வங்கிகள் பற்றிய திரு. சமஸ் அவர்கள் தி இந்து வில் எழுதியுள்ள கட்டுரை. கட்டுரையில் உள்ள உண்மைகளை பலரும் படித்து தெரிந்துகொள்ள இங்கும் பகிர்கிறோம்.

மக்கள் சேமிப்பையெல்லாம் வங்கிகளுக்குள் கொண்டுவந்துவிட்டு தனியார்மயத்தைப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்!

நீரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது?

சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். மேலாளராக நண்பர் இருக்கும் ஒரு வங்கியில், “ஒரு மணி நேரம் இங்கு உட்கார்ந்திருந்தால், சூழலை நீங்களே புரிந்துகொள்ளலாம்” என்றார். கொஞ்சம் அந்தக் காலத்து மனிதர் என்பதோடு, பெரிய கூட்டம் நெருக்கியடிக்கும் வங்கிக் கிளையும் அல்ல அதுவென்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட உறவு உண்டு. அந்த ஓரிரு மணி நேரத்தில், கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர் அவரிடம் வந்து பேசிவிட்டு போனார்கள். பெரும்பாலானோர் கேட்டது, “ஏன் சார், நம்ம பேங்காவது பாதுகாப்பா இருக்கா? பேசாம பணத்தையெல்லாம் எடுத்து வேற எதுலேயாவது முதலீடு பண்ணிறலாமான்னு தோணுது!”

அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த ஒரு பெண், தன்னுடைய வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் முடிவோடு வந்திருந்தார். அவரைச் சமாளித்து, திருப்பியனுப்ப மட்டும் நண்பருக்கு அரை மணி நேரம் ஆனது. நண்பர் அசந்துபோனார். “இதுரைக்கும் இல்லாத அச்சம், என் வாழ்நாள்ல பார்க்காதது மக்கள்கிடட்ட இப்போ உருவாகியிருக்கு!”

அங்கிருந்து திரும்பிய பின் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களிடம் பேசினேன்.

பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டில் வைப்புத்தொகையில் பெருத்த சேதாரத்தைச் சந்திக்கும் என்று தோன்றுகிறது.

குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் பலர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றுவருவதாகவும் அங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் மிகப் பெரிய வங்கி ஊழல் இது.

ஊழல் என்பதைக் காட்டிலும் சட்டப்பூர்வக் கொள்ளை என்றே சொல்ல வேண்டும்.

நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும் எழுதிக்கொண்டிருக்கிறபடி இது வெறும் ரூ.12,600 கோடி இழப்புடன் முடியப்போவதில்லை.

வங்கிகளை இந்திரா காந்தி நாட்டுடமையாக்கிய பின்னரான, இந்த அரை நூற்றாண்டில் பொதுத்துறை வங்கிகள் சேர்த்திருக்கும் பெரும் சொத்தான நம்பகத்தன்மையை இந்த ஊழல் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

கொடுமை, எந்த அரசாங்கம் இந்த நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க வேண்டுமோ, அதுவே பொதுத்துறை வங்கிகளை மானபங்கப்படுத்திவருகிறது.

அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் முதலியோரெல்லாம், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம்” என்று பேசிவருவது பொறுப்பின்மையின் உச்சம்.

நமக்கு ஒரு கடை இருக்கிறது. நீண்ட காலம் நல்ல வருமானம் தந்த கடை. காலத்துக்கும் உறுதுணையாக இருக்கவல்ல கடை. கொஞ்ச காலமாக நஷ்டம் காட்டுகிறது. “நிர்வாகம் சரியில்லை அதுதான் காரணம்” என்கிறார் ஒருவர்.

“சரியப்பா, இனி நீங்கள்தான் நிர்வாகி. மேம்படுத்திக்காட்டுங்கள்” என்று அவரையே கல்லாவில் உட்கார வைத்துவிடுகிறோம். ஒரு நல்ல நிர்வாகி என்ன செய்ய வேண்டும்? நிர்வாகத்தைச் செம்மையாக்கி, லாபத்தை நோக்கி கடையைத் திருப்ப வேண்டும்.

அது நடக்கவில்லை. “கடையை விற்று காசாக்கித் தின்றுவிடலாம்” என்கிறார் புரிய நிர்வாகி. “இதுதான் சீர்திருத்தம். இந்த முடிவெடுக்க ஒரு நிர்வாகிக்குத் துணிச்சல் வேண்டும்!” என்று கூடவே ஜல்லியடிக்கிறது ஒரு கும்பல்.

உடைமையாளர்கள் நாம் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?

ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குகிறதா? விற்றுவிடு!

பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கிறதா? விற்றுவிடு!

கோல் இந்தியா லாபத்தில் போகிறதா? அதன் பங்குகளையும் விற்றுவிடு!

கேட்கவே நாராசமாய் இருக்கிறது.

இன்றைக்குக் காலையில் கேள்விப்பட்ட இரு செய்திகள் இவை.

கதர் கிராம வாரியத் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் 7 லட்சம் பேர் கடந்த ஆண்டில் வேலையை இழந்திருக்கிறார்கள்.

ரயில்வே துறை புதிதாகக் கொண்டுவரும் ஏற்பாட்டின்படி, இருப்புப் பாதைப் பராமரிப்புப் பணிக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்படவிருந்த 65,000 வேலைகள் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன.

புதிதாக ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூடக் கட்டியெழுப்ப முடியாதவர்கள், நேரடியாக அரசுத் துறையிலிருந்து ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைக்கூட உருவாக்க முடியாதவர்கள், தேசத்தின் நவநிர்மாண வளர்ச்சிக்காக அப்படி கட்டியெழுப்பப்பட்ட ஒவ்வொன்றையும் கை மாற்றிவிடத் துடிக்கிறார்கள்; இருக்கிற வேலைவாய்ப்புகளைக் குறைத்திட நினைக்கிறார்கள் என்றால், இவர்கள் யார் நலனுக்காக இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்?

இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

ஊழலைத் துளியும் சகித்துக்கொள்ள முடியாத அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த மோடி அரசின் ஆட்சியில்தான், இந்த மாபெரும் ஊழலின் ஒட்டுமொத்த பலிகடாக்களாகவும் கீழ்நிலை ஊழியர்களை உருமாற்றும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

கீழ்நிலை வங்கி ஊழியர்களைப் பணிமாற்றம் செய்வதால் என்ன பெரிய மாற்றங்கள் நடந்துவிடும்?

இந்த ஊழலுக்கான மையக் காரணம் வங்கிகளின் உரிமையாளர் அரசா அல்லது தனியாரா என்பதில் இல்லை; ரிசர்வ் வங்கியின் தவறான கொள்கைகளிலும் அரசின் கண்காணிப்பின்மையிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும், பெருமுதலாளிகள் – ஆட்சியாளர்கள் இடையிலான கள்ள உறவிலும் இருக்கிறது.

இந்தியன் வங்கி சரிவைச் சந்தித்தபோது கசிந்த கதைகளையும் ஊழலில் அடிபட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களையும் இன்னமும் நாடு மறந்துவிடவில்லை.

இவ்வளவு பெரிய தொகை உயர்நிலை நிர்வாகத்துக்குத் தெரியாமல், தணிக்கையாளர்கள் கண்களில் படாமல் எப்படித் தொடர்ந்து நடந்திருக்க முடியும் என்னும் எளிய கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை.

ரிசர்வ் வங்கி ஆளுநர்,
நிதி அமைச்சர்,
பிரதமர்
ஒருவரும் இதுபற்றிப் பேசவில்லை.

எல்லாவற்றையும்விடக் கொடுமை இவைபற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள், காட்டிவரும் மென்போக்கும், குற்றவாளிகளை வரலாற்றிலிருந்து தேட முற்படும் அறிவுஜீவிகளின் முனைப்பும்! எனக்கு மோடிகள், அருண் ஜேட்லிகளைக் காட்டிலும், “இன்னும் ஏன் பொதுத்துறை நிறுவனங்களை அரசு கையில் வைத்திருக்கிறது? விற்றிடு! விற்றிடு!” என்று கூப்பாடு போடும் சேகர் குப்தாக்கள், அர்னப் கோஸ்வாமிகள் அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.

அமைப்புக்கு கொடி பிடித்து, அமைப்பின் குற்றங்களை எப்படியாவது நியாயப்படுத்தி தன்னைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திக்கொள்ளும் கேவலம் அறிவுத்தளத்தில் எல்லா காலங்களிலும் நடப்பது.

நம் காலத்தின் அடுத்தகட்ட இழிநிலை, அமைப்பின் அயோக்கியத்தனத்துக்கான முன்கூட்டிய ஒப்புதலை, அதற்கு உகந்த சூழலை மக்களிடம் உற்பத்தி செய்யும் வேலையை அறிவுஜீவிகள் தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டிருப்பது.

ஒருநாள் இப்படியும்கூட எழுதுவார்கள், “எடையைக் குறைக்க வேண்டும் என்றால், தலையை வெட்டிக்கொள்வது நல்லது.

தங்கள் எடையைச் சுமக்க முடியாமல் மக்கள் அல்லலுறுகிறார்கள்; நோய்க்கு ஆளாகிறர்கள்.

தேச நலன் கருதி அவர்களுடைய தலையை அரசாங்கம் வெட்டி உதவ வேண்டும்!
ஒரு துணிச்சலான ஆட்சியாளரால்தான் இதைச் செய்ய முடியும்!”

இந்திராவுக்கு இந்திய மக்கள் மனதில் இன்னமும் ஈரமான ஒரு இடமும் இருக்கிறது என்றால், அது ஏழை – பணக்காரர் ஏற்றத்தாழ்வைக் குறைக்க அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கானதாகவே இருக்கும்.

நிறைய செய்ய நினைத்தார். மாற்றுக்குரல்களைக் கவனத்தில் கொள்ள முடியாத அவருடைய இயல்பின் காரணமாக, உருப்படியான யோசனைகளுக்குக் காது கொடுக்காமலேயே தோற்றுப்போனார்.

எப்படிப் பார்த்தாலும் வங்கிகளை தேசியமயமாக்க 1969-ல் இந்திரா எடுத்த நடவடிக்கை அசலான துணிச்சல்.

பொதுத்துறை வங்கிகளில் இன்று நடந்துகொண்டிருக்கும் மோசடிகளுக்கு இந்திராவின் நாட்டுடமையாக்க நடவடிக்கையை காரணமாகப் பேசுவது, மடத்தனம் மட்டுமல்ல; கடைந்தெடுத்த வரலாற்றுப் புரட்டுமாகும்.

இந்திரா ஏன் வங்கிகளை நாட்டுடமையாக்கினார்?

  1. அதுவரையில் இந்நாட்டின் வங்கிகள் பெருமளவில் மேல்தட்டு – மேல்சாதிக்காரர்களுக்கானவையாகவே இருந்தன.
  2. சென்ட்ரல் வங்கி என்றால் டாடா குழுமம்,
    யூகோ வங்கி என்றால் பிர்லா குழுமம்,
    கனரா வங்கி என்றால் பை குழுமம் என்று ஒவ்வொரு வங்கியையும் ஒவ்வொரு தொழில் குழுமங்கள் தம் கையில் வைத்துக்கொண்டு ஆடின.
  3. இந்நாட்டின் உற்பத்தியில், அன்றைய தேதியில் 44% பங்களிப்பைக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு, வங்கிகள் அளிக்கும் மொத்தக் கடன்களில் 2% கடன்கூட போய்ச்சேரவில்லை.
  4. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது,
    வங்கிகள் எந்நேரமும் திவாலாகலாம் என்றிருந்த பாதுகாப்பற்ற சூழல்.

சுதந்திர இந்தியாவில் வங்கிகள் நாட்டுடைமையாக்கம் செய்யப்படும் வரையிலான காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 35 வங்கிகள் திவாலாகிக்கொண்டிருந்தன.

வங்கிகளை இந்திரா நாட்டுடைமையாக்கிய பின்னரே, மக்களின் முதலீடுகளுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு கிடைத்தது.

வங்கிகள் அளிக்கும் மொத்த கடன்களில் குறைந்தபட்சம் 18% விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

சாமானிய மக்கள் வங்கிகளுக்குள் நுழைய முடிந்தது.

பணமதிப்புநீக்கம் போன்ற ஒரு பகாசுர நடவடிக்கைக்குப் பின், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் வங்கிச் செயல்பாட்டோடு பொருத்தும் வேலைகளை முடுக்கி, மக்களின் எல்லா சேமிப்புகளையும் சுரண்டி வங்கிகளில் போட வைக்கும் நிர்பந்தங்களை ஒவ்வொரு நாளும் உருவாக்கி, கடைசியில் அவர்களுடைய கடைசி நம்பிக்கையாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று பேசுவது திட்டமிட்ட கொள்ளைக்கான அறைகூவலேயன்றி வேறு அல்ல.

கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணைந்த அவர்களது சேமிப்பை, அவர்களுடைய உழைப்பிலிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த ரத்தத்தை பொதுத்துறை வசமிடமிருந்து தனியார் கைக்கு மடை மாற்றுவதற்குப் பெயர்தான் திறமையான நிர்வாகம், அந்த முடிவை எடுப்பதற்குப் பெயர்தான் நிர்வாகத் துணிச்சல் என்று எவரேனும் சொல்வார்கள் என்றால், மனம் கொதிக்கும் மக்களில் ஒருவனாக எழுதுகிறேன்: அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்குச் சமானம்!

  • நன்றி. சமஸ், இந்து தமிழ்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.