கொரொனா சூழலையும், பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள உலக வங்கி தந்துள்ள கடன் இந்தியாவுக்கு பலன் தருமா?

இரமணன்

உலக வங்கி கொரோனா தொற்றை எதிர்கொள்ள இந்தியாவிற்கு $1பில்லியன் (ரூ 7000/- கோடி) கடன் வழங்கியுள்ளது. இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. குறிப்பாக ‘உலகளாவிய தகுதி’ (Universal Eligibility) என்பது.

அரசாங்கம் ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது அதற்குத் தேவையான மூலப்பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்குவதற்கு சில “முன்னுரிமைகள் அளிப்பது” நடைமுறையில் இருக்கிறது. பொதுத் துறையில் வாங்குவது, சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் குறித்த கொள்கை, புதிய நிறுவனங்களுக்கு சில சாதகங்கள் போன்றவையே அவை. உலக வங்கி அளிக்கும் கடனைப் பயன்படுத்துவதில் இவைகளை எல்லாம் அமலாக்கக் கூடாது என்பதே உலகளாவிய தகுதி, அதாவது யூனிவெர்சல் எலிஜிபிலிட்டி. இதைத் தவிர கொள்முதல் ஆவணங்களைப் பரிசீலிக்கும் உரிமை, கணக்குகளையும் ஆவணங்களையும் ஆய்வு செய்யவும் தணிக்கை செய்யவும் உரிமை ஆகிய நிபந்தனைகளையும் கட்டாயமாக்கியிருக்கிறது.

இந்தக் கடன் ‘கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டம்’ என்பதற்காக வழங்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகமும் இதை செயல்படுத்தும் ஒரு துறையாகும். அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ 399.36 கோடிகளாகும். ரயில்வே அமைச்சகம் மண்டல ரயில்வேகளுக்கும் உற்பத்தி ஆலைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் “முன்னுரிமை குறித்த வாசகங்கள்” கோரிக்கை ஆவணங்களில் (Tender Documents) இடம் பெறாத வகையில் திருத்தப்பட வேண்டுமென்று கூறியுள்ளது. என்ன அர்த்தம் தெரிகிறதா! உலக வங்கி நிபந்தனைகளுக்கு மாறாக எதுவும் அதில் இடம் பெற்று விடக் கூடாது என்பதுதான்.

மேலும் ஒப்பந்ததாரர்கள் உலக வங்கியின் வழிகாட்டுதல்களையும் (கையூட்டும் உள்ளிட்டு?) ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள நடைமுறைகளையும் ஏற்றுக்கொள்வதையும் உறுதி செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் உலக வங்கி குறித்து சில விவரங்களை தெரிந்துகொள்ளலாம். உலக வங்கி (World Bank) பிரட்டன் வுட்ஸ் மாநாடு (Bretton Woods Conference) என்றழைக்கப்படும் ‘ஐக்கிய நாடுகளின் நாணய மற்றும் நிதி மாநாட்டில்’ 1944ல் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரு புதிய பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவதற்காக இது தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமான “சர்வதேச வளர்ச்சி மற்றும் மறுகட்டுமானத்திற்கான வங்கி” (International Bank for Reconstruction and Development -IBRD) என்பது இதன் அன்றைய நோக்கத்தை வெளிப்படுத்துவது ஆகும். தனது செயல்பாடுகளை 1946ல் தொடங்கிய உலக வங்கியின் செயல்பாடுகள் முதலில் போரினால் அழிவற்றிருந்த மேற்கு ஐரோப்பாவின் மறு கட்டமைப்பு நோக்கி முடுக்கிவிடப்பட்டது. 1950களுக்குப் பிறகு வளரும் நாடுகளில் சாலைகள். அணைக்கட்டுகள், மின்சாரம், குடிநீர், வடிகால், வணிக துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றிற்கு தேவையான நிதி உதவியில் பெரும் பங்கு வகிக்கத் தொடங்கியது.
இதில் IBRD, IDA, IFC, MIGA, ICSID ஆகிய ஐந்து உறுப்புகள் உள்ளன.

IBRD – நடுத்தர வருமான நாடுகளுக்கும் திருப்பி செலுத்தும் சக்தி உள்ள குறைந்த வருமான நாடுகளுக்கும் சாதாரண வட்டி விகிதத்தில்(Market rate) கடன் தருவது.

IDA – குறைந்த வருமான நாடுகளில் சுகாதாரம், கல்வி, கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றிற்காக நீண்ட கால வட்டியில்லாக் கடன் வழங்குவது.

IFC – வளரும் நாடுகளிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு கடன், கடன் உத்திரவாதம், பங்குநிதி உதவி ஆகியவற்றை தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து செய்வது.

MIGA – வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வளரும் நாடுகளில் வணிகத்திற்கு வெளியே ஏற்படும் இடர்களுக்கு எதிரான காப்பீடு, கடன் உத்திரவாதம் ஆகியவற்றை செய்வது

ICSID – வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையில் ஏற்படும் தாவாக்களை தீர்ப்பது.

உலக வங்கி மூன்றுவகையான கடன்களை கொடுக்கிறது…

1. குறிப்பிட்ட திட்டங்களுக்கானது.
2. குறிப்பிட்ட துறைகளுக்கானது.
3. பொருளாதாரக் கட்டமைப்புக்காக (Structural Adjustments Loans – SALs).

மூன்றாவது கடன்தான் நாம் கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. தாராளமயம், தனியார்மயம், நிதித்துறை சீரமைப்பு, வரி சீரமைப்பு, அரசின் பட்ஜெட் பற்றாகுறை சரி செய்தல் போன்ற நிபந்தனைகளின் பேரிலேயே இந்த வகைக் கடன்கள் தரப்படுகின்றன.

வங்கியின் கட்டமைப்பு பற்றிய பார்வை முக்கியமானது. உலக வங்கி ஐநா சபையுடன் தொடர்புடையது என்றாலும் அது பொதுக்குழுவிற்கோ பாதுகாப்பு கவுன்சிலுக்கோ கடமைப்பட்டதல்ல. 180க்கும் மேற்பட்ட அதன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆளுநர் குழு வருடத்திற்கு ஒரு முறை கூடுகிறது. கொள்கை முடிவெடுப்பதில் அவர்களுக்கு சில அதிகாரங்கள் இருந்தாலும் உண்மையான முடிவெடுக்கும் அதிகாரம் 25 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவிற்கே உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் ஒவ்வொரு பிரிதிநிதிகளையும் மற்ற நாடுகள் பிராந்தியக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கின்றன. உலக வங்கியின் வரலாற்றில் வங்கியின் தலைவர் அமெரிக்க குடிமகனாகவே இருந்திருக்கிறார்.
வங்கியில் ஒரு நாட்டிற்கான வாக்குரிமை,அந்த நாடு வங்கியில் செலுத்தியிருக்கும் மூலதனத்தைப் பொறுத்தது. பணக்கார, வளர்ந்த நாடுகள் வங்கியின் பெரும்பான்மை பங்கு முதலீட்டாளர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் வங்கியின் செயல்பாடுகளில் அதிக அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மொத்த வாக்கில் ஆறில் ஒரு பங்கு பெற்றிருந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பானைவிட இது இரண்டு மடங்கு அதிகம். வளரும் நாடுகள் குறைந்த அளவே வாக்குகள் பெற்றிருப்பதால் அவைகளின் குரலுக்கு பெரிய மதிப்பு எதுவும் இருப்பதில்லை. ஆனால் அவைகள்தான் வங்கியின் கடன்களையும் ஆலோசனைகளையும் பெறும் முக்கிய நாடுகள்.

உலக வங்கியில் 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் கால்பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர். உறுப்பு நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. பல நாடுகளில் நிதி அமைச்சகத்திற்கும் மற்ற துறைக்கும் இந்த ஊழியர்கள் நேரிடையாக ஆலோசகர்களாக விளங்குகின்றனர். உலக நிதிச் சந்தை மற்றும் நிறுவனங்களுடன் அலுவலக ரீதியல்லாத கலந்தாலோசனை, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலுள்ள தன்னார்வக் குழுக்களுடன் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

* 1980களில் உலகப் மந்தம், கடுமையான வட்டி விகிதங்கள், மூலப் பொருட்களின் விலை சரிவு, எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை கடன் நெருக்கடியை ஏற்படுத்தியது. பல வளரும் நாடுகள் பன்னாட்டு கடன் நிறுவனங்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

கடன் வாங்கிய நாடுகளில் பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான அடிப்படையை அமைப்பதில் இந்தக் கடன்கள் தோல்வியடைந்து விட்டதை பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரும்பாலான வளரும் நாடுகளில் சராசரி வருமானம், முதலீடு, இறக்குமதி ஆகியவை வெகுவாகக் குறைந்துவிட்டன. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் தொகை குறையவில்லை. மாறாக உலக ஏழ்மை அதிகரித்திருக்கின்றது. வங்கியின் நடவடிக்கைகள் சுற்று சூழல், பொது சுகாதாரம், கலாச்சாரப் பன்முகத் தன்மை ஆகியவற்றிற்கு பாதகமாக உள்ளன என்று குற்றம் சாட்டப்படுகிறது. உலக வங்கியும் பன்னாட்டு நிதி நிறுவனமும்தான் சீரமைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.
ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

இந்தியாவில் சிங்ராலி மிகை அனல்மின் நிலையம் 1994ல் அமைக்கப்பட்ட போது ஐம்பதாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதற்கு முன் 1993ல் உலக வங்கியின் குழு ஒன்று அங்கு வருவதை முன்னிட்டு பல வீடுகள் இடிக்கப்பட்டு அங்குள்ளவர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாமல் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வருடம் (2020) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருவதை முன்னிட்டு குஜராத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டதை இதனுடன் சேர்த்துப் பார்க்கலாம். இந்த பிரம்மாண்ட திட்ட முதலீட்டால் அந்தப் பகுதியில் கரி மற்றும் சாம்பல் தூளினால் கடுமையான காற்று மாசு உண்டாகி அதிக அளவில் நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டன. மேலும் வேலையில்லாத் திண்டாட்டம், குறைவான நட்ட ஈடு, வீட்டுவசதிப் பற்றாக்குறை, குடிநீர் மாசு ஆகியவற்றிற்கு இட்டு சென்றது. ஆக உலக வங்கியின் ‘மனிதத் தன்மையுடன் கூடிய சீரமைப்பு’ (Adjustment with Human Face) என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உலக வங்கி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நலனுக்கானது என்று குற்றம் சாட்டப்படுகிறது. பல வளரும் நாடுகளின் எதிர்பார்ப்பை அது நிறைவு செய்யவில்லை.

மீண்டும் இப்பொழுது கொரோனாவிற்காக உலக வங்கி அளிக்கும் கடனிற்கு வருவோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய கடனை ஏற்றுக்கொள்வதா அல்லது வேறு வழிகள் இருக்கின்றனவா? இந்த காலகட்டத்தில்தான் அரசாங்கம் நிறுவனங்களுக்கு வராக்கடன் தள்ளுபடி செய்கிறது; வரிச் சலுகை வாரி வழங்குகிறது என்பதைப் பார்க்கும்போது கொரோனாவை எதிர்கொள்ளவும் அரசிடம் நிதி ஆதாரங்களைத் திரட்டுகிற வாய்ப்புகள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. எனவே நமது அரசின் பொருளாதாரக் கொள்கை வழிகளை நிர்ப்பந்திக்கும் நிபந்தனைகளுடன் கூடிய கடன் தேவையா என்பது கேள்வி. மேலும் உலக வங்கியை சார்ந்திருக்கும் வளரும் நாடுகள் ஒன்றுபட்டு அதற்கு மாற்று வழிகளை காண வேண்டும்.

— கட்டுரையாளர் இரமணன் (எல்.ஐ.சி அதிகாரி -பணி ஓய்வு- சென்னை).

//உசாத் துணைகள்// (REFERENCES)

https://www.insightsonindia.com/2020/09/21/what-is-universal-eligibility-condition/

https://www.thehindu.com/news/national/no-preference-for-make-in-india-in-world-bank-project-to-curb-covid/article32655167.ece
https://www.britannica.com/topic/World-Bank

World Bank (WB): Origin, Functions, Objectives and Critical Evaluation

******
செவ்வானம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.