன்ல வேலை செய்றோம். இவங்க எங்க பிரண்ட்டு பாத்துட்டு போகலான்னு வந்தோம். இவங்களுக்கு கணவன் குழந்தை எல்லாம் இருக்காங்க. நல்லா பாத்துக்குறாங்க ஆனாலும், இவங்களுக்கும் வருமானம் தேவைப்படுது. எங்களுக்கு இதுல கெடைக்கிற காசு மட்டும் போதாது, ஊனமுற்றோர் உதவி தொகை. சில நல்ல நண்பர்கள் உதவி இது எல்லாம் சேந்துதான் வாழ்க்கை ஓடுது.”

பாதையோர வியாபாரிகள் பெரும்பாலானோர் போன தலைமுறையில் இருந்து தமது வாழ்க்கையை இங்கே தொடர்கின்றவர்கள். தெருவில் நிற்பதற்கே தயக்கப்படும் உள்ளங்களுக்கு தெருவிலேயே விற்று, வாழ்ந்து, ஓடிக் கொண்டிருப்பதன் பரிமாணம் அவ்வளவு லேசில் பிடிபடாது.

விவசாயம் நலிந்து ஊரிலிருந்து விரட்டிய வாழ்க்கை இங்காவது நல்ல பாதையைக் காட்டியிருக்கிறதா என்றால் இல்லை. எளிய மனிதர்களை அரவணைத்து ஆதரிக்க வேண்டிய அரசும், சமூக அமைப்பும் இங்கே இல்லாததால் இவர்கள் இன்னமும் கொடிய காட்டிற்குள் செல்லும் வழி மங்கிய ஒத்தையடிப் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி. வினவு இணையதளம்.

Related Images: