இன்று மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு எதுவுமில்லை. ஆனால் இது என்னுடைய படம் என்கிற உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது..காரணம் லெனின் பாரதியும் தேனி ஈஸ்வரும்… இருவரும் எப்போதும் என்னுடனிருக்கும் நண்பர்கள். இந்தப் படம் பேசும் வாழ்க்கை எனக்கு நெருக்கமானது. இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கும் நிலப்பரப்பு நான் சுற்றியலைந்தது. இந்தத் திரைப்படத்தில் வரும் முக்கிய நிகழ்வொன்றுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பது என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம். இதில் கங்காணியாக நடித்திருக்கும் அந்தோணி வாத்தியார் என் அண்ணனுக்கு நிகரானவர்.
பத்திரிகையாளர் திரையிடலில் படம் பார்த்த பத்திரிகை தோழர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வழக்கமான சினிமா அல்ல. ஒரு நிலப்பரப்பின் வாழ்வியலை, அதன் அத்தனை அழகுகளோடும், இயல்போடும் காட்சிப் படுத்தி இருக்கிற ஒரு கலைப்படைப்பு. இதில் நடித்திருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் அசலானவர்கள். ஒப்பனையற்றவர்கள், உண்மையானவர்கள் இந்தப் படத்தைப் போலவே…படைத்திருக்கிற விதத்தில் ஒரு புதிய பாதையைக் காட்டியிருக்கிறது இந்தப் படம்.
இந்த ஆண்டு என் நண்பன் ஈஸ்வரின் ஆண்டு. தரமணி, நாச்சியார், இப்போது மேற்குத் தொடர்ச்சி மலை அடுத்து பேரன்பு, என்று கலக்கிக் கொண்டிருக்கும் ஈஸ்வரை பாராட்டுவது என்னையே நான் பாராட்டிக் கொள்வது போலத்தான்.
இந்தத் திரைப்படம் ஒரு கருவாகத் தோன்றி இன்று வெளியாகும் இந்த தினம் வரை லெனின் பட்ட பாடுகளை நானறிவேன்.ஈடுபாடும் ,உழைப்பும்,தன் படைப்பின் மீதான நம்பிக்கையும்,சமரசமற்ற நேர்மையும் கொண்ட லெனினை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்துக்குக் கிடைக்கும் அத்தனை விருதுகளும் பாராட்டும் லெனின் பாரதியின் வைராக்கியத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றி. லெனின் பாரதியின் தந்தை ரங்கசாமி இளையராஜாவின் பள்ளித் தோழர். தன் சினிமாக் கனவு கைகூடாமலேயே காலமானவர். மேற்குத்தொடர்ச்சி மலையின் கதாநாயகன் பெயர் ரங்கசாமி.
வாழ்த்துகள் ஈஸ், வாழ்த்துகள் லெனின். மேற்குத் தொடர்ச்சி மலையின் பிள்ளைகள்தானே நாம் 

முகநூலில் ; பாஸ்கர் சக்தி 

Bhaskar Sakthi 

Related Images: