தரமணி பத்திரிக்கை வெளியீடு

இயக்குனர் ராம் இயக்கத்தில் ,JSK பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் ,யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ‘தரமணி’ படத்தின் மற்றொரு புது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.இப்படத்திற்காக தணிக்கை குழு தந்த  ‘A’ சான்றிதழை மையமாக வைத்தே இயக்குனர்  ராம் இப்படத்தின் விளம்பர யுக்திகளை கையாண்டுவருகிறார். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசரில் சென்சார் செய்யப்பட்ட வசனங்கள் வெளிப்படையாக கேட்கும் படியும்,சென்சார் குழுவால் அனுமதிக்கப்பட்ட வசனங்களை ஊமைப்படுத்தியும் ஒரு புது விதமான,மிகவும் சுவாரஸ்யமான யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குனர் ராம்.
இப்படத்திற்கு தணிக்கை குழு ‘A’சான்றிதழ் தந்துள்ளதற்கு , படத்தில் ஆபாசம்  மற்றும் வன்முறை காட்சிகள் ஏதும் இல்லாவிட்டாலும், கதாநாயகனோ மற்ற ஆண் கதாபாத்திரங்களோ  மது அருந்தும்  படியாகவும் சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களாக  காண்பித்தாளல் அது சரி, அதுவே ஒரு கதாநாயகி குடியோ, சிகரெட் பழக்கமோ இருப்பதாக காண்பித்தால் அப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் தருவதுதான் தணிக்கை குழுவின் போக்கு என்பதை இப்பட தயாரிப்பாளர் சுட்டிக்காட்டவே இந்த டீஸர் என கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு நாள்தோறும் நடக்கும் ஈவ் டீஸிங், அதனை இப்பட கதாநாயகி எவ்வாறு துணிச்சலாக கையாள்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இருக்கும் நவீன கலாச்சாரத்தில் வாழும் ஆண் மற்றும் பெண்களின் வாழ்வை உண்மையான பிரதிபலிப்பாக ‘தரமணி’ இருக்கும் எனவும் இந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘தரமணி’ ரிலீசாகவுள்ளது.