“மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும்…” அரோல் கொரெலி

மிஷ்கினின் அடுத்த படமான சவரக்கத்திக்கு இசையமைக்க இருப்பவர் இசையமைப்பாளர் அரோல் கொரெலி.
மறைமலைநகரில் பிறந்து வளர்ந்து, பட்டய கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்த அரோல் கொரெலி, இசையின் மீது உள்ள காதலால் ‘பிசாசு’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ‘பிசாசு’ படத்தில் நான்கு ஐந்து பாடல்கள் இல்லாவிட்டாலும், அதில் இடம்பெற்ற  “நதி போகும் கூழாங்கல் பயணம்….” என்னும் பாடலும், பின்னணி இசையும், ரசிகர்களின் நெஞ்சத்தை கரைத்துவிட்டது.  அரோல் கொரெலி விரைவில் வெளியாக இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படம் மூலம் தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார்.  ‘லோன் வுல்ப் புரொடக்ஷன்’ சார்பில் மிஷ்கின் கதையெழுதி, தயாரித்து, ஜி ஆர் ஆதித்யா இயக்கி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
“மிஷ்கின் சாரின் படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக்கூடியதாக இருக்கும்…அவரின் ரசனையை நன்கு அறிந்து, அதேகேற்றார் போல் இசையமைப்பது தான் சவாலான காரியம். ஆனால் என்னால் மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை  உணர முடியும்…
சவரக்கத்தி படத்திற்காக இரண்டு பாடல்களை நான் இசையமைத்து இருக்கிறேன். ஒன்று, “தங்கக்கத்தி, இரும்புக்கத்தி…”, மற்றொன்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் வரிகளில் உதயமான  “அன்னாந்து பார்….” பாடல்.  இதில் இரண்டாவது பாடலுக்கு மிக முக்கியமே,  காட்சிகள் தான்… எனவே நாங்கள் அந்த பாடலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிடவில்லை…
எனக்கு இந்த வாய்ப்பினை அளித்த மிஷ்கின் சாருக்கு இந்த தருணத்தில் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….இயக்குனர் ராம் சாரோடும், இயக்குனர் ஆதித்யாவோடும் இணைந்து பணியாற்றியது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘சவரக்கத்தி’ படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரெலி.