’சுந்தர் .சி.யே உனக்கு மான ரோஷம் இருக்கா?’-வெகுண்டெழும் வேல்முருகன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘நந்தினி’ சீரியலின் கதை உரிமை குறித்த குடுமிப்புடி சண்டை மேலும் நாற ஆரம்பித்திருக்கிறது.

கதை தன்னுடையது என்று உரிமை கோரி சுந்தர்.சி.யை கேவலப்படுத்தி வரும் வேல்முருகனிடம் 50 லட்சம் மான நஷ்ட வழக்கு போட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப,’’ கதையைத்திருடுற உனக்கே மானம் இருக்குன்னா பறிகொடுத்த எனக்கு இருக்காதா? நீ ஒரு கோடி கொடு.இல்லைன்னா, உன் பிள்ளைங்கள தாண்டி சத்தியம் பண்ணு’ என்று மல்லுக்கட்ட ஆரம்பித்திருக்கிறார் வேல்முருகன்.

இதுகுறித்துப் பேசிய வேல் முருகன், “என்னிடம் கதையைப் பறித்துக் கொண்டு, அதற்கு பதிலாக ஒன்றுமே தராமல் ஏமாற்றியவர் சுந்தர் சி. உண்மையை வெளியிட்டதற்காக என்னிடம் ரூ 50 லட்சம் கேட்கிறார். சுந்தர் சி பெரிய டைரக்டர். அவர் மதிப்பு வெறும் 50 லட்சம்தானா?

சுந்தர் சார், பொய் சொல்லும் நீங்களே 50 லட்சம் கேட்டால், கதைக்கு சொந்தக்காரனான நான் ஒரு கோடி கேட்கலாம் இல்லையா? உங்களுக்கு உண்மை தெரியும். அதனால்தான் வெறும் 50 லட்சத்தோடு நின்றுவிட்டீர்கள்.

உங்களுக்கும் இரண்டு பிள்ளைகள், அம்மா இருக்கிறார். எனக்கும் இரண்டு பிள்ளைகள், அம்மா உள்ளார். உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், இவர்களை அழைத்துக் கொண்டு பழனி முருகன் கோயிலில் வந்து தலையில் அடித்து செய்யுங்கள். நானும் செய்கிறேன். தயாரா சுந்தர் சார்…?

இப்போதும் சொல்கிறேன்… நந்தினி என் கதை. சுந்தர் சி என்னை ஏமாற்றிவிட்டார்,” என்றார்.