சுராங்கனி சுராங்கனி மனோகரன் காலமானார்

ஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி  .A.E . மனோகரன்  காலமானார்.

பைலாப்பாடல்கள் என்ற பெயரில் சிங்களத்தில் பிரபலமாக இருந்த பொப்பிசைத் துள்ளிசைப் பாடல்களை 70 களில் தமிழுக்குக் கொண்டு வந்து ஈழத்தை இசையால் உற்சாகமாக ஆடவைத்த பெருமைக் குரியவர் A.E மனோகரன் .

70 களின் ஆரம்பத்தில் சிங்களத்தில் பிரபலமாக இருந்த “சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகே மாலு கெனவா …” என்ற பாடலுடன் பொது மேடைகளில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்த இவர் பாடும் வாய்ப்புத் தேடி இந்தியாவுக்குக் காவிச் சென்ற இதே பாடல் தான் பின்னாளில் ‘அவர் எனக்கே சொந்தம்’ என்ற தென்னிந்தியத் திரைப்படத்தில் மலேஷியா வாசுதேவன் & ரேணுகா குரல்களில் சிங்களமும் தமிழும் கலந்து சக்கை போடு போட்ட சுராங்கனி… பாடல்

சிங்களத்தில் உருவான இந்த சுராங்கனி பாடலை தமிழ், சிங்களம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி , மலே, போர்த்துக்கீசு ஆகிய மொழிகளுக்கு தன் குரலில் கொண்டு சென்ற இவரைத் இலங்கையில் வேறு எவரும் ,எந்தவொரு பாடலையும் உலக அளவில் கொண்டு சென்றதாக என் அறிவுக்கு எட்டியவரை தகவல்கள் இல்லை.

தொடர்ந்து இலங்கையின் இயற்கை அழகினை வர்ணித்து
இலங்கையென்பது நம் தாய்த்திரு நாடு…. ,

நம் வாழ்வியல் முறைகளை நகைச்சுவையோடும் கலந்து ஒலித்த,

பட்டு மாமியே உன் சிட்டுமகளெங்கே …

போன்ற பாடல்களும் இலங்கையின் பண்டிகைக் கால மேடைகளையும் இலங்கையின் பட்டி தொட்டி மிச்சமில்லாத எல்லா மூலை முடுக்குகளையும் ஒரே நேரத்தில் ஆடவைத்தது.
.
இவரது குரல் ஒரு காலத்தில் ஈழத்தையும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையையும் கவர்ந்திழுத்துத் தனது மயக்கத்துக்குள் ஆட்டி வைத்திருந்தது.
.
இலங்கைத் திரைப்பட வரலாற்றில் தனக்கென நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்ட ‘வாடைக்காற்று ‘திரைப்பட நாயகனான இவர் இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் மிகப்பிரபலமானதும் பிரமாண்டமாகத் தயாரிக்கப் பட்டதுமான ‘பைலட் பிரேம் நாத்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்ட இவர் சிலோன் மனோகர் என்ற அடைமொழிப் பெயருடன் இன்றை வரை தமிழ், மலையாளமென கிட்டத்தட்ட 75 திரைப்படங்கள் வரையில் நடித்திருகிறார் . இவரது வித்தியாசமான முடியலங்காரத்துக்குப பொருத்தமாக கொள்ளைக்காரன், கடத்தற்காரன், வில்லன் பாத்திரங்களிலேயே இவர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டார்.

பொப்பிசைச் சக்கரவர்த்திக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.

முகநூலில்; ஈழவாணி

Ezha Vaani