கெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.

சுமார் ஆறு மாதங்கள் முன்புகூட ”கெட்டவார்த்தை” எனும் வரையறைக்குள் வரும் வார்த்தைகள் குறித்து நான் அலட்டிக்கொண்டவன் அல்ல. அவற்றை பேசுவதில்லையே தவிர அதனை கேட்பதிலோ அல்லது படிப்பதிலோ எந்த அசூயையும் உணர்ந்ததில்லை. அது ஒருவரது தனிப்பட்ட தெரிவு என்பதாகவே புரிதல்  இருந்தது. சமூக வலைதள காலக்கோட்டில் எதிர்பாராத மனிதர்களின் கெட்டவார்த்தைப் பிரயோகங்களை பல சமயங்களில் பார்க்க நேர்கிறது. இந்த பதிவு அவை குறித்தானதும் அல்ல. கெட்டவார்த்தைகள் பள்ளி மாணவர்கள் இடையே உண்டாக்கும் மோசமான விளைவுகள் பற்றி விவாதிக்கவே இப்பதிவு.

மாணவர்கள் மத்தியில் உள்ள பெரும் பிளவுக்கு கெட்டவார்த்தைகளே முக்கியமான காரணமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கோபமூட்டுகிற அல்லது அதிர்ச்சியூட்டுகிற செய்கையாக சிறார்களின் கெட்டவார்த்தைப் பயன்பாடு இருக்கிறது. பிறகு அம்மாணவர்கள் அந்த அடையாளத்தோடுதான் அடுத்த வகுப்புக்களில் நுழைகிறார்கள். பதின்ம வயதின் துவக்கத்தில் இருக்கும் மாணவர்கள் அனேகர் தன்னியல்பாகவே குழுக்களாக இயங்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் குழுவை தீர்மானிக்கும் சக்தியாக கெட்ட வார்த்தைகள் இருகின்றன.

ஆறாம், ஏழாம் வகுப்பில் மாணவர்கள் குழுக்களாக செயல்படும் பொழுது கெட்ட வார்த்தை பேசும் குழந்தைகள் ஏனைய மாணவர்களால் புறந்தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தன்னை ஒத்த மாணவர்களோடு இணையும் வாய்ப்பு மட்டுமே மிஞ்சும். இந்த இடத்தில் இருந்தே அவர்கள் எதிர் மனநிலைக்கு ஆளாகிறார்கள். பதின்ம வயதில்தான் வகுப்புக்கு இடையூறு செய்யும் குழுக்கள் உருவாகின்றன (ஆரம்ப வகுப்புக்களில் குழுவாக இடையூறு செய்யும் மாணவர்கள் இருப்பதில்லை). உளவியலாளர்கள் பதின்ம வயதை குழு வயது என குறிப்பிடுகிறார்கள் (குரூப் ஏஜ்).

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் உடனான உரையாடல்களில் கெட்ட வார்த்தை பேசும் மாணவர்கள் மீதான அழுத்தமான வெறுப்பை அவதானிக்க முடிகிறது. ஒருவன் நல்லவனா கெட்டவனா என தீர்மானிப்பதற்கான பிரதான காரணியாக இந்த இயல்பு இருக்கிறது. இத்தகைய மாணவர்களை பள்ளியில் வைத்திருக்கக்கூடது என்பதாகவே எதிர்தரப்பு மாணவர்கள் கருதுகிறார்கள். இழிவானவர்கள் மற்றும் ஒதுக்கப்படவேண்டியவர்கள் யார் என்பதற்கான எளிய அளவீடாக நாம் கெட்ட வார்த்தை பேசுவதையே நிர்ணயித்திருக்கிறோம் (அப்படித்தான் சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்). ஆசிரியர்களும் இத்தகைய மாணவர்கள் மீது கரிசனம் கொள்வதில்லை. உண்மையில் அது ஆசிரியருக்கு இருக்கும் ஒரு நெருக்கடி. மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் குறைசொல்வார்கள், தன் மாணவர்கள் அப்படி பேசினால் தன் பெயர் கெட்டுப்போகும் என்பதால் ஆசிரியர்களும் இத்தகைய மாணவர்களை முரட்டுத்தனமாகவே அணுகுகிறார்கள். பின்னாளில் இந்த பிரிவு மாணவர்கள் சமாளிக்க இயலாத அளவுக்கு குறும்பு செய்பவர்களாக மாறுவதற்கான வாய்ப்பு பரிபூரணமாக இருக்கிறது.

இந்த வகை மாணவர்கள் இடையூறான நடத்தையுள்ளவர்களாக மாறக்கூடும் என்பது மட்டும்தான் பிரச்சினையா என்றால் இல்லை.

