ராஜரத்தினம், வயது 86. ஓய்வுபெற்ற தமிழ்நாடு மின்சாரவாரிய அதிகாரி. எண்ணூர், தூத்துக்குடி அனல்மின் நிலைய கட்டுமானத்தின் மிக முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது இயற்கை விவசாயி.

மனதிற்கு வயது இல்லை என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக, இந்த வயதிலும் தன்னிடம் உள்ள 20 மாடுகளையும், 8 ஏக்கர் நிலத்தையும் ஒற்றை ஆளாகப் பராமரித்து வருகிறார். நெல், கேழ்வரகு, கம்பு, சோளம் எனப் பயிர் செய்து வருகிறார். மாட்டுச் சாணம் மூலம் எரிவாயு தயாரித்து, வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தி வருகிறார்.

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் உள்ள ராஜரத்தினத்தின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். “மாடுகள் வெச்சிருக்கிற எல்லோரும் சாண எரிவாயு (கோபர் கேஸ்) தயாரிக்கலாம். இப்போ இருக்கிற பொருளாதாரச் சூழ்நிலைக்கு, இது ஒவ்வொரு வீட்டுக்கும் தேவை. சுயசார்பு ரொம்ப முக்கியம். அதிலும் விவசாயிகளுக்கு இது ரொம்பவே அவசியம்” எனப் பேசத் தொடங்கினார் ராஜரத்தினம்.

#கேழ்வரகுவயலில்
“மாட்டுச்சாணத்தைப் பெரிய தொட்டியிலப் போட்டு, தாராளமா தண்ணியை விட்டுக் கரைக்கணும். கரைசல்ல வைக்கோல், செடி செத்தைகள் இல்லாத மாதிரி கரைச்சுவிடணும். இந்தச் சாணக்கரைசலை, மூடியிருக்கிறப் பெரிய தொட்டியில நிரப்பிடணும். அவ்வளவுதான் வேலை. ஏழு நாள்ல கேஸ் உற்பத்தியாகிடும்.

கேஸ் உருவாகுறப்ப தொட்டியில அழுத்தம் உருவாகும். அதைக் கட்டுப்படுத்த, பெரிய தொட்டி யோட, தண்ணி நிரப்பப்பட்ட ஒரு சின்னத் தொட்டியை இணைச்சுக்கணும். அந்தந்த மாவட்டத்துல இருக்கிற கே.வி.கே, மாற்று எரிசக்தி துறை அதிகாரிகளை அணுகுனா, தொட்டி அமைக்க வழிகாட்டுவாங்க. கேஸ் உற்பத்தியாகிற தொட்டியில ஏற்படுற அழுத்தத்தைக் குறைக்க, பக்கத்துல இருக்கிற தொட்டி தண்ணியைத் திறந்துவிட்டாப் போதும். அழுத்தத்தைக் கணக்கிட எந்தக் கருவியும் தேவையில்லை. அப்பப்போ தண்ணியைத் திறந்துவிட்டாலே போதும். தொடர்ந்து, தினமும் ரெண்டு முறை சாணத்தைக் கரைச்சு தொட்டியில போட்டுக்கிட்டே இருக்கணும். தண்ணியைத் திறந்துவிட்டுக்கிட்டே இருக்கணும்.

இப்படிச் செஞ்சா, தொட்டியோட அழுத்தத்தைக் கட்டுக்குள்ள வெச்சுக்க முடியும். தொட்டியில நிரப்புற சாணத்தோட ஆயுள் எட்டு நாள்கள்தான். அதுக்குப் பிறகு, அந்தச் சாணக்கரைசலை வெளியே எடுத்துடணும். உருவாகுற கேஸை டியூப் மூலமாக வீட்டுக்குள்ள கொண்டுபோயிடலாம்.

நான் அப்படித்தான் பயன்படுத்துறேன்’’ என்றவர் நம்மை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அடுப்பைப் பற்றவைத்து காட்டினார். “இந்தச் சாண எரிவாயுவால எந்தவிதமான சுற்றுச்சூழல் மாசுபாடும் இல்லை. என்கிட்ட மூணு யூனிட் இருக்கு. நான் தயாரிக்கிற கேஸ் எங்க தேவைக்குப் போக, நிறையவே மிச்சமாகுது. அதை இன்னும் நாலு வீட்டுக்குப் பயன்படுத்தலாம். கேஸ் தயாரிச்ச பிறகு, கழிவாகக் கிடைக்கிற சாணக்கரைசலைத் தோட்டத்திற்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துறேன். அது நல்ல உரமாகிடுது. நான் ரசாயன உரங்களைப் பயன்படுத்துறதே இல்லை’’ என்ற ராஜரத்தினம், நம்மைத் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்.

தோட்டத்திற்குச் செல்லும் வழியில் தென்னை மரங்களும் அதன் அடியில் காய்ந்த மட்டைகளும் போடப்பட்டும் இருந்தன. “இதெல்லாம் மட்டைகள் இல்லை. இயற்கை உரம். இந்த மட்டைகள் மழையில் நனைந்து, மட்கி, வாய்க்கால்ல வர்ற தண்ணியில கலந்து வயலுக்குப் போயிடும். இந்தக் கேப்பை (கேழ்வரகு) பயிரைப் பாருங்க. ரசாயன உரம் பயன்படுத்துனா, பயிர் இவ்வளவு உசரமா வளராது. அடுத்த வாரம் அறுவடைக்குத் தயாராகிடும். மாட்டுக் கோமியத்தைப் பெரிய தொட்டியில சேமிச்சு வெச்சு, அதுல எருக்கு, பப்பாளி, வேம்பு, சீத்தாப்பழ இலைகளைப் போட்டு 20 நாள்கள் ஊறவெச்சு, வடிகட்டி எடுத்துப் பயிர்கள் மேலத் தெளிப்பேன். அது செஞ்சா பூச்சிகள் அண்டவே அண்டாது” என்றவர் நிறைவாக,
“அதிகாலையில 4 மணிக்கு எந்திரிப்பேன்.

வேம்பு, தூதுவளை, மல்லி, புதினானு 12 வகையான மூலிகைகளை எடுத்துச் சாறு பிழிஞ்சுக் குடிப்பேன். பிறகு, மாடுகளைக் கவனிச்சிட்டு, 9 மணிக்குக் கூழ் குடிச்சிட்டுத் தோட்ட வேலைகளைச் செய்வேன். 23 வருஷத்துக்கு முன்ன ஒரு பசுமாடு வாங்கினேன். அதுதான் சந்ததிகளால் பெருகி 100 மாடுகள் வரை உண்டாச்சு. எங்கிட்ட வேலையாள்கள்னு யாரும் இல்லை.

என் மகன்தான் உதவி செய்றார். அதிகமான மாடுகளை வெச்சு பராமரிக்க முடியலை. அதனால 20 மாடுகள மட்டும் வெச்சிருக்கிறேன். உணவுச் சங்கிலி போல, விவசாயத்துக்கும் சங்கிலி இருக்கு. ரசாயன உரங்களைப் போட்டு, அந்தச் சங்கிலி இப்ப அறுபட்டுக்கிடக்கு. இதை விவசாயிக புரிஞ்சுகிட்டாப் போதும். இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க’’ என்றார் புன்னகையுடன்.

தொடர்புக்கு, ராஜரத்தினம், செல்போன்: 97861 79262.

#வயல்வரப்பு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.