‘தமிழர்களின் பெருமை ராஜா சார்’-விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பாக விஜய் சேதுபதி தயாரிக்க லெனின் பாரதி இயக்கத்தில் இளையராஜா இசையமைத்திருக்கும் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.

ஆன்டனி, காயத்திரி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி ,

“ராஜா சார் பாட்டுக்கு நான் அடிமை. அவரோட பாட்டையோ, பிஜிஎம்மையோ கார்ல போகும் போது கேட்டால் அதை மாத்த வேண்டிய அவசியம் கூட இருக்காது.

தமிழனா நான் பெருமையா சொல்லிக்கிற விஷயம், எங்க கூட ராஜா சார் இருக்காரு, உங்க கூட யார் இருக்கான்னு கேக்கலாம். அந்த அளவுக்குப் பெருமைப்படற மனுஷன் கூட நான் வேலை பார்த்திருக்கேன். எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்.

இந்தப் படம் எளிய மக்களோட ஒரு வாழ்க்கைக் கதை. சிட்டுக் குருவி ஒரு கூடு கட்டற மாதிரியான உணர்வுதான் இந்தப் படம். அந்த சிட்டுக் குருவி கூடு கட்டணும்னு ஆசைப்படுது. ஆனால், சுத்தி நடக்கிற அரசியல், மனுஷங்க, இதெல்லாம் சேர்ந்து அவன் வாழ்க்கையை எப்படி மாத்துது, அவன் என்னவா ஆகுறான்கறதுதான் படம்.

இந்த ஆசை, கனவு, றெக்கை முளைக்கணும், பறக்கணும், இது எல்லா கனவும் இல்லாத மனுஷனே கிடையாது, எல்லாருக்குமே இருக்கிறதுதான். அப்படி இருக்கிற ஒரு சாமானியனோட வாழ்க்கைதான் இந்தப் படம்.

படம் பார்த்த என்னை இந்தப் படம் தொட்டுச்சி, உங்களையும் தொடும்னு நம்பறேன்,” என்றார்.