kuttimma-short-film-review

ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை ஏ.வி.எம் ப்ரிவ்யூ தியேட்டர் ஒன்றில் பேஸ்புக் வலைத்தளத்தில் குறும்பட இயக்கம் ஒன்று இணையதளம் மூலம் விளம்பரம் செய்து, டிக்கெட்டுகள் முன்கூட்டியே விநியோகம் செய்து, நிறைய பார்வையாளர்கள் வந்து காத்திருக்க மூன்று நான்கு ஷோக்கள் காட்டப்பட்டது 40

நிமிடங்களே ஓடும் இந்தக் குட்டீம்மா.

சிறப்பு விருந்தினர்களாக விஜய் சேதுபதி, சிபிராஜ், முருகன் இன்னும் பல குறும்படங்கள் மூலம் திரையுலகுக்குள் பிரவேசம் செய்த நடிக, நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் வந்திருந்தனர். முந்தைய காட்சியை ஏ.ஆர்.முருகதாஸ் வந்து பார்த்திருந்தார். இவ்வாறாக நிறைய பரபரப்புக்களுடன் திரையிடப்பட்டது இந்தக் குறும்படம்.  

ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமிடையேயான பந்தத்தைப் பற்றியது கதை. நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட டிராமாவாக நகரும் இப்படம் இறுதியில் மனதைத் தொடுகிறது. வடக்கே நோய்டாவில் ஒரு கம்பெனியில் நல்ல வேலை பார்க்கும் ஹீரோ தனது தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு இரயிலில் வருகிறான். வழக்கம் போல உடன் பயணிக்கும் ஒரு அழகிய இளம்பெண்ணுடன் பேச்சுக் கொடுத்து பேச ஆரம்பிப்பவன், தன்னுடைய முழு வாழ்க்கைக் கதையையும் அவளிடம் பேசிவிடுகிறான். அதில் முக்கியமாக அவன் கடுப்பாய் குறிப்பிடுவது ‘லூசுக் கிழவி’ குட்டீம்மா. குட்டீம்மா அவனது தந்தை வழிப் பாட்டி. லூசுக் கிழவி என்று அவன் சொல்வதற்கேற்பவே குறும்புகள் பல செய்யும் கிழவியாக அவர் இருக்கிறார். அவனை வறுத்தெடுக்கிறார்.

இரயிலை விட்டு இறங்கியதும் அவனை வரவேற்பவரும் அதே குட்டீம்மாவே. திருமணத்தன்று ஒரு நாளைக்குள் குட்டீம்மா பாட்டி பண்ணும் லூட்டிகளும் ஹீரோ அகப்பட்டுக் கொண்டு முழிப்பதுமாகச் செல்லும் அந்த நாள் தான் பாட்டியின் மீது பேரன் கொண்டிருக்கும் அன்பு எவ்வளவு ஆழமானது என்பதை உணர்த்தும் நாளாகவும் அமைந்துவிடுகிறது..

படத்தின் திரைக்கதை, படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி சொன்னது போலவே பாசிலின் ‘பூவே பூச்சூடவா’வின் சாயல் கொண்டிருக்கிறது. பாட்டி-பேத்தி பாசம் போல பாட்டி-பேரன் பாசத்தைப் பற்றிப் பேசுகிறது. அப்படத்தில் பேத்தி குறும்புக்காரி என்றால் இதில் பாட்டிதான் குறும்புக்காரி. முற்பகுதியில் நகைச்சுவையாகப் போகும் படம் பிற்பாதியில் நம்மைக் கட்டிப் போடுகிறது.

வெறும் பாட்டி-பேரன் சென்டிமெண்ட் என்றால் இந்த 21ம் நூற்றாண்டில் யாரும் பார்ப்பதில்லை என்பதால் காதல் என்னும் இளமையைத் தூவி திரைக்கதை எழுதிய இயக்குநர் கணேஷ் குமார் மோகனுக்கு ஒரு சபாஷ்.

நடிப்பில் அனைத்துப் பாத்திரங்களுமே தேறிவிடுகிறார்கள். குறிப்பாக பேரனும் பாட்டியும் அருமையான தேர்வு, நல்ல நடிப்பு. பாட்டி ரங்கம்மா செய்யும் குறும்புகள் ஆரம்பத்தில் இப்படியும் பாட்டியா என்று லேசாகத் தோன்ற வைத்தாலும் போகப் போக பாட்டி நம்மையும் ரசிக்க வைத்துவிடுகிறார். இவர் சினிமாவில் எவ்வளவோ வருடங்கள் நடித்திருந்தாலும் இதுவே அவர் சொல்லிக் கொள்ளும் படமாக இருக்கும்.

ஹீரோயின் ஸ்வேதா குப்தாவுக்கு ஹீரோவை காதலிக்கலாமா என்று யோசிக்கும் வேலை மட்டுமே. ஆதலால் நடிப்பில் தேறிவிடுகிறார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

ஹீரோ எஸ்கே ஜாலியான சாப்ட்வேர் இளைஞனாக ஜாலியாகச் செய்திருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சிகளில் அவருடைய கனமான நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

படத்தின் ஒளிப்பதிவாளர் கே.பி.பிரபு படத்தின் கதையை உறுத்தாமல் இதமாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை நடப்பது கிராமம் என்றாலும் கிராமியத்தன்மை காட்டப்படவேண்டிய அவசியங்கள் பெரிதும் எழாததால் ஒளிப்பதிவு அன்னியமாகத் தோன்றவில்லை. ஹீரோ கிராமத்தில் கல்யாண வீட்டில் நுழைந்து உறவினர்களிடம் உரையாடும் நீளமான காட்சியை ரசிக்கும்படி ஒரே ஷாட்டில் முயன்றிருக்கிறார்.

எடிட்டிங் . படத்தின் ஆரம்பத்தில் திடீரென்று ஹீரோவும் ஹீரோயினும் ரயிலில் பேசுவது போல படம் ஆரம்பித்துவிடுகிறது. ஹீரோவும் ஹீரோயினும் ரயிலில் சந்தித்து பேசி, அறிமுகமாகி… என்பது போன்ற காட்சிகள் வெட்டப் பட்டிருக்கக்கூடுமோ என்பது போல தோற்றம் தருகிறது. மற்றபடி படத்தின் எடிட்டிங் மற்ற எல்லா இடங்களிலும் ஓகே.

படத்தின் இசையமைப்பாளர் ஸ்ராவன். இரண்டு பாடல்களுடன் படத்திற்கு இசையில் பலம் சேர்த்திருக்கிறார். இப்படத்திற்கு பாடல்கள் பெரும் தேவையில்லை என்பதால் இயக்குனர் பாடல்களை அளவோடு பாதி பயன்படுத்தி மீதியை விட்டுவிடுகிறார். பிண்ணனி இசையில் பழைய பாடல்களை சரியான நேரத்தில் பயன்படுத்தும் உத்தியை கையாண்டிருக்கிறார் இசையமைப்பாளர். பின்னர் படத்தின் தொனி மாறும் போதும் இசையிலும் மாற்றத்தை கொண்டுவந்து அதைக் காட்டி விடுகிறார். தேறிவிடுவார்.

படத்தின் முக்கிய பங்கு, பலம் இயக்குனரிடமே இருக்கிறது. கிராமத்தை கையாண்ட விதம், பாட்டியின் நடிப்பு, பாட்டி செய்யும் குறும்புகள் சினிமாட்டிக்காகப் போய்விடாமலிருக்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை, கிராமத்து ஷர்பத் பெட்டிக் கடை, வசனங்களில் பேஸ்புக், ஆங்ரி பேர்ட்ஸ், அறை வாங்கும் பெரியப்பா, பேரனின் அன்பை நிஜத்தில் உணர்ந்த கணத்தில் பாட்டியும் பேரனும் பரிமாறிக்கொள்ளும் பார்வை பரிமாற்றங்கள்,  உறவினர்களின் யதார்த்த பேச்சுக்கள் என்று பல இடங்களில் இயக்குனர் மிளிர்கிறார். இவருக்கு இது மூன்றாவது படமாம். தமிழ்ச் சினிமாவில் புதிய ட்ரெண்டாக குறும் படங்கள் மூலம் திரைப்பட இயக்குனராவது இவருக்கும் சாத்தியப்படலாம்.

தமிழ்ச் சினிமாவில் துணை இயக்குனர்களாகப் பல வருடம் தேய்ந்து, இயக்குனரின் வீட்டு நாய் வரை குளிப்பாட்டி விடும் வேலைகள் செய்து, பின்னரும் இயக்குனராக மாறுவதற்கு ஒரு தயாரிப்பாளரின் நம்பிக்கையைப் பெற பிரயத்தனப் படவேண்டியிருக்கும் துணை இயக்குனர்களின் நிலை இந்தக் குறும்பட ட்ரெண்டின் மூலம் கொஞ்சம் எளிதாக்கப் பட்டிருக்கிறது.

பத்தாயிரம் முதல் சில லட்சங்கள் வரை தங்களின் வசதிக்கேற்ப குறும்படங்கள் இயக்கி அவற்றின் மூலம் தயாரிப்பாளர்களை சென்றடைவது என்பது துணை இயக்குனர்களுக்கு எளிதாக இருக்கும். இம்முறையின் பலவீனம் பத்தாயிரம் கூட செலவு செய்ய இயலாத நிலையில் இருக்கும் துணை இயக்குனர்களின் எண்ணிக்கை தமிழ்ச் சினிமாவில் அதிகம் என்பது.

தயாரிப்பாளர்கள் குறும்படத் தயாரிப்புச் செலவை ஏற்றுக் கொள்ள முன்வரும் பட்சத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணை இயக்குனரை நம்பி கோடிக் கணக்கில் செலவழித்து படமெடுக்கலாமா என்பதை அவரையே வைத்து சில ஆயிரங்கள் செலவு செய்து குறும்படம் எடுத்து முடிவு செய்து கொள்ளும் பட்சத்தில் துணை இயக்குனர்களின் தற்போதைய துயர வாழ்க்கை முறை மாற்றமடைய வாய்ப்பிருக்கிறது.
கணேஷ் குமார் போன்ற திறமையானவர்கள் இன்னும் பலர் தமிழ்த் திரையுலகில் நுழைவது எதிர்காலத்தில் எளிதாகும்.

தாரணிகா அம்பேத்கர் தயாரிப்பில் வந்துள்ள இந்தக் குட்டீம்மா குறும் படம் இணையதளத்திலோ, யூ ட்யூபிலோ வெளியிடப்படும் போது அதற்கான இணைப்புக்களைத் தருகிறோம்.

இங்கே இப்படத்தின் ட்ரெய்லரைக் காணுங்கள்

–ஷாலினி ப்ரபாகர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.