கொடி – விமர்சனம்.

தனுஷூக்கு இது முதல் இரட்டைவேடப் படம். மாஸ் ஹீரோன்னு ஆகி ரொம்ப வருஷம் ஆச்சே அப்புறம் இதுகூட இல்லாமயா?

கருணாஸ் ஒரு உண்மையான கட்சித் தொண்டர். அவருடைய இரட்டைக் குழந்தைகள் தனுஷ் மற்றும் தனுஷ். ஒரு தனுஷ் அப்பாவின் தியாகத்தால் அரசியலுக்கே வருகிறார். இன்னொரு தனுஷ் கல்லூரியில் புரபசராக பாடம் எடுக்கிறார். மீதி நேரங்களில் அனுபமா பரமேஷ்வரனிடம் காதல் பாடம் படிக்கிறார். ‘கொடி’ தனுஷ் எதிர்க்கட்சி பவளக்கொடி த்ரிஷாவை ரகசியமாகக் காதலிக்கிறார். சரிஈஈஈ.. கதை எங்கேப்பா ? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அந்த ஊறுகாய் கதையாகப்பட்டது “பாதரசக் கழிவை அப்படியே நிலத்தில் கலக்கும் ஒரு தொழிற்சாலை. அதனால் சுற்றிலுமுள்ள கிராமங்கள் சுடுகாடாக மாற, கேன்ஸர்கள் வந்து மக்கள் செத்து விழ அதை அரசு மூடுகிறது. ஆனால் கழிவுகளை அகற்றுவது பற்றி அரசு லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடுகிறது. மக்கள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்”.

இந்த கழிவுகளின் ஊழல் பற்றி நிறைய ஆதாரங்களை ஒருவர் வேலை மெனக்கெட்டு சேகரித்து தனுஷ் கையில் ‘இந்தாப் பிடி லட்டு’ என்று தருகிறார். அந்த ஆதாரங்களை வைத்து தனுஷ், த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகுமார் என்று பல அரசியல் தலைகளின் விளையாட்டுகளில் படம் முடியும்போது யாருக்கு என்ன ஆனது என்பதே நமக்கு மறந்துவிடுகிறது.

த்ரிஷாவும், தனுஷ்ஷூக்கும் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லையா பாஸ்? த்ரிஷ்ஷாவுக்கு என்ன ஆச்சு? கிடைத்த வித்தியாசமான ரோலை பிச்சு உதறியிருக்கவேண்டாமா ? எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரங்களை ஓ.கே. செய்திருக்கிறார்கள். காளி வழக்கமான ‘உயிர்’ நண்பன். எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரட்டை வேடக்காட்சிகளில் பரவாயில்லை. எடிட்டருக்கு கடைசி க்ளைமாக்ஸூக்குப் பின் முடிவுக் காட்சிகளை கொடுக்காமலே விட்டுவிட்டார்களா ? அல்லது இயக்குனர் எழுத மறந்துவிட்டாரா ? என்று கேட்கும்படியான க்ளைமாக்ஸ்.

சமூகப் பிரச்சனையை ஊறுகாயாவாவது பேசியாகவேண்டிய நிர்ப்பந்தம் ஸ்டார்களுக்கு ஏற்பட்டிருப்பது காலத்தின் நெருக்கடியைக் காட்டுகிறது. “”பேஸ்புக், வாட்ஸப்ல மெசேஜ் மட்டும் போட்டா பத்தாது. களத்தில் இறங்கிப் போராடனும்னு” தனுஷ்ஷே டயலாக் சொல்றார். ஆனால் நிஜத்தில் மாணவர்களில் 90 சதவீதம் பேர் அரசியலற்ற மொன்னையான கிரிக்கெட் அல்லது ஏதாவது ஒரு விளையாட்டுப் பைத்தியங்களாக மட்டும்தானே இருக்கிறார்கள்?

கொடி. கொசுக்கடி.