எஸ். கண்ணன்

ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிட் கார் நிறுவனம், உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு செய்துள்ளது. கோவிட் பாதிப்பு தீவிரமான நிலையில், கைபேசிகளின் பயன்பாடு பொதுவாக பெரும் உயர்வை சந்தித்து இருக்கிறது. அதேபோல் கணிசமான நடுத்தர வர்க்கத்தினர் பொதுப் போக்குவரத்தை தவிர்க்கும் வகையில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயன்பாட்டை அதிகப்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர். கைபேசி உற்பத்தி செய்த நோக்கியா சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தியை நிறுத்தியது. சுமார் 30 ஆயிரம் தொழிலாளர் வேலை இழந்தனர். 

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 2021 முதல் ஜூன் 2021 காலத்தில், 14லட்சத்து 19 ஆயிரத்து 430 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஃபோர்டு நிறுவனமும் இதில் கணிசமான பங்களிப்பை செய்துள்ளது. 2020 ல் 2.39 சதம் அளவில், இந்திய சந்தையில் கார்களை விற்பனை செய்துள்ளது. கார் என்ஜின் 40 சதம் அளவிலும், 25 சதம் கார்களையும் 35 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறது. ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்வது என திட்டமிட்டாலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் அளவிலான கார்கள் சந்தையில் விற்பனை ஆகியுள்ளது.

மேற்படி விவரங்கள் உண்மை என்றால், ஏன் ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனம் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிக்கிறது. சந்தை சொல்லும் விவரங்களும் நாம் உற்பத்தி செய்யும் பொருள்களின் சந்தைப் படுத்தலும் முரண்பட்டு நிற்பது ஏன்? பொதுவாக சந்தையில் போட்டியிட முடியாத அளவிற்கு சிறிய நிறுவனமோ அல்லது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையில் பலவீனமாகவோ உள்ள நிறுவனம் அல்ல ஃபோர்டு. உலக அளவில் ஃபோர்டிஸம் என கூறும் அளவிற்கு உற்பத்தியிலும், சந்தைப் படுத்தலிலும் வெற்றி பெற்ற  நிறுவனம் ஆகும். 

ஃபோர்டு இந்தியா என அழைத்தாலும், சென்னை அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. 1995 ல் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மறைமலை நகரில் 350 ஏக்கர் நிலப்பரப்பில், பிரமாண்டமான கார் உற்பத்தி நிறுவனமாக உருவானது. 1998 ல் உற்பத்தி துவங்கியது. சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும், கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோட்டில் இருந்த ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனம் மூடப் பட்ட நிலையில், ஃபோர்டு வருகை இருந்தது. வேலைவாய்ப்பு படிப்படியாக உயர்ந்து, தற்போது 4000 நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். ஒப்பந்தம் மற்றும் கேண்டீன், போக்குவரத்து, உதிரி பாக நிறுவனங்கள் என கணக்கிட்டால் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஃபோர்டு சென்னை நிறுவனத்தை மையப்படுத்தி பணியாற்றி வருகின்றனர். 

ஒரு குடையின் கீழ் இருந்த உற்பத்தியை, அவுட்சோர்ஸ் மூலம் பிரித்து, தனித்தனியாக உதிரிபாக உற்பத்திகளை இணைக்கும் வேலையை பிரதான, பிராண்ட் பெயரை தாங்கும் நிறுவனம் செய்து கொள்ளும் வழக்கத்தை, அமெரிக்காவில் ஹென்றி ஃபோர்டு தான் உருவாக்கினார். அதனால் தான் ஃபோர்டிஸம் என சொல்லப்பட்டது. இதை உலகின் பிற நாடுகளிலும் பின்பற்ற துவங்கினர். சென்னையில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை துவங்கிய பின்னர், மறைமலை நகர் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான சிறு, குறு ஆலைகள், இந்திய மற்றும் பல்வேறு நாட்டு நிறுவனங்களால் துவக்கப்பட்டன. சென்னையின் புறநகர் வளர்ச்சியில், இது போன்ற நிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களால் உருவானது என்பதை மறுக்க முடியாது. 

இதைத் தொடர்ந்து சனந்த் ( குஜராத்) நிறுவனத்தையும் ஃபோர்டு இந்தியா 2014 ல் உருவாக்கியுள்ளது. சனந்திலும், நம் மறைமலைநகர் நிறுவனத்தில் குறிப்பிட்டது போன்ற வேலைவாய்ப்பு மற்றும் ஆலைகளின் வளர்ச்சி உருவானது.  மொத்தமாக 2 பில்லியன் டாலர் முதலீடு ( சுமார் 14000 கோடிரூபாய் இன்றைய மதிப்பில்) செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்படி 14000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி, 2022 ஏப்ரல் முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு செய்துள்ளது. 

இந்தியாவில் மேக் இன் இந்தியா பெயரில் நடந்த விளம்பரங்களும், உலக முதலீட்டாளர் மாநாடு போன்ற பெயரில் நடந்த நிகழ்வுகளும் மக்கள் அறிந்த ஒன்று. இதில் அகமதாபாத், சென்னை, மும்பை நகரங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்ததும், காணமுடிந்தது. இந்நிலையில், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், உலக அளவில் பெரும் நிறுவனமாக விளங்கி வரும் ஃபோர்டு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு செய்வது, அரசுகளின் கொள்கைக்கு முரணாக உள்ளது. இதை அரசுகளும், அரசியல் மற்றும் சமூக இயக்கங்களும் அலட்சியம் செய்ய முடியாது. 

இன்றைய மறைமலை நகர் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பகுதிகளாக அறியப் படுகிறது என்றால், அங்கிருந்த, நிலம், நீர்நிலைகள், நிலம் சார்ந்த வேலைவாய்ப்பு ஆகியவற்றை இழந்ததில் இருந்து உருவானது ஆகும். நிலம் சார்ந்த வேலைவாய்ப்பில் கிடைத்த வருவாயை விடவும், ஆலை சார்ந்த வேலைவாய்ப்பு முன்னேற்றத்தை அளித்தது என்றால் மிகை அல்ல. ஒன்றை இழந்து, புதிய ஒன்றை பெற்ற தொழிலாளர்கள் தற்போது நிரந்தரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தான் தற்போதைய ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு தமிழ் மக்களுக்கு பேரதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. 

நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்பு விருந்தல்ல, முடிந்தது, எழுந்து செல் என்பதற்கு. வேலைவாய்ப்பு என்பது வாழ்வாதாரத்துடன் இணைந்தது. சமூகத்தின் இதர உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான பொருளாதார சங்கிலி. அதை ஒரு நிறுவனம் லாப நஷ்ட கணக்கு மூலம் மூடுவது, என்பது, சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு உதவாது. உலக அரங்கில் வல்லுநர்கள் மற்றும் நாடுகளின் அரசுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (GDP) குறித்து, ஓய்வின்றி உரையாடுகின்றனர். 

Ford workers at Tamil Nadu plant seek state government's help: Report

ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராயும் நிலையில், அதிர்ச்சி அதிகரிக்கும். சுமார் 4000 நிரந்தர தொழிலாளர்கள், அனைத்து விதமான உயரதிகாரிகளும் சேர்த்து, இவர்களின் சராசரி மாத வருமானம் தோராயமாக ரூ 60 ஆயிரம் எனக் கொண்டால், 240 கோடி ரூபாய். இதனுடன் இணைந்த உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள் சுமார் 20 ஆயிரம் எனக் கொண்டால், அவர்களின் மாத சராசரி வருமானம் தோராயமாக ரூ 15 ஆயிரம் எனும்போது, ரூபாய் 300 கோடி, ஆக மொத்தத்தில் சுமார் 550 கோடி ரூபாய் சந்தை புழக்கத்தில் இருந்து விடுபடும் அபாயம் உள்ளது.

இதோடு முடிவதில்லை, மறைமுக வேலை வாய்ப்புகளாக உள்ள தேநீர் கடை, ஆட்டோ, மளிகை, ரியல் எஸ்டேட், இதர சேவை நிறுவனங்கள் என சங்கிலித் தொடரான பாதிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு போன்ற அறிவிப்புகள் ஏற்படுத்தும் பாதிப்பு, பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது ஆகும். 

என்ன செய்ய வேண்டும்?

முதலாவதாக உலகம் முழுவதும் 1.66 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பை வழங்கும் ஃபோர்டு, இந்தியாவில் சில ஆயிரம் வேலை வாய்ப்பை பாதுகாக்க, அதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்திய உற்பத்தியை தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை வேண்டும். 

இரண்டாவதாக, ஒன்றிய அரசின் தலையீடு மிக முக்கியமானது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், சனந்த் ஆலையாகும். அதேபோல் அவரும் அவருடைய ஆட்சியாளர்களும் தொடர்ந்து முழங்கி வரும் மேக் இன் இந்தியா என்ற அறிவிப்பு, தகர்ந்து தரை மட்டமாவதை உணர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மூன்றாவதாக, மாநிலத்தின் அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி வெளிவந்தது கவனிக்க தக்கது. வேறு ஒரு புகழ் பெற்ற நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தை எடுத்து கொள்ள இருப்பதாக செய்தி உள்ளது. அது உண்மையானால், தற்போதைய வேலை வாய்ப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு தலையீடு செய்வது அவசியம். 

நான்காவது, நாடு முழுவதும் வளர்ச்சி என்பது பெரும் கூக்குரலாக இருக்கிறது. பாஜகவும் அதன் கொள்கைகளும் மிகப்பெரிய அளவில் முதலீட்டாளர்களின் சொத்துக்களைப் பாதுகாத்து மேம்படுத்துகிறது. ஆனால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பதில்லை. சென்னை மற்றும் சனந்த் ஆலைகளின் தொழிலாளர்கள் 40 வயதுக்குள் உள்ளவர்கள். இனி இவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. வீடு, வாகனம், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்காக இந்த தொழிலாளர்கள் பெற்ற கடனுக்கு என்ன பதில் சொல்வர். வேலையின்மை அதிகரிக்கும் நாட்டில் வளர்ச்சியும், ஜி.டி.பி வளர்ச்சியும் எப்படி சாத்தியமாக முடியும்? ஒருவேளை ஃபோர்டு தனது அறிவிப்பை திரும்ப பெறாவிடில், அரசிடம் ஆலையை ஒப்படைத்து, வேலை வாய்ப்பை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நிறைவாக தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சி திருத்தம் செய்துள்ள தொழிலாளர் சட்டங்கள், மேலே கூறிய படி ஓட நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு கவசமாக உள்ளது. எனவே தான் சட்டத்திருத்தம் என்ற அபத்தத்தை, கொரானா பொது முடக்க காலத்தில் அவசர அவசரமாக செய்தது. ஃபோர்டு அறிவிப்பு அனுபவத்தில் இருந்து, தொழிலாளர் நலச்சட்டங்களை, மேலும் பலம் கொண்டதாக திருத்துவதே அவசியம். 

செவ்வானம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.