oscars-2013-review

2013 ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பல திரைப்படப் பிரிவுகளில் படங்கள் முன்மொழியப்பட்டு பின் விருதுகளுக்காக படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வருடா வருடம் ஏதாவது சில படங்கள் மேனேஜ்மண்ட் கோட்டாவில் நுழைந்து விருது வாங்கும். அதை எதிர்த்து சிலர் ஊடகங்களில் பேசுவர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விருதுகள் வழங்கப்படும்.

இம்முறையும் அது போன்ற அரசியல் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பை(life of pi) படம் சிறந்த இயக்குனர் விருதை ஆங் லீக்கு மீண்டும் பெற்றுத் தந்திருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் க்ளாடியோ மிராண்டா ஆஸ்கர் பெற்றுள்ளார். இது போல சிறந்த பிண்ணணி இசைக்காக இப்படத்தின் மிச்சேல் டோன்னாவும், ஸ்பெஷல் எபெக்ட்டுகளுக்காக இப்படத்தில் பணியாற்றிய நால்வரும் ஆஸ்கர் பெற்றுள்ளனர். இவை எல்லாம் இப்படத்திற்கு பொருத்தமான விருதுகளே. ஆனால் சிறந்த படமாகவும் போட்டியிட்ட லைப் ஆப் பை சிறந்த பட விருதைப் பெறவில்லை. 

சிறந்த வெளிநாட்டுப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் ஆஸ்திரியப் படமான ஆமோர்(Amour). இது 70 வயதைத் தாண்டிய இணைபிரியாத ஒரு கணவனும் மனைவியும் வாழ்க்கையில் விதிவசத்தால் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றனர் என்பது பற்றிய படம். அன்பிலும், காதலிலும் இணைபிரியாதிருக்கும் கணவன் மனைவி அவர்கள். அவர்களில் மனைவிக்கு திடீரென்று அட்டாக் வந்து நோய்வாய்ப்படுகிறது. அதன் பின் நடக்கும் விஷயங்கள் அவர்களின் நாற்பதாண்டு கால இணைபிரியாத வாழ்வை சோதனைக்குள்ளாக்குகின்றன.

சிறந்த திரைக்கதைக்காக ஜாங்கோ அன்செய்ன்டு(Django Unchained) என்கிற அமெரிக்க கறுப்பின விடுதலை நாட்களில் நடக்கும் ஆக்ஷன் படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ள க்வென்டின் டெரன்டினோவுக்கு கிடைத்துள்ளது. ஒரு கறுப்பின அடிமையை விடுவிக்கும் ஒரு மருத்துவர் அந்த அடிமையை கிரிமினல்களை விரட்டிச் சென்று வேட்டையாடும் பௌன்ட்டி ஹன்டராக ஆக்க முனைகிறார். அவனுக்கு சண்டைப் பயிற்சி கலைகளை கற்றுக் கொடுக்கிறார். அவனோ அவரை தனது மனைவியை அடிமையாய் வைத்திருக்கும் ஒரு தோட்ட முதலாளியை பழிவாங்க கூட்டிச் செல்கிறான்.

சிறந்த நடிகருக்கான விருது ‘லிங்கன்’ வாழ்க்கை வரலாற்றில் அமெரிக்க கறுப்பின விடுதலைக்காக அவர் முயற்சி செய்த விடுதலை வாங்கித் தந்த தருணங்களைப் பற்றிய படத்தில் ஆப்ரஹாம் லிங்கனாக நடித்த டேனியல் டே-லூயிஸ்க்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருது “சில்வர் லைனிங்’ படத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸூக்கு கிடைத்துள்ளது.

இதையெல்லாம் ஓரளவிற்கு ஓ.கே.தான் என்றாலும் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட விஷயத்தில் வர வர மாமியா கழுதை போலானாளாம் என்கிற பழமொழிக்கேற்ப ஆஸ்கர் விருதில் நடக்கும் அரசியல் இந்த முறை மேலும் அம்மணமாகத் தெரிகிறது. இந்த முறை சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் ‘ஆர்கோ’. இது திரைப்படமா என்பதிலேயே ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. மோசமான நடிப்பு, மட்டமான திரைக்கதை, இயக்கம் என்று தேறாத விஷயங்களே நிறைய இப்படத்தில் உள்ளன. ஆனால் வழக்கம் போல அமெரிக்காவின் கொடியை உசத்திப் பிடித்து பிடிக்காத நாடுகளின் முகங்களில் சாணியடிக்கும் வேலையைச் செய்யும் இந்தப் படம் வெட்கமில்லாமல் சிறந்த ஆஸ்கர் படமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய காரணம் படத்தின் கதை ஈரான் சம்பந்தப்பட்டது என்பதே.

