29.09.2020

இந்தியா போன்ற பன்முகத் தன்மை, பல மொழிகள் பேசும் மக்கள் கொண்ட நாட்டில் அரசின் நிர்வாக அமைப்புகளில், சட்ட வரைவுகளில் அலுவல் மொழியாக
இந்தியே இருக்க வேண்டும் என்ற
கருத்து சரிதானா?

ஆர். தர்மலிங்கம்

இந்தியாவில் 1652 மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணக்கெடுப்பின்படி பத்து லட்சம் அதற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 29 உள்ளன. பத்தாயிரம் அதற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 122 உள்ளன. இவ்வளவு மொழிகள் பேசும் நாடு உலகில் வேறு எங்காவது இருக்குமா?

அரசியலைப்பு சட்டம் எட்டாவது பட்டியல் படி 22 மொழிகள்
அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவரவர் தாய் மொழியில் பேசவும், எழுதவும், சிந்திப்பதற்குமான உரிமையை அரசியலமைப்பு சட்டம்
வழங்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டத்தில் உள்ள வங்கி ஒன்றில் இந்தி தெரியாது என்பதாலேயே வாடிக்கையாளர் ஒருவருக்கு கடன் வழங்க மறுத்துள்ளார் வங்கி மேலாளர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா? என்று கேட்டுள்ளார் விமான நிலையக் காவலர். மொழிப்பற்றை மொழி வெறியாக்கும் முயற்சிக்கு சாதாரண மக்கள் இரையாகி விடக் கூடாது என்பதே நமது கவலை.

சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 குறித்து கருத்து கேட்பதற்கான வரைவு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே மத்திய அரசு வெளியிட்டது. அரசின் இந்த செயல் மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியது.
பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாக இந்தியோ, ஆங்கிலமோ இல்லாத போது வரைவு அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில்
வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. இரண்டு உயர்நீதிமன்றங்கள் கூட மக்களுக்கு தெரியும் மொழிகளில் வெளியிட வேண்டும் என உத்தரவு போட்டன.

அறிக்கையை மொழியாக்கம் செய்யும் போது மொழியாக்கத்தில்
குழப்பம் வரும் என்பதால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டதாக
மத்திய அரசு கூறியது. சட்டம் உருவாக்கும் பணியில் சாதாரண மக்களின் பங்களிப்பை நிராகரிக்கும் மத்திய அரசின் போக்கு இதில் இருப்பதை பார்க்க முடிகிறது. இது சனநாயகத்திற்கும், அரசியலைப்பு தந்துள்ள உரிமைக்கும் எதிரானதாகும்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்தே மொழி அரசியல்
முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. 1952 ல் பொட்டி ஶ்ரீராமுலு மொழிவாரி மாநிலம் உருவாக்க வலியுறுத்தி 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து, 1956 ல் மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியை அடிப்படைக் கொள்கையாக கொண்டு தி.மு.க. தெலுங்கு தேசம், சிவசேனா போன்ற மாநில கட்சிகள் தோன்றின. இருப்பினும்
அரசியலைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில்
நாடாளுமன்ற நடவடிக்கைகள், சட்ட வரைவுகளை மக்களுக்கு தெரிவிப்பது, சட்டங்களை அரசிதழ்களில் வெளியிடுவது ஆகியவற்றில் பலவீனம் தொடருகிறது.

மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகம் 22 மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமையை குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. இதேபோல ஆதார் அடையாள அட்டையில் இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள்
பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சட்ட முன் வரைவுகளிலும்,
அரசிதழ்களிலும் பிற மொழிகளை பயன்படுத்த மறுப்பது கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானதாகும்.

சட்ட முன் வரைவுகள் மக்களுக்கு தெரியாத மொழியில் வெளியிட்டால் அந்த வரைவில் என்ன இருக்கிறது எனபது எவ்வாறு அவர்களுக்கு தெரியும் அல்லது தெரியாத ஒன்றின் மீது எவ்வாறு கருத்து சொல்ல முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 1951 ல் ஹர்லா Vs ராஜஸ்தான் வழக்கில் “எந்த ஒரு சட்டமும் மக்களுக்கு புரியும் மொழியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது என்பதே இயற்கை நீதியாகும்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மகாராஷ்ட்ராவில் நிலம் கையகப்படுத்துவது பற்றி மராத்தியில் அல்லாது இந்தியில் வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கை ஒன்று நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. எப்படி கிராம மக்கள் தாய் மொழியில் அல்லாத ஒரு அறிவிப்பை புரிந்து கொள்வார்கள்? என்ற கேள்வியை அரசை நோக்கி நீதிமன்றம் எழுப்பியது.

ஆகவே மொழிப் பிரச்சினை ஏதோ தமிழகத்தில் மட்டுமே எழுப்பப்படுகிறது என்ற பார்வை தவறானது. அதற்கான விழிப்பும், போராட்டப் பாரம்பரியமும் இங்கு அதிகமாக இருப்பதற்கு நிறைய வரலாற்று ரீதியான காரணிகள் இருக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 24 மொழிகள் பேசும் நாடுகள் உறுப்பு
நாடுகளாக உள்ளன. 24 மொழிகளும் அலுவல் மொழியாக
இருக்கின்றன. அனைத்து அறிக்கைகளும், தொடர்பும் அந்தந்த நாட்டிற்குரிய மொழிகளிலேயே அனுப்பப்படுகிறது. இதனால் அந்த நாடுகளின் தனித்துவம் பாதுகாக்கப்படுகிறது.

இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்கள் இருந்தாலும் 22 மொழிகள் மட்டுமே அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் அலுவல் மொழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்வதும், பேசுவதும் தவறல்ல. தாய் மொழியில் பேசுவதும், எழுதுவதும், சிந்திப்பதும் எளிதானது என்பதே உலக அனுபவம். பல மொழிகள் பேசும் மக்களை ஒரே மொழியைப் பேசவும், படிக்கவும் வற்புறுத்துவது பன்முகத் தன்மைக்கு எதிரானதாகும்.

— கட்டுரையாளர், ஆர். தர்மலிங்கம். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் .
####################

 

*******
செவ்வானம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.