மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகான இந்த ஏழு ஆண்டுகளில் தங்கள் மனதின்குரலை நாடு பலமுறை கேட்டிருக்கிறது.. உங்கள் ஆட்சியில் நாடு சுபிட்சமாக இருப்பதாகவும், வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருவதாகவும் நீங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகிறீர்கள். இருக்கட்டும். மக்களின் குரலுக்கும் சற்றே காது கொடுங்கள். ஏனெனில் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது உரையாடல் தானே அன்றி வெற்று பிரசங்கங்கள் அல்ல.

7 லட்சம் கோடி தள்ளுபடி

தாங்கள் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட இந்த ஏழு ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் சுமார் 7 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது உள்ள வராக்கடன் அளவு 9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 30% லிருந்து 22% ஆக குறைத்திருக்கிறீர்கள். அவர்களுக்கு காட்டும் சலுகையைக் கூட நாங்கள் கேட்கவில்லை. ஆனால் ஏழை மக்களின் சேமிப்பை சூறையாடாதீர்கள் என்று தான் சொல்கிறோம். கடன் கொடுத்துவிட்டு தள்ளுபடி செய்வதும் பொதுத்துறை வங்கிகளை திவாலாக்குவதும் தான் தங்கள் பாணி என்றால் நீங்கள் உண்மையில் யாருக்கான பிரதமர்?

இந்த ஏழு ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடிக்கு பொதுத்துறை பங்குகள் விற்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று லட்சம் கோடிக்கு விற்பனை செய்வது எனவும் நிