கிராமத்து நிலங்களை வளைத்துப் போட்டு பயோ டீசல் தொழிற்சாலையை நிறுவ நினைக்கும் தொழிலதிபரும், விவசாயத்தாலேயே மாற்றம் ஏற்படும் என்று நிரூபிக்கப் போராடும் இளைஞனும் மோதினால் அதுவே ‘லாபம்’.

தன் சொந்த ஊரான பெருவயல் கிராமத்துக்கு சுமார் ஆறேழு வருடங்களுக்குப் பிறகு வருகிறார் பக்கிரி என்கிற பக்கிரிசாமி (விஜய் சேதுபதி). விவசாயம் பொய்த்துப் போனதாக மக்கள் ஊரை விட்டே கிளம்பிக் கொண்டிருக்க பக்கிரியைக் கண்டதும் தங்கள் துயரம் தீர்க்க வந்த பெருமகன் என்று கொண்டாடுகிறார்கள். சில பல தடைகளுக்குப் பிறகு விவசாயத்தால் ஊரையும், ஊர் மக்களையும் செழிப்பாக்க முடியும் என்று விளக்கம் அளிக்கிறார் பக்கிரி. அதைச் செயல்படுத்துவதற்காக விவசாய சங்கத் தலைவராகவும் ஆகிறார். நண்பர்கள் படை சூழ கூட்டுப் பண்ணை விவசாய முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இடையில் சர்க்கரை ஆலை, பருத்தி ஆலைக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று விளைபொருள் என்னவாக மாறுகிறது, அதிலிருந்து என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்று நேரடியாக விளக்குகிறார்.

கூட்டுப் பண்ணை விவசாய முறைக்கு கிராம மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இதை விரும்பாத தொழிலதிபர் வணங்காமுடி (ஜெகபதி பாபு) ஊரில் இருக்கும் சர்க்கரை ஆலை, பருத்தி ஆலை அதிபர்களுடன் இணைந்து சதி செய்கிறார். பக்கிரியை மக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவரைத் தவறாகச் சித்தரிக்கிறார். இந்நிலையில் பக்கிரி மீது திருட்டுப் பழி விழுகிறது. ஊர் மக்களே அவரை அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

யாருக்காகோ கஷ்டப்பட்டாரோ அவர்களே தன்னை நம்பவில்லை என்ற சூழலில் பக்கிரி என்ன செய்கிறார், நான்கு தொழிலதிபர்கள் ஊர் மக்களை ஏமாற்றுவதற்கான உண்மையான காரணம் என்ன, ஊர் மக்கள் பக்கிரியை பிறகு நம்பினார்களா, பெருவயல் கிராமத்து விளை நிலங்கள் என்னாயின, பயோ டீசல் தொழிற்சாலையை நிறுவ முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு சற்றே பெரிய அளவில் விளக்கம் சொல்கிறது திரைக்கதை.

‘இயற்கை’,‘பேராண்மை’,‘ஈ’,‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படங்களுக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் ‘லாபம்’. கலையும் தொழில்நுட்பமும் மக்களுக்கானது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய அவரது இறுதிப் படமாக ‘லாபம்’அமைந்துவிட்டதுதான் சோகம். தான் கொண்ட கொள்கையை, வர்க்கப் பிரச்சினையை, கார்ப்பரேட் எதிர்ப்பை, உலகமயமாதல், தனியார் மயமாதலின் விளைவை வழக்கம் போல் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ஜனநாதன். பிரச்சாரப் படம் என்பதை உணர்ந்தே அதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் தீவிரம் காட்டியுள்ளார்.

குருவுக்கு செய்யும் மரியாதையின் அடையாளமாக படத்தில் நடித்ததோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் விஜய் சேதுபதி. உடல்மொழி, வசன உச்சரிப்பு, நடிப்பு என அத்தனையிலும் வழக்கமும் பழக்கமுமான சேதுவையே பார்க்க முடிகிறது. கதாபாத்திரத்துக்காக, தோற்றத்துக்காக பெரிதாக மெனக்கெடல் இல்லை. சில இடங்களில் மட்டும் கொஞ்சம் கத்திப் பேசுகிறார். போகிற வருவோருக்கெல்லாம் விளக்கம் சொல்லியே ஓய்ந்து போகிறார். அனுபவ நடிப்பு மட்டும் சில இடங்களில் கை கொடுத்திருக்கிறது. ஆனாலும், கருத்தியல் ரீதியான கதைக்கான கருவியாக மாறி முன்வந்து நடித்ததற்காக விஜய் சேதுபதியைப் பாராட்டலாம்.

ஸ்ருதி ஹாசன் படத்தின் மையத்தில் வருகிறார். பாட்டு, காதல், கொஞ்சம் வசனம் என வந்து விவசாயிகளை ஒன்றுதிரட்டி பிறகு காரண காரியமில்லாமல் காணாமல் போகிறார். ஜெகபதி பாபு ஒப்புக்கு எதிர்நாயகனாக நடித்துள்ளார். அவரின் வில்லத்தனம் சரியாக வெளிப்படவில்லை. சாய் தன்ஷிகா காட்சிப் பொருளாக மட்டும் வந்து செல்கிறார்.

விஜய் சேதுபதியின் நண்பர்களாக கலையரசன், டேனியல், ரமேஷ் திலக், பிருத்வி பாண்டியராஜன், நிதீஷ் வீரா ஆகியோர் யதார்த்தமான நடிப்பில் மின்னுகிறார்கள். சண்முகராஜா, ஓஏகே சுந்தர், அழகன் தமிழ்மணி ஆகியோர் துணை வில்லன்களாக கடமை வீரன் கந்தசாமிகள் போல் வந்து செல்கிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், இமானின் இசையும், பின்னணியும் தொழில்நுட்ப அளவில் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

முதலாளித்துவத்தை எதிர்க்கும் நல்ல கதையை ஜனநாதன் எழுதியுள்ளார். ஆனால், அதைத் திரைக்கதை ஆக்கிய விதத்தில் சிக்கலும், குழப்பமும் தென்படுகின்றன. சமூகக் கருத்தைச் சொல்லும்போது 2 மணி நேரம் 30 நிமிடப் படத்தையும் வசனங்களால் கடத்த, விளக்க முற்படுவது அதீதம். அதனால் தொய்வு ஏற்படுகிறது. சில துண்டு துண்டான காட்சிகளும் படத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளன. லாபம் குறித்து சிறுமிக்கு விஜய் சேதுபதி அளிக்கும் விளக்கம், ஊருக்குப் புதிதாக வந்தவர் சங்கத்தில் வந்து சீனிவாச ராவ் பற்றிக் கேட்பது என சிலவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

படத்தின் முதல் காட்சியில் ஒரு லாரியில் இருந்து இறங்கும் விஜய் சேதுபதியிடம் டிரைவர் ‘முடிஞ்சா மறுபடியும் பார்க்கலாம்’ என்று சொல்ல ‘முடியும் கண்டிப்பா பார்க்கலாம்’ என்பார் விஜய் சேதுபதி.

ஜனநாதனின் நல்ல சிந்தனைக்காக இப்படத்தை கண்டிப்பாகப் பார்க்கலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.