தமிழக தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணம் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்து ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. “நீட்” என்ற அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் “மெரிட்” அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அடுத்து இக்கட்டண உயர்வை அறிவித்துள்ளார்கள். இந்த “நீட்” தேர்வால் அரசு கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க, தனியார் சுயநிதிக் கொள்ளையர்கள் இந்த தேர்வை வைத்து தமது வருமானத்தை மிக அதிகமாய் உயர்த்திவிட்டனர். இப்படி ஒரே கல்லில் இரு மாங்காய்!

சான்றாக கல்வி கொள்ளையன் பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியின் வருடாந்திர கல்விக் கட்டணம் 2014-ல் 9 லட்சமாகவும், 2015-ல் 10 லட்சமாகவும் இருந்தது. இவ்வாண்டு (2016) அது இரண்டு மடங்குக்கும் மேல் உயர்ந்து 21 லட்சமாகியுள்ளது. ராமச்சந்திரா மருத்துவகல்லூரி மற்றும் செட்டிநாடு கல்வி குழுமங்களில் 15 லட்சமாக உயர்ந்துள்ளது. இது போக நூலகக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவு கட்டணம், ஆய்வகக் கட்டணம் என்பது தனி கணக்கு. அதற்கு சில லட்சங்கள் வரை வாங்கிக் கொள்கிறார்கள்.

நீட் தேர்வு மதிப்பெண்களை கொண்டு மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்; அதன் அடிப்படையில் தனியார் பல்கலைகழகங்கள் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது அரசு விதி. இதன் மூலம் முந்தைய ஆண்டுகளைப் போல அதிக பணம் தருபவர்களுக்கே முன்னுரிமை என்ற விதிப்படி கொள்ளை லாபம் அடிப்பதில் சிறிது தடங்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது பணத்தோடு கூடவே “மெரிட்”டையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதை தகர்ப்பது என்ன கம்பசூத்திரமா என்ன? அதன்படி தற்போது ஆண்டுக் கட்டணம் கிட்டத்தட்ட கால் கோடி ரூபாய் என்பதால் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு “மெரிட்” இருந்தாலும் பணமும் வேண்டும். பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது. பணமுள்ளவர்கள் “மெரிட்” இல்லையென்றாலும் விண்ணப்பித்து பெற முடியும். ஏனெனில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் மெரிட் வரிசைப்படி எடுப்பதென்றாலும், பணமுள்ளவர்கள் மட்டுமே அதில் வருவது உறுதி.

ஆகையினால் இது நாள் வரை கருப்பாக வாங்கிய பணத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக வெள்ளையாகவே வாங்குகிறார்கள். அரசும் அதை சட்டபூர்வமாக்கியுள்ளது. அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தனியார் கல்லூரிகள் கல்வி கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று கைவிரிக்கிறார்கள். அதாவது “மெரிட்டை” அரசு தீர்மானக்கும். “அட்மிஷனை” தனியார் முதலாளிகளின் பணம் தீர்மானிக்கும்.

மருத்துவ கல்லூரி சீட் விவாகாரத்தில் பல கோடிகள் புழங்குவது பச்சமுத்து-மதன் விவகாரத்தில் ஆதரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. தன்னை பினாமியாக கொண்டு எஸ்.ஆர்.எம் பச்சமுத்து ஒவ்வொரு சீட்டுக்கும் அடித்த கொள்ளையை காணாமல் போன மதன் தனது கடிதத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். பணத்தை கொடுத்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தற்போது பணத்தை திருப்பி தர பச்சமுத்து தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. அதனாலென்ன? இனி வேந்தர் மூவிஸ் வரும் பெற்றோரிடம் கருப்பாக பணம் வாங்க வேண்டிய அவலநிலை இல்லை. வெள்ளையாகவே எஸ்.ஆர்.எம் கல்லூரி கவுண்டரில் வாங்கிக் கொள்ளலாம். யாரும் பச்சமுத்துவை கொள்ளையன் என்று திட்ட முடியாது.

