லஷ்மி – குறும்படம் விமர்சனம்.

இணையதளத்தில் வெளியிடப்பட்டு மிகக்குறைந்த நாட்களிலேயே பல லட்சம் ஹிட்டுக்களை தாண்டி பார்க்கப்பட்டு பரபரப்பாய் பேசப்பட்ட படம் இந்த குறும்படம்.

இக்குறும்படத்தின் பிரதான நோக்கம் கவனத்தை ஈர்ப்பது தான். அதில் பெண்ணியம் என்கிற பெயிண்ட் அடித்து சமூக பிரக்ஞை கொண்ட படம் போல், மிக யதார்த்தமான படம் போல் காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு எக்கச்சக்க விமர்சனங்கள் வந்திருக்கின்றன. பெரும்பாலும் தமிழில் வந்த விமர்சனங்கள் ஏதாவது ஒரு வகையில் படத்தின் குறையை சரியாகவே காட்ட முற்பட்டிருக்கின்றன. அந்த வகையில் பெண்ணியம் என்கிற மேல்நாட்டு ஆயுதத்தின் பின் போய் பெண்களே நிற்காமல் சுய தெளிவுடன் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

முதலில் கதை. லஷ்மி என்கிற நடுத்தர வர்க்கத்துப் பெண் ஒரு லேத்தில் வேலையாளாக பணிபுரிகிறாள். இயந்திர மயமான வாழ்க்கை. ஒரு பையன் 3வது 4வது படிக்கும் வயதில். இயந்திரமயமான கணவன். அவனும் ஏதோ ஒரு கம்பெனியில் இயந்திரமாக வேலை பார்ப்பவன். இவர்கள் வாழ்க்கையில் செக்ஸ் கூட இயந்திரத்தனமாக ஆகிவிடுகிறது.

இந்தச் சூழலில் ஒரு நாள் கணவனுக்கு வேறொரு பெண்ணிடமிருந்து அழைப்பு வருகிறது. அவனிடம் அது பற்றி லஷ்மி கேட்கும் போது அவன் திமிராக பேசுகிறான். ஏற்கனவே போரடிக்கும் வாழ்க்கையில் இப்போது லஷ்மிக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிவிடுகிறது.

இந்த சூழலில் அவளது அன்றாட ரயில் பயணத்தில் அறிமுகமாகும் ஒரு சிந்தனையாளன், வழிப்போக்கன், தேடல்கள் உள்ள ஒரு சிற்பி அறிமுகமாகிறான். பாரதியார வரிகள் பாடுகிறான். பின்பு ஒரு நாளில் அவனும் அவளும் உறவு கொண்டுவிடும்படியான சூழல் ஏற்படுகிறது.

மறுநாளில் இருந்து அவள் ரயில் பயணத்தை தவிர்க்கிறாள். வாழ்க்கை எந்த மாற்றமுமின்றி பழையபடி போராக நகர ஆரம்பிக்கிறது.

பல நாட்களில் வெறும் சிரிப்பு, புன்முறுவல் தாண்டி அறிமுகமில்லாத ஒரு நபருடன் லஷ்மி ஒரே நாள் இரவில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவு துணிவைப் பெறுகிறாள். கணவன் இன்னொரு பெண்ணுடன் படுக்கிறான். அவனைப் பழிவாங்க நான் இன்னொருவனுடன் படுத்தேன் என்கிற ரீதியில் படம் இருந்திருந்தால் கூட கதையோட்டத்தில் ஒரு பொருள் இருந்திருக்கும்.

வாழ்க்கை போரடிக்கிறது என்பதற்காக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது என்பதற்காக இதை ஒரு பெண் செய்வாளா ? இருக்கலாம்.

இதை பல லட்சம் பேர் விரைந்து பத்து நாட்களில் பார்த்தார்கள் என்றால் அதில் சொல்லப்பட்ட புரட்சிகர கருத்துக்களால் அல்ல. படம் முழுதும் பல முறை காட்டப்படும் உடலுறவுக் காட்சி போன்ற அதிர்ச்சியூட்டும் விஷயங்களால் தான். இணையத்தில் சென்சார் கிடையாது இல்லையா. தவிர, நான் தப்பு செய்கிறேன். இதிலென்ன தப்பு என்று தைரியமாகப் பேசும் பெண்ணின் போக்கு பல ஆண்களின், சில பெண்களின் சிந்தனைப் போக்குக்கு உகந்ததாய் இருப்பதாலும் தான்.

பெண்ணுக்கு செக்ஸ் என்பது ஆணைப் போல் வெறும் உடல் ரீதியான விஷயம் அல்ல. அது 80 சதவீதம் மன ரீதியானது. இதைப் பற்றி இந்தப் படம் யோசிக்கவே இல்லை. பாரதியார் பாவம். அவர் கவிதைகளை வேறு போட்டு அவஸ்தைப் படுத்துகிறார்கள்.

இந்த லட்சுமி கேரக்டர் நன்றாக நீட்டாக அயர்ன் செய்யப்பட்ட புடவை உடுத்தி, திருத்தி பொட்டு வைத்து, மடிப்பு கலையாமல் வேலை செய்து வரும் கொஞ்சம் சிவப்பான, லட்சணமான பெண். மாறாக லட்சுமி, அழுக்கான, சாயம் தோய்ந்த புடவையணிந்த, எண்ணெய் முகத்தில் வடிந்தபடி இரவில் வீடு திரும்பும் பெண்ணாக இருந்திருந்தால்….

அப்படி ஒரு அழுக்குப் பெண்ணாக லட்சுமி கேரக்டர் இருந்திருந்தால் இந்தக் கேள்வி எழவே வாய்ப்பில்லை. ஏனென்றால் எந்த சிந்தனைச் சிற்பியும் அழுக்குப் பெண்ணை பேசி வீழ்த்துவதில் விருப்பம் உள்ளவனாக இருக்கமாட்டான். ஸோ… அழுக்கான பெண்ணாக இல்லாமல் டீஸெண்ட்டாக உடை உடுத்தும், அழகை பேணிப் பராமரிக்கும் மிடில் கிளாஸ் குணங்கள் கொண்ட பெண்ணோடு லோயர் மிடில் கிளாஸ் லட்சுமியை  மிக்ஸ் செய்கிறார் இயக்குனர்.

மிடில் கிளாஸ் பெண்கள், ஆண்கள் தங்கள் மனசாட்சியை விட்டுத் தள்ளி, கலாச்சாரம் போன்ற விஷயங்களை விட்டு விடவேண்டும். ஏனென்றால் காலாச்சாரம் போன்ற விஷயங்களை, மனசாட்சியை, இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பது, இன்றளவும் மிடில் கிளாஸ் வர்க்கமே. அதை உடைக்கும் போதுதான் கலாச்சாரத்தை உடைக்க முடியும்.

இது தான் புரட்சியான கருத்துக்கள், பெண்ணியம், முற்போக்கு என்கிற பல்வேறு போர்வைகளில் மேற்கத்திய உலகம் மற்ற உலகங்களின் கலாச்சாரங்களின் மேல் தொடுக்கும் கலாச்சார யுத்தத்தின் உள்ளார்ந்த அம்சம்.

இப்படம் நம் கலாச்சாரத்தின் மேல் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்த எண்ணி தோற்றுப் போய் நிற்கிறது. ஆண் தவறு செய்கிறான் என்பதற்காக அவனை தூக்கி எறியவும் அவனை விட்டு விட்டு நேர்கொண்ட நடையுடன் சமூகத்தில் நடை போடவும் பெண் செய்வாள் என்பது தான் பாரதி கண்ட புதுமைப் பெண்.

அதை விட்டு விட்டு போரடிக்கிறது என்பதற்காக இன்னொருவனுடன் படுத்துவிட்டு, மீண்டும் இந்த இயந்திர வாழ்க்கைக்குள் கணவனைப் போலவே அவளும் கள்ளத்தனமாகத் தான் வாழ விரும்புவாள் என்பது மிக மிகச் சாதாராணமான மூன்றாம் தர ஆபாசப் படத்தில் வரும் கதைகளில் ஒன்று தான்.

இப்படி ஏதாவது ஒரு புரட்சியின் கீழ் குடும்பம் என்கிற முதலாளித்துவ அமைப்பின் கொஞ்ச நஞ்ச மிச்ச விழுமியங்களையும் சிதைக்க வேண்டும் என்று மேற்குலகம் தொடர்ந்து மற்ற சமூகங்களின் கலாச்சாரங்களை அடித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரமும் குடும்பம் என்கிற வட்டத்தை கணவன்-மனைவி என்கிற இருவராக மட்டுமே சுருக்கிக் கொண்ட அமைப்பாக மாறிவருகிறது.

இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இப்படத்துக்கு பலரும் சரியான எதிர்வினை தந்திருக்கிறார்கள். மேலை நாட்டு சிந்தனையும், முற்போக்கு கலாச்சாரங்களும் நம் கலாச்சாரத்தை அசைத்துப் பார்த்தாலும் அதையும் தாண்டி மக்களின் நேர் கொண்ட சிந்தனை புதிய கலாச்சாரத்தை நோக்கி தெளிவான பார்வையோடு நம்மை அழைத்துச் செல்வதை, இது போன்ற எத்தனை கமல் பாணியிலான குழப்பப் படங்கள் வந்து குழப்பினாலும், தடுத்து விட முடியாது.