1979ல் ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் யுனிவர்சிட்டியில் பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஊர்வலமாகச் சென்று அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை செக்யூரிட்டி காவலர்கள் விரட்ட முனையும் போது அங்கே வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களால் அவர்கள் ஆயுதங்களை உபயோகிக்காமல் பணிந்து விட தூதரகத்தினுள் நுழைந்த மாணவர்கள் அங்கிருந்த 50க்கும் மேம்பட்ட அமெரிக்கர்களை பிணயக்கைதிகளாக பிடித்தனர். கத்தியின்றி, ரத்தமின்றி, வன்முறையின்றி நடந்த இந்த கைப்பற்றுதலை ஆரம்பத்தில் யாரும் சீரியசாகக் கருதவில்லை. போராளிகளும் அரசின் படைகள் வந்தவுடன் கைதிகளை விடுவித்து விடுவதாகத் தான் கருதியிருந்தனர். ஆனால் நாடெங்கும் எழுந்த ஆதரவு அலையாலும், அமெரிக்க வெறுப்பாலும் இவர்களுக்கு அரசும் மறைமுகமாக ஆதரவு தந்தது. எனவே கைதிகளை விடுவிக்காமல் சுமார் 444 நாட்கள் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். அவர்கள் கைதிகளை விருந்தினர் போலத் தான் நடத்துகிறோம் என்று தெரிவித்தாலும் அமெரிக்க ஊடகங்களும், சிஐஏவும் அமெரிக்காவின் மீது தொடுக்கப்பட்ட போர் போல அதை அமெரிக்காவில் பரப்பி விட ஈரானுக்கு எதிரான அலை அமெரிக்காவில் பெருகியது.

இந்த 52 பேரில் 5 பேர் கைப்பற்றுதலின் போது தப்பித்து கனடா நாட்டு தூதரக அதிகாரியிடம் ரகசியமாக சரணடைகின்றனர். இவர்களை ஈரான் அரசுக்குத் தெரியாமல் ஈரானிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு வர விரும்பும் கனடா அதற்காக சிஐஏவின் துணையுடன் ஒரு அதிகாரியை அமர்த்தி திரைப்படக் குழு ஒன்று படமெடுக்க ஈரானுக்கு வருவது போன்ற தோற்றத்தை தர போலியாக ஒரு திரைப்பட டீமை உருவாக்கி அவர்கள் வந்துவிட்டு திரும்பிச் செல்லும் போது அவர்களுடன் இந்த ஐந்து பேரையும் அந்தத் டீமோடு சேர்த்து நைசாக தப்புவித்தது. இந்த 5 பேர் தப்பித்த கதையைத் தான் இட்டுக் கட்டி அமெரிக்க நாட்டு கொடிகட்டி சொல்லியிருக்கிறார்கள் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ‘ஆர்கோ’வில். இது ஜால்ரா விருதல்லாமல் வேறென்ன ?

இதை விடப் படு வெளிப்படையான ஜீரோ டார்க் தேர்ட்டி(Zero Dark Thirty) எனப்படும் பின்லேடனை லைவ்வாக சுட்டுக் கொன்ற அமெரிக்காவின் வீரசாகத்தை(?) எடுத்தியம்பும் படத்தை ஜேம்ஸ் கேமரானின் முன்னாள் மனைவியான கேதரின் பிகலோவை வைத்து எடுத்திருக்கிறார்கள். அவரும் படு கச்சிதமாகவே, சிறப்பாகவே எடுத்திருக்கிறார். ஆனால் பின்லேடன் விஷயத்துக்கு ஆஸ்கர் கொடுத்தால் மேனேஜ்மண்ட் கோட்டா விஷயம் ரொம்ப வெளிப்படையகாத் தெரிந்து விடுமோ என்று பயந்தோ என்னவோ அதற்கு விருதுகள் பெரிதாக எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் சிறந்த படத்துக்காக இது நாமினேட் செய்யப்பட்ட வகையில் போதுமான பப்ளிசிட்டியை இப்படம் பெற்றுக் கொண்டது.

இது தவிர சிறந்த குறும்படத்துக்கான விருது கர்ப்யூ(Curfew) என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த வருட ஆஸ்கர் விருதுகள் கலை கலைக்கு மட்டுமே என்கிற நோக்கில் பார்த்தால் ஓ.கேவாகவும், கலையில் அமெரிக்காவின் அரசியல் என்று பார்த்தால் மோசமாகவும் இருக்கிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.