இப்படியாக இந்த பகற்கொள்ளையை நீட் தேர்வுக்கு பிறகும் தொடர்கிறார்கள் என்பதுதான் இக்கட்டண உயர்வு சொல்லும் செய்தி.

srm fee ssஅதே சமயத்தில் “மெரிட்”டில் வரும் மாணவர்களிடமும் 40-85 லட்சம் வரை நன்கொடையும் வசூலிக்கிறார்கள் கல்வி வியாபாரிகள். மூன்று தனியார் பல்கலைக் கலைகழங்களில் தன் மகளுக்கு சீட் கேட்டுள்ள ஒரு பெற்றோர் “ மெரிட்-ன் படி தான் இருக்கவேண்டும் என்று நான் வாதிட்டேன். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவில் அப்படி குறிப்பிடவில்லை என்று பல்கலைகழக நிர்வாகத்திர் கூறுகின்றனர்” என்கிறார். “மெரிட்” மாணவர்களுக்கென்று தனிக்கட்டணமெல்லாம் எங்குமில்லை. அப்படி “தரம்” பொதுவோ அப்படித்தான் “கட்டணமும்” பொது. இது தெரியாத பெற்றோர்கள் “மெரிட்” இருந்தாலே கட்டணமும் குறைவாக இருக்கும் என்று தவறாக நினைக்கிறார்கள்.

ஆக குறைந்தபட்சமாக ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 20 லட்சம் வரை செலவாகிறது. எனில் அவர் கல்வி முடித்து வெளியே வரும்போது 1 கோடிக்கும் மேல் செலவு செய்தாக வேண்டும். அரசு கல்லூரியில் ஆண்டு கல்வி கட்டணம் 11,500 ரூபாய். அதாவது கிட்டதட்ட அதிகபட்சம் 1 லட்ச ரூபாய் செலவில் மருத்துவ கல்வியை முடித்துவிடமுடியும்.

இடஒதுக்கீடு மூலம் தகுதியும் திறமையும் சிதைக்கப்படுகிறது என்று புலம்பும் கும்பல் இதற்கு வாய்திறப்பதில்லை. தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு குறித்து அங்கலாய்க்கும் நடுத்தரவர்க்கம் பணக்கார இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறது. டைம்ஸ் ஆப்ஃ இந்தியா கட்டுரையில் தனியார் கல்வி கட்டணம் காரணமாக தன் மகனை மருத்துவராகக் முடியாத ஒரு தந்தை அதற்கு இடஒதுக்கீட்டின் மீது பழியை போடுகிறார். ஆக இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பார்வையும், பணத்தால் விலை பேசும் கல்வி அமைப்பும் இங்கே பொருத்தமாக சங்கமத்திருக்கின்றன.

இப்படி ஒரு கோடி செலவழித்து வெளியே வரும் மருத்துவர்கள் தங்கள் போட்ட முதலை எடுக்க முயற்சிப்பார்களா? மருத்துவத்தைத்தான் ஒழுங்காக கற்பார்களா? இல்லை சமூக நலனுக்காகத்தான் சிந்திப்பார்களா? பாடையைச் தூக்கிச் சுமக்கும் ஏழைகளின் பிரச்சினையோ, மொழியோ, யதார்த்தமோ இந்த ஒரு கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு தெரியவே தெரியாது.

doctorகிட்னி திருட்டு முதல் மருந்து நிறுவனங்களின் ஏஜென்டுகளாக மக்களை பரிசோதனை எலியாக்குவது முதல் பல வகைகளில் மக்களை கொள்ளையடித்து தாங்கள் செலவழித்த பணத்தை வசூலிக்க போகிறார்கள். இறுதியில் பிள்ளைகளை மருத்துவப் படிப்பு படிக்கவைக்கவில்லை என்றாலும் உங்களது பணம் இப்படி சுற்று வழியில் முதலாளிகளுக்கு பறிபோகப் போகிறது.

இது யாரோ மருத்துவம் படிப்பவர்களின் பிரச்சனையல்ல. நம் அனைவரின் பிரச்சனை. உயிர்காக்கும் மருத்துவத்தையே இப்படி ஏலம் போட்டு விற்கிறார்கள் என்றால் இந்த அரசும், அமைப்பும் நாசாமாக போகட்டும் என்று புலம்புவது போதுமா? புறப்படுங்கள் – போராட்டத்திற்கு!

-நன்றி. வினவு இணையதளம்.

Related Images: