மகிழ்மதி தேசத்தின் பாகுபலியாய்… எல்.ஐ.சி – 65
🌷🌷🌷🌷🌷

நான் எல்.ஐ.சி பேசுகிறேன்
🍁🍁🍁🍁🍁🍁🍁

எனதருமை இந்திய மக்களே இன்று எனக்கு 65வது பிறந்த நாள்.

எனது வாழ்க்கை முழுவதும் உங்களோடுதான் மிக நெருக்கமாக இருந்து வந்தி ருக்கிறேன். எனது பிறந்த நாள் மகிழ்ச்சியை உங்களோடு பகிராமல் யாரோடு பகிர்ந்து கொள்வேன்!

கொரோனா பெருந்தொற்று காலம் இது. அன்றாட வாழ்வு துவங்கி… விலை மதிப்பில்லா ஆயுள் வரை… எல்லாம் நம்மை அச்சுறுத்தும் நேரம். ஆயுளின் மதிப்பை அனுபவத்தில் நான் அதிகம் அறிந்திருக்கிறேன். எத்தனையோ குடும்பங்களின் துயரில் பங்கேற்று இருக்கிறேன்.

அச்சம் வேண்டாம். பாதுகாப்புடனும் இருங்கள்.
நான் ஏன் பிறந்தேன்?
பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி கொல்லப்பட்டு விட்டானே? என்ற அச்சத்தில் மகிழ்மதி மக்கள் திரண்டிருக்க, வஞ்சம் நிறைந்த அச்சூழலில், பிறந்த பச்சிளம் குழந்தையைத் தாங்கிய தனது இரு கைகளை தலைக்கு மேல் உயர்த்தி இதோ, உங்கள் புதிய அரசன் மகேந்திர பாகு பலி என ராஜமாதா அறிவிக்கும் காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.

எனது ஜனனமும் அப்படியே நிகழ்ந்தது.
1955 களில், பாகுபலியை மகிழ்மதி மக்கள் இழந்தது போல், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் போட்ட தங்களின் வியர்வை வீசும் சேமிப்புகளை மக்கள் இழந்திருந்தனர்.

25 தனியார் இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன. 1955ஆம் ஆண்டு கணக்கு களை 66 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கெடு தேதி தாண்டியும் சமர்ப்பிக்காமல் இருந்தன.

1954 கணக்குகளை சமர்ப்பிக்காத தனியார் நிறுவனங்கள் 23. சிறப்பு நிர்வாக அலுவலரின் கைக்கு வந்துவிட்ட 11 நிறுவனங்களையும் சேர்த்தால் 100 நிறுவனங்கள் சிக்கலில் இருந்தன.

நாடாளு மன்றத்தில் பேசிய ஃபெரோஸ் காந்தி, ஆம் இந்திரா காந்தியின் கணவர், “பல தனியார் கம்பெனிகளை காணவில்லை… கம்பெனிகள் இருந்தால் மேலாண்மை இயக்குனர்களைக் காணவில்லை”. என்றார்.

அந்த நேரத்தில்தான் மகேந்திர பாகு பலியை கரங்களில் ராஜமாதா தாங்கியது போல என்னை பாரத மாதா தாங்கியிருந்தாள்.

ஜனவரி 19, 1956 நான் கருக் கொண்ட நாள். அன்றுதான் 245 நிறுவனங்கள் தேசியமயமாகிறது என்ற அறிவிப்பை அன்றைய நிதியமைச்சர் சிந்தா மணி தேஷ்முக் அறிவிக்கிறார்.

செப்டம்பர் 1ல் நான் உதய மானேன். பாரத மாதாவின் மடியில் தவழத் துவங்கினேன்.

என் மீது பாரத அன்னைக்கு நிறைய எதிர்பார்ப்புகள். என் கடமைகள் என்ன என்பதை என்னைத் தாலாட்டும் போதே சொன்னாள். “இன்சூரன்ஸ் பாதுகாப்பை இந்த நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துச் செல்” என்றாள். “இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் சேமிப்புகளைத் திரட்டிக் கொண்டு வா” என்றாள்.

தாய் மாமன் போல என் ஜனனத்தை கனவு கண்டவர்கள் உண்டு. பிறந்த போது கொண்டாடியவர்கள் உண்டு. ஆம்… எனது பிறப்பிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1951 ஜூலை 1ஆம் தேதியன்றே, “இந்திய ஆயுள் இன்சூரன்ஸை தேசியமயமாக்க வேண்டும்” என்பதை தங்களது முதல் தீர்மானமாக தனது துவக்க மாநாட்டில் வாசித்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

நான் கருக் கொண்ட தை நாடாளுமன்றத்தில் அறிவித்த சிந்தாமணி தேஷ்முக் “நான் இங்கு ஒன்றை கூடுதலாக கூற விழைகிறேன். தேசிய மய முடிவை வரவேற்று நான் பெற்ற முதல் தந்தி இன்சூரன்ஸ் ஊழியர்களிடம் இருந்து” என தாய் மாமன் மகிழ்ச்சியை அந்த சபைக்குத் தெரிவித்தார். அந்த அரவணைப்பை இன்று வரை நான் உணர்கிறேன்.

அலுவலகத்திற்குள் நேர்மையான சேவையை தருவதன் மூலம் எனக்கு சமூகத்தில் நற்பெயர் தருகிற முதல்நிலை அதிகாரிகளின், ஊழியர்களின் பங்களிப்பையும் நினைவு கூர்கிறேன்.

நான் தவழ்ந்து, நடை பயின்று, நாடு முழுவதும் மக்களாகிய உங்களைத் தேடி ஓடினேன். அன்னை செவிக ளில் கொஞ்சி சொன்ன கடமைகளை நினைவில் கொண்டு நிறைவேற்றினேன்.

“கடைக்கோடி மனிதனுக்கும் ஆயுள் காப்பீடு பாதுகாப்பு சென்றடைய வேண்டும்”.

இன்று 65 ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கிறேன்.
1956ல் இந்தியாவின் மக்கள் தொகை 41 கோடி. எல்.ஐ.சியின் பாலிசிகள் 55 லட்சம். 2020ல் மக்கள் தொகை 138 கோடி. பாலிசிகளோ 42 கோடி. எனதருமை மக்களே… மக்கள் தொகை 3 மடங்குக்கு கொஞ்சம் அதிகமாக வளர்ந்துள்ளது. ஆனால் பாலிசி எண்ணிக்கையோ 76 மடங்கு பெருகி யுள்ளது.

காரணம் எனது கரங்கள் இரண்டிற்குள் ஒளிர்ந்த அகல் விளக்கு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்றது. சமூகத்தின் அடித்தள மக்களின் குடிசைகள், குக்கிராமங்களில் கூட அது இன்சூரன்ஸ் ஒளியை ஏற்றியது.

எல்.ஐ.சி முகவர்கள் (LIC Agents). வளர்ச்சி அதிகாரிகள் (Development Officers)
என் தூதர்களாக உங்கள் மத்தியில் வலம் வரும் 11 லட்சம் எல்.ஐ.சி முகவர்களை (LIC Agents) நான் சொல்லாமல் இருக்கலாமா? வளர்ச்சி அதிகாரிகளை குறிப்பிடாமல் இருக்கலாமா? அவர்கள் இல்லாமல் என் பயணம் கிடையாது.

இன்சூரன்ஸ் விழிப்பு ணர்வு இல்லாத 1960, 70களில் இவ்வூழியர்கள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா? உங்களோடு அளவளாவி, இன்சூரன்ஸின் அருமையை எடுத்துச் சொல்லி, மனதால் நெருங்கி எனக்கும் உங்களுக்கும் இடையே உறவுப் பாலம் அமைத்தவர்களல்லவா!

இன்றும், ஆன்லைன்… கார்ப்பரேட் முகவர்கள்… புரோக்கர்கள்… பாங்கஸ்யூரன்ஸ்… இப்படி எத்தனையோ வழிகள் வணிகத்திற்காக திறந்தும், 95 சதவீத வணிகத்தை இந்த முகவர்களும், வளர்ச்சி அதிகாரிகளும் தான் கொண்டு வருகிறார்கள்.

இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் கூட மொத்தம் விற்பனையான 1912611 பாலிசிகளில் இவர்கள் கொண்டு வந்தது 1832830 பாலிசி கள். 11 லட்சம் பேர் என்னைச் சார்ந்து வாழ்வாதாரத்தைக் கொண்டிருப்பது போல் இந்தியாவில் வேறு எந்த நிறுவ னத்திற்கு இத்தனை பேர் இருக்கிறார்கள்!

“மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே”
இதுவும் தாலாட்டின் போது என் காதுகளில் விழுந்த வார்த்தைகள்.

நான் பிறந்த போது இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமும் பிறந்தது. 184 கோடிகள் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு அன்று எனது பங்களிப்பு. ஐந்தாண்டுத் திட்டங்களும் என்னோடு சேர்ந்தே வளர்ந்தன.

எனது வலிமையின் காரணமாக அத்திட்டங்களை என் தோள்களில் சுமந்தேன். என் முதுகின் மீது ஏறி இலக்குகளை அவை தொட்ட துண்டு.

ரயில், நெடுஞ்சாலை, மின்சாரம், குடிநீர், சாக்கடை வசதிகள் என எவ்வளவோ சவாரிகளுக்கு என் தோள் கொடுத்தேன். முதுகு மீது ஏறச் சொன்னேன்.

இந்த பட்டிய லைப் பாருங்கள். இது என்னால் 1956லிருந்து ஐந்தாண்டுத் திட்டங்கள் வளர்ந்த கதை. அழகான சித்திரக் கதை.

திட்டம் தொகை திட்டம் தொகை திட்டம் தொகை

       II                184             VI                  7140            X              394779
      III                285             VII                 12969          XI             704720 
      IV               1530           VIII                 56097         XII            1423055
       V               2942           IX                  170929

இதுவரை மொத்தம் சுமார் 34 லட்சம் கோடிகள் அரசுத் திட்டங்களுக்கு என்னாைல் தரப்பட்டுள்ளது. அரசு உத்தரவாதம் என்ற கவச குண்டலமும் எனக்கு உண்டு. கர்ணன் எப்படி வாரி வழங்கினானோ அப்படி நானும் இந்தியப் பொருளாதாரத்திற்கு வழங்கி வருகிறேன்.

ஆனாலும் அரசு உத்தரவாதம் என்கிற கவச குண்டலத்தைப் பயன் படுத்துகிற தேவை ஒரு தடவை கூட எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு கவசம் தேவைப்படவில்லை. ஆனால் நான் இந்த தேசத்திற்கு கவசமாக இருந்துள்ளேன்.

எனது 65வது பிறந்த நாளை உங்களோடு கொண்டாடு வதை விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

அன்புடன்,
எல்.ஐ.சி
—————————————————————————————————————-

நாங்கள் மக்கள் பேசுகிறோம்!
🌼🌼🌼🌼🌼🌼🌼
எங்கள் அன்பு எல்.ஐ.சியே! பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது வார்த்தைகள் உண்மையானவை. எங்களை நெகிழ வைக்கிறது.

நீ எங்கள் மனதில் நிற்பதற்கு காரணமே நீ வார்த்தையை காப்பாற்றுவதால்தானே. எங்கள் சேமிப்பை உன்னிடம் தந்த பிறகு எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறோம்!

ஆகவே உன் வலிமை எங்கள் சேமிப்பின் வலிமை. தேசத்தின் வலிமை.

பாரத மாதா உன்னை உயர்த்தி காண்பித்து காப்பீட்டு தேசத்தின் அரசுரிமைக்கானவராய் அறிவித்த நாள் இந்திய பொருளாதார வரலாற்றில் முக்கியமான நாள்.

நீ வளர்ந்த கதை நாங்கள் வளர்ந்த கதை. இந்த தேசம் வளர்ந்த கதை. அக் கதையின் இரண்டாம் பகுதிக்கு வருகிறோம்.

1980களுக்குப் பின் நீ நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறாய்.
பழுத்த மரத்தில் கல்லடி படாமல் இருக்க முடியுமா? அந்நியர் கண்கள் முதலில் விழுந்தன. பிறகு உள்நாட்டுத் தனியார் கண்களும் விழுந்தன.

1981ல் எல்.ஐ.சியை ஐந்து கூறுகளாக பிரிக்கிற மசோதா, 1989ல் இந்திய இன்சூரன்ஸ் துறையை திறக்குமாறு மிரட்டிய அமெரிக்க வர்த்தகச் சட்டம் சூப்பர் 301 ஆகியன வந்தன.

எங்களால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை மறக்கவே முடியாது. முகவர்கள் வணிகக் குடையை உனக்கு பிடித்தார்கள் என்றால் தனியார்மய வெயிலில் நாங்கள் வாடாமல் நிழல் தந்தவர்கள் இந்த ஊழியர்கள்.

இவர்கள் போராடாவிட்டால் இன்று 65 வயதை கொண்டாடுகிற நீ இந்த உருவில் இருந்திருக்க மாட்டாய்.

ஐந்து கூறுகளாய் எல்.ஐ.சியைப் கூறு போடுகிற மசோதாவை அவர்கள் தடுத்து நிறுத்தி இருக்காவிட்டால்… அமெரிக்க வர்த்தகச் சட்டத்திற்கு இந்த துறை இரையாக்கப்பட்டிருந்தால்…. இவ்வளவு பெரிய குடையை இந்த நாட்டு மக்களுக்காக உன்னால் விரித்திருக்க இயலாது.

கைகேயி கேட்ட இரண்டு வரங்கள் என்ற பெரும் அபாயம் 1990களில் கதவுகளைத் தட்டத் துவங்கியது. “பரதன் நாடாள வேண்டும்” என்பது முதல் வரம்.

அது போல 1994ல் அரசு போட்ட மல்கோத்ரா குழு அந்நியர்களை, தனியார்களை இந்திய இன்சூரன்ஸ் துறையில் மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றது.

கைகேயி ஒரு வரத்தோடு நிறுத்தவில்லையே! காரணம், இராமன் நாட்டில் இருந்தால் எப்படி மக்கள் பரதனை நாடாள அனுமதிப்பார்கள்? ஆகவே இராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போக வேண்டும்.

அது போல மல்கோத்ரா குழு சொன்னது. எல்.ஐ.சியின் 50 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்றுவிட வேண்டும். எல்.ஐ.சி அப்படியே இருந்தால் மக்கள் எப்படி அந்நியர், தனியார்களை திரும்பிப் பார்ப்பார்கள். வரலாற்று சக்கரத்தை அப்படியே பின்னோக்கி சுழற்ற முயற்சித்தார்கள்.

மீண்டும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் எங்கள் மத்தியில் வந்தார்கள். இந்தியாவின் தெருக்கள் முழுவதும் கைகளில் கையெழுத்து படிவங்களோடு, முதலில் 65 லட்சம் – இரண்டாவது முறை ஒன்றரைக் கோடி பேர் உனக்காக, நீ எங்களுக்கு ஆற்றும் சேவைக்காக கையெழுத்திட்டோம்.

ஐந்து ஆண்டுகள் மல்கோத்ரா குழு அறிக்கையை அரசால் அமலாக்க முடியவில்லை. 1997ல் நாடாளுமன்றம் வரை வந்த மசோதா இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பால் பின் வாங்கியது. இடது சாரிகளையும் எங்களால் மறக்க இயலாது.

1999 – இந்திய இன்சூரன்ஸ் துறையில் தனியாரை- 26 சதவீத அந்நிய முதலீட்டோடு அனுமதிக்கிற ஐ.ஆர்.டி.ஏ சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் உனது அரசுத் தன்மை 100 சதவீதம் நீடித்தது. பெரிய பெரிய வெளி நாட்டு பிராண்டுகள் – உள்நாட்டு பிராண்டுகள் களத்தில் உன்னோடு போட்டியில் குதித்தன. இது புதிய அனுபவம்தான்.

ஆனால் மக்கள் நம்பிக்கை என்ற ஆயுதம்தான் உன் கைகளில் இருக்கிறதே! சந்தைப் போரில் இன்று வரை விடாமல் அவர்களை முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தி வருகிறாய்.

2020ல் 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு மோதி 75 சதவீத சந்தைப் பங்கை தக்க வைத்திருக்கிறாய். போட்டியாளர்கள் மலைக்கிறார்கள். ஒரு அரசு நிறுவனத்திற்கு இவ்வளவு மக்கள் ஆதரவா என்று.

எல்.ஐ.சி பங்கு விற்பனையே அடுத்த கட்டம் என ஆட்சியாளர்கள் நகர்கிறார்கள். 2008லேயே ஒருமுறை எல்.ஐ.சி சட்டத் திருத்தம் என முயற்சித்தார்கள். முடியவில்லை. 2015ல் அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவதை செய்தார்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் நீ வளர்ந்தாய். தேசத்தின் வளர்ச்சிக்கும் துணை நின்றாய். இன்று வரை உனக்கு இடப்பட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தில் தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறாய்.

42 கோடி பாலிசிகளோடு எங்களை சுமந்து கொண்டு நீ ஓடுவது எவ்வளவு இனிமையானது. இதுதானே இந்திய அன்னையின் கனவு.

மக்கள் நாங்கள், இன்னும் உன் மீது நிறைய எதிர்பார்ப்புகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அதிலொன்று “இன்சூரன்ஸ் பாதுகாப்பு இடைவெளி”. அதாவது தங்கள் ஆண்டு வருமானத்தைப் போல 10 மடங்கு காப்பீட்டுத் தொகைக்கு மக்கள் பாலிசிகள் எடுத்திருக்க வேண்டும். நீ எங்கள் கதவுகளை எல்லாம் தட்டுவதால் உனக்கு எங்களில் பலர் வருமானம் இல்லாமல், பணிப் பாதுகாப்பு இல்லாமல், கைக்கும் வாய்க்கும் எட்டாமல் தவிப்பதெல்லாம் தெரியும். அதுவும் இந்த இடைவெளிக்கு காரணம்

.“வாங்கும் சக்தி” மக்களாகிய எங்கள் கைகளில் அதிகரிக்க வேண்டும். இது எல்லாமே உன் கைகளில் இல்லாவிட்டாலும், எங்களின் ஆதங்கத்தையும் சேர்த்து உன்னிடம் சொல்கிறோம்.

ஆனாலும் உன் கரங்களால், விரல்களால் பற்றி எங்கள் எல்லோரையும் அழைத்து செல்கிறாய். வெற்றியும் பெற்றுள்ளாய். வாங்கும் சக்தி உள்ளவர்கள், வசதி படைத்தவர்களும் உன்னையே நம்பி இருக்கிறார்கள். ஆகவே இந்த இடைவெளி இன்னும் சுருங்கும்.

2020ல் மீண்டும் பங்கு விற்பனை கதவுகளை தட்டுகிறது. 5லிருந்து 10 சதவீதம் வரையிலாவது பங்கு விற்பனை செய்து விட வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

இதிலேயே 1 லட்சம் கோடி கிடைக்கும், பட்ஜெட் பள்ளத்தை நிரப்பலாம் என கணக்கு போடுகிறார்கள். ஆனால் விசித்திரமான நாடகத்தை இன்று இந்தியா பார்க்கிறது.

வழக்கமாக தனியார் மயத்திற்கு சொல்லப்படும் காரணங்களை ஆட்சியாளர்கள் உன் மீது சொல்ல முடியவில்லை. நஷ்டம், திறமையின்மை, சேவை பரவலில்லை, நுகர்வோர் தெரிவு குறைவு… இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூட உன் மீது வைக்க முடியவில்லை.

100 கோடி முதலீட்டில் ஆண்டுக்காண்டு அரசுக்கு 2600 கோடி டிவிடெண்ட், 10000 கோடி செலுத்துகிற வரிகள், ஒவ்வொரு ஆண்டும் ரூ .4 லட்சம் வரை முதலீடுகளுக்கு தரும் உபரி… எங்கே இது நடக்கும்! எங்கள் ஆதரவு உண்டு. எங்கள் சேமிப்பு எங்கள் வியர்வை. எங்கள் ரத்தம்

புதிய வாதங்களை ஆட்சியாளர்கள் முன் வைக்கிறார்கள். ஒரு காரணம், பங்குச் சந்தையில் உள்ள சில்லரை முதலீட்டாளர்கள் பயன்பெறுவார்கள் என்கிறார்கள். எல்.ஐ.சியின் மீதான கண்காணிப்பு செபி போன்ற நிறுவனங்களால் பலப்படும் என்கிறார்கள்.

இவர்கள் உன்னை சீர்குலைத்துவிடச் சொல்லும் சப்பைக் காரணங்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பங்குச்சந்தையின் சில்லரை முதலீட்டாளர்கள் இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் கூட கிடையாது. ஆனால் 42 கோடி பாலிசிகளை வைத்திருக்கும் எங்கள் கருத்து அல்லவா முக்கியமானது!

எல்.ஐ.சியை நாடாளுமன்றமே கண்காணித்து வருகிறது. ஐ.ஆர்.டி.ஏ கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் என்ன பலவீனங்களை அவர்கள் கண்டிருக்கிறார்கள்!

ஆனால் செபி கட்டுப்பாட்டை மீறி எத்தனை மோசடிகள் பங்கு சந்தையில்… அர்சத் மேத்தா, கேதன் பரேக், சத்யம் ராமலிங்கராஜ், இப்ப கூட நீரவ் மோடி… இப்படி எத்தனை எத்தனை….

ஆகவே இந்த புதிய அம்புகளும் முறிந்து போகும், முனை மழுங்கி கீழே விழும்.

அபாயங்கள் வரலாம்.

ஆனால் எங்கள் ஆதரவோடு நீ (எல்.ஐ.சி) எதிர்கொள்ளும்; இடர்களைக் கடக்கும். மக்கள் விரல்களும் எல்.ஐ.சியின் விரல்கள் கோர்க்கும் போது கவலை ஏது!

கோவிட் காலத்திலும் உன் கதவுகள் திறந்து இருக்கின்றன. உன் தூதர்கள் முகவர்கள் எங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

பாரத மாதா கைகளில் ஏந்தி எங்களுக்காக அர்ப்பணித்த பாகுபலியாய் உன் கடமை தொடரட்டும்.

2020 செப் 1, இன்று உனது 65ஆவது பிறந்த நாள். எல்லோருக்கும் ஆண்டு கூடக் கூட வயது கூடும். உனக்கோ ஆண்டு கூட கூட இளமை கூடுகிறது.

காரணம் ஒவ்வொரு புதிய ஆண்டிலும் கோடிக் கணக்கான புதிய பாலிசிகளை பெறுகிறாய். புதிய முகங்களைப் பார்க்கிறாய். எப்படி உனக்கு வயதாகும்!

உன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட வேறு என்ன மகிழ்ச்சி!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றென்றும் உன்னை நேசிக்கும்
இந்தியக் குடிமக்கள்.

கட்டுரையாளர்கள்
–க.சுவாமிநாதன் & நா.சுரேஷ்குமார்
நன்றி. தீக்கதிர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.