அடிக்கடி தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட சிறார்களோடு பேசும்போது அவர்கள் தங்கள் மீதோ அல்லது சூழல் மீதோ வெறுப்பு கொண்டவர்களாக இருப்பதை அறிய முடிகிறது (கோவம் வந்தா கெட்ட வார்த்தை பேசுவேன், மத்தபடி நான் நல்ல பையன் சார்.) தங்கள் வாழும் ஏரியா மோசமாக இருப்பதால்தான் தான் இப்படி இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். தங்களை மற்றவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை என்பதும் ஆசிரியர்கள் நம்புவதில்லை என்பதும் அவர்களுக்கு பெரும் அவநம்பிக்கையை கொடுக்கிறது.  யாருமே ஏற்காதபோது நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் அவர்களுக்கு மேலோங்குகிறது. அல்லது நாம் எதற்கும் லாயக்கற்றவர்கள் எனும் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. (இரண்டு வகை மாணவர்களையும் சந்தித்திருக்கிறேன்.)

பிரச்சினை இடயூறான மற்றும் முரட்டுத்தனமான நடத்தை மட்டுமல்ல, வேறொருபுறம் பகுதியளவுக்கான மாணவர்களை இந்த சுபாவம் பெரும் குற்ற உணர்வுக்கு இட்டுச்செல்கிறது. வகுப்பு வாய்ச்சண்டை ஒன்றின்போது சக மாணவரை மோசமான வார்த்தையால் திட்டிவிட்டார் எங்கள் மாணவர் ஒருவர். சிறப்பாக படிக்கக்கூடியவர், அமைதியான இயல்புடையவர் என்பதால் ஆசிரியர்கள் அவரது இந்த எதிர்வினையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். பிறகு அவரிடம் பேசிய எல்லோரும் நான் உன்னிடம் இப்படியான நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றே பேசியதால், அவர் தன் மீதான சுயமதிப்பை இழந்துவிட்டார். இதுவரைக்கு பெற்ற நற்பெயருக்கு நான் தகுதியுடையவன் அல்ல என்றும் தான் கொஞ்சமும் விரும்பாத இந்த செயலுக்கு தன் அப்பாவின் நடத்தையே காரணம் என்றும் சொன்னார். (அவர் அப்பா அதீத குடிப்பழக்கம் உள்ளவர், குடித்தால் மிக மோசமாக பேசுபவர்). அச்சம்பவத்துக்குப் பிறகு அவர் சில மாதங்கள் தன் நண்பர்களுடன்கூட இயல்பாக பழகவில்லை. அவர் ஒரே ஒரு முறை பயன்படுத்திய வார்த்தை அவரது நடத்தை முதல் சுயமதிப்பீடுவரை பலவற்றை பாதித்தது.

அப்பாவின் குடிப்பழக்கம் பற்றி கவலைப்படும் பிள்ளைகளின் முதல் பயம் அல்லது குற்றச்சாட்டு அவர் மோசமாக பேசுகிறார் என்பதுதான் (முரண்பாடாக அந்த சிறார்களில் பெரும்பாலானவர்கள் கெட்டவார்த்தை பேசுகிறார்கள்). ஒரு சிறுமி தன் அப்பா பள்ளிக்கு வந்துவிடுவாரோ என்று பயப்படுகிறார். வந்து ஏதேனும் மோசமாக பேசிவிட்டால் தனக்கு மரியாதை போய்விடும் என்பது அவர் எண்ணம். இன்னொரு மாணவியின் அம்மா மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுகிறார். ஆகவே அந்த தாயால் தன் மகளை சரிவர கவனிக்க முடியவில்லை. அந்த மாணவியிடம் அவர் சந்திக்கும் சிரமங்களைக் கேட்டபோது முதலில் குறிப்பிட்டது “அம்மா நெறைய கெட்டவார்த்தை பேசுறாங்க, அது எனக்கு புடிக்கல” என்பதுதான். குறிப்பாக கெட்ட வார்த்தை பேசும் பழக்கம் உள்ள மாணவிகள் அப்பழக்கம் உள்ள மாணவர்களைவிட அதிகம் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இது ஏதோ அரசுப் பள்ளிகள் மற்றும் கீழ்நடுத்தரவர்க தனியார் பள்ளிகளின் நிலை என கருதவேண்டாம். லட்சங்களை சாப்பிடும் எலைட் பள்ளிகளிளில்கூட இதுதான் நிலை. ஆகவே இது ஒரு பிரிவு மக்களின் பிரச்சினை என நம்பி ஒதுங்கும் வாய்ப்பு யாருக்கும் இல்லை.

சரி, இதற்கு என்ன செய்யலாம்? (பெற்றோர்கள்)

குழந்தைகள் முன்னால் மோசமான வார்த்தைகள் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். மோசமான வார்த்தைகள் அதிகம் புழங்கும் இடங்களில் வசிக்கின்ற, ஆனால் கெட்டவார்த்தை பேசாத பெற்றோர்களின் குழந்தைகள் அனேகமாக மோசமாக பேசுவதில்லை.

கெட்ட வார்த்தை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் வளரும் பள்ளிச்சூழல் அதனை பெரும் குற்றமாக பார்க்கிறது என்பதை மனதில் வையுங்கள்.

நீங்கள் எத்தகைய சூழலில் எல்லாம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கண்டுபிடியுங்கள். அத்தகைய சூழலை இன்னும் சரியாக கையாள பழகுங்கள். அல்லது அதுமாதிரியான சூழலில் குழந்தைகள் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக மன உளைச்சலில் மோசமாக பேசுபவர்கள் தம் மன உளைச்சலை சரிசெய்யும் வழிகளை தேடலாம். வீட்டு செலவீனங்களைப் பற்றி பேசுகையில் எல்லாம் சண்டை வந்தால் அந்த விவாதங்களை குழந்தைகள் இல்லாத நேரத்துக்கு ஒத்தி வைக்கலாம்.

தவறிப்போய் பேசிவிட்டால் யாரிடம் பேசினீர்களோ அவர்களிடமும் அங்கிருக்கும் குழந்தைகளிடமும் மன்னிப்பு கேளுங்கள். அதன் மூலம் அவ்வார்த்தைகளை பேசுவது தவறு என அவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

அருகில் உள்ள யாரேனும் மோசமாக பேசினால் பதறி பிள்ளைகளை விரட்டாதீர்கள். மோசமான வார்த்தைகளின் பிரச்சினைகள் குறித்து விளக்கும் வாய்ப்பாக அதனை பயன்படுத்துங்கள். அது வேடிக்கை பார்ப்பவரைக்கூட காயப்படுத்தும் என விளக்குங்கள்.

குடிப்பழக்கத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களின் குழந்தைகள் எல்லோரும் தங்கள் அப்பா குடித்தால் கெட்டவார்த்தை பேசுவதாக சொல்கிறார்கள் (எல்லா வர்கத்தினரும்).

குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசிவிட்டால் அதிர்ச்சியடைந்து அடித்து தண்டிக்காதீர்கள். முக்கியமாக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என அச்சமடையாதீர்கள்.

என்ன வகையான உணர்வை வெளிப்படுத்த அவர்கள் அந்த வார்த்தைகளை பேசுகிறார்கள் என்பதை கண்டறியுங்கள். அந்த உணர்வை ஏற்றுக்கொள்ளுங்கள். அதனை கெட்ட வார்த்தை சொல்லாமலே வெளிப்படுத்தலாம் என்பதை கற்றுக்கொடுங்கள்.

இது ஆசிரியர்களுக்கு,

கெட்ட வார்த்தை பேசும் குழந்தைகள் குற்றவாளிகள் அல்ல என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவை  எங்கோ எப்போதோ கற்றுக்கொண்ட வார்த்தைகள், அவர்களுக்கு அது வெறும் வார்த்தைகளே.

எது கெட்ட வார்த்தை என்பதை 100% சரியாக வரையறுப்பது கடினம். மேலும் அதன் மீதான அசூயை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தாயைப் பழிக்கும் வார்த்தையை தன் மகனைத் திட்ட பயன்படுத்தும் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆகவே அந்த மாணவரின் சூழலை பரிசீலிக்க முயலுங்கள்.

அப்படி பேசும் மாணவர்களை தனிமைப்படுத்தாதீர்கள் (சில ஆசிரியர்கள் மற்ற மாணவர்களை ஒதுங்கியிருக்கும்படி சொல்கிறர்கள்). மாறாக அதனை பக்குவமாக அறிவுறுத்தும்படிக்கு மற்ற மாணவர்களை தயார்படுத்துங்கள்.

அவ்வார்த்தைகள் தன்னியல்பாக வருகிறதா அல்லது வேறு நோக்கங்களுக்காக வருகிறதா என்பதை பாருங்கள். சில சிறார்கள் தங்களை பெரிய ஆளாக காட்ட இவ்வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். தன்னியல்பாக பேசினால், பெற்றோரை அழைத்து பேசுங்கள். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பேசினால், அவர்கள் தங்களை வெளிபடுத்திக்கொள்ளும் மாற்று வாய்ப்புக்களை உருவாக்கித்தர முயலுங்கள்.

ஆசிரியர்களால் சிறார்கள் கெட்டவார்த்தை பேசும் பழக்கத்தை சிறப்பான வகையில் கட்டுப்படுத்த இயலும். அக்கறை – தொடர் கண்காணிப்பு – கனிவான சுட்டிக்காட்டல் – அங்கீகாரம், இந்த வரிசையை பின்பற்றினால் அபாரமான மாற்றங்களை காண இயலும் (நாங்கள் செய்திருக்கிறோம்).

கெட்ட வார்த்தை பேசுவது என்பதாலேயே ஒருவன் கெட்டவன் என்றாகிவிடாது. அது தவறென்றே நீங்கள் கருதினாலும் அதனை ”ஒரு தவறு” என்று மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். அவர்களது ஏனைய திறன்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுங்கள். முக்கியமாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மற்ற மணவர்களுக்கு காட்டும் மனநிலையுடன் அனுக முயலுங்கள்.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன், சிறார்கள் கெட்ட வார்த்தை பேசுவது என்பது ஒரு விளைவு, ஒரு அறிகுறி அல்லது ஏதோ ஒரு தேவையின் வெளிப்பாடு. ஆகவே அதனை குற்றமாக கருத வேண்டாம். அப்படியே இருந்தாலும் எந்த குற்றத்துக்கும் நாம் பாதிக்கப்பட்டவனை தண்டிக்கவோ பொறுப்பாக்கவோ கூடாது.