பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் அஷ்வினி கௌஷிக் முதன்முதலாக இசை ஞானி இளையராஜாவின் பின்னணி இசைக் கோப்புக்களை வாசிக்க அவரது ஸ்டூடியோவுக்குச் சென்று வந்த அனுபவத்தை முகநூல் மூலம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசைஞானியின் புதிய ஸ்டுடியோவில், ராஜா சாருடன் 3 நாட்கள் ரெக்கார்டிங் முடித்து இன்று வீடு திரும்பினேன். அப்படி ஒரு ரெக்கார்டிங் அனுபவம் இதுவரை என் வாழ்நாளில் கிடைத்ததேயில்லை. ராஜா சாருடன் பணிபுரிந்த ஒவ்வொரு இசைக்கலைஞரும் ஏன் அவரைப் பற்றி இவ்வளவு பயபக்தியுடன் பேசுகிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிகிறது.

ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனடியாக புதிய இசைக்குறியீடுகளை அவர் இயற்றிக் கொடுக்கும் மாய வித்தையை நான் நேரில் பார்த்தேன். அவர் எழுதித்தந்த ஸ்வரங்களை வாசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது. என் கனவு நனவாகியது, அவர் செவிகளில் இருந்து எதுவும் தப்பிவிடமுடியாது. ஒவ்வொரு இசைக்கருவியின் நுட்பமான இயல்பும், நுணுக்கங்களும், அவற்றை வாசிக்கும் இசைக்கலைஞரின் வாசிப்பும் அவருக்குத் தெரியும். தான் எழுதும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் எப்படி வாசிக்கவேண்டும் அந்த Treatment எப்படி இருக்கவேண்டும் என்று இசைக்கலைஞருக்கு அவர் கற்பிக்கிறார்.. அப்படி ஒரு நேர்த்தியான இசையுலகில் நாம் முற்றிலும் விழுந்து தொலைந்து போய், அந்நாளின் இறுதியில், நாம் வாசித்த முழு வடிவத்தின் அமைப்பைக் கேட்கும்போது, அவ்வுணர்வு நம்மை ஓர் இன்ப மயக்கத்தில் வீழ்த்திச் செல்கிறது.

நான் வாசித்த இசைக்குறிப்புகள்,, மற்றவர்கள் வாசித்த அதன் Counterparts பகுதிகள், காட்சிக்குத் தேவையான Emotions அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் அவர் கம்போஸ் செய்து முடித்தவை என்று எண்ணும்போது சிலிர்க்கிறது. !கிட்டத்தட்ட 40 மணி நேரம் நாங்கள் ரெக்கார்டிங்கில் இருந்தோம், அப்படி வேலை செய்த அந்த 40 மணி நேரத்திலும், அவரிடம் கண்ட மற்றொரு வியப்பிற்குரிய விஷயம் … நாங்கள் வேலை செய்த இசைக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தையும் ஏதாவது ஒரு நிமிடத்தில் கூட அவர் பேசி நாங்கள் கேட்கவில்லை.

அவருடைய இசைக்கூடத்தில் இருந்த மிகவும் திறமையும் அனுபவமும் வாய்ந்த இசைக்கலைஞர்களுடன் இசைத்தது மற்றோர் ஆனந்தம்., மூத்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் நெப்போலியன் சாருடன் 3 நாட்களும் ஒன்றாக பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது பெருமகிழ்ச்சி. , ஒரு தந்தை தனது மகளுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுப்பது போல எனக்கு அந்த மூன்று நாட்களும் பொறுமையுடன் அவர் கற்றுக்கொடுத்ததற்கு அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மூன்று நாட்களும் ராஜா சார் என்னுடன் கன்னடத்தில் பேசியதைக் கேட்கும் அனுபவம் கிட்டியது பேரானந்தம்.இன்று ஒரு ஆங்கில வார்த்தைக்கு மிகவும் சரியான மற்றும் பொருத்தமான பயன்பாட்டைக் கண்டேன், அதுதான் Divine’.

🙏Everything about Raaja sir is certainly ‘Divine’. 🙏🥰🙏
– அஷ்வினி கௌஷிக், புல்லாங்குழல் இசைக்கலைஞர்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.