1. சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்ற அரதப்பழசான கோட்பாட்டை நம்பாதீர்கள். எம்ஜியார் விஷயத்தில் அது ஏற்கனவே நம்மை ஏமாற்றியிருக்கிறது.

2. ரஜினியின் திரைப்படக் கதாபாத்திரங்களைக் கொண்டு மட்டும் அவரை விளங்கிக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘திரைக்கதை’ போல திரைக்கு வெளியேயும் ஒரு கதை இருப்பதைக் கவனியுங்கள்.

3. பிம்பம், சிறை என்று சொல்லப்படும் விளக்கங்களைக் கண்ணை மூடிக்கொண்டு மறுத்து விடுங்கள். அவை பற்றி நல்ல விதமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

4. ‘பாஜகவின் சதித்திட்டம்’ என்பது போன்ற சதிக்கதைகளை மதிக்காதீர்கள்.அவை உங்களது பார்வையை எந்த வகையிலும் மாற்றப் போவது இல்லை.

5. தமிழக வெகுஜனத்திற்கும் அறிவாளிகளுக்கும் பெருத்த இடைவெளி இருப்பதை (எழுத்துக்கும் பேச்சுக்கும் உள்ளதைப் போல) உணர்ந்து கொள்ளுங்கள். அதனால், சமூக ஊடகங்களில் எழுதப்படுவதை வெகுஜனக் குரலாக நினைத்து ஏமாறாதீர்கள்.

6. எந்திரன், 2.0 – கபாலி, காலா என்றொரு முரண் எழுப்பப்படுவதை உணருங்கள். அந்த முரணை சமனப்படுத்துகிற ரஜினிகாந்தின் ஹா..ஹா… சிரிப்பை கொஞ்சம் பொறுமையாகக் கவனியுங்கள்.

7. திராவிடம், கம்யுனிசம், தலித்தியத்திற்கு எதிரானது ரஜினியின் ஆன்மீகம் என்று சொல்லப்படுவதை உடனடியாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவரது ஆன்மீகம், இந்த மூன்றையும் கபளீகரம் செய்யக் கூடியதா என்பதில் கவனமாக இருங்கள்.

8. திராவிடத்தின் பாதுகாவலனாக திமுகவையும், கம்யுனிசத்தின் பாதுகாவலாக சிபிஐ – எம் கட்சிகளையும், தலித்தியத்திற்கு விசிக என்றும் நினைத்து ஏமாந்து போகாதீர்கள். ரஜினியின் ஆன்மீகம் பாஜக சார்பானது என்று சொல்வதைப் போலவே இதுவும் ஒரு கற்பனை.

முகநூலில் தர்மராஜ் தம்புராஜ் Dharmaraj Thamburaj

Related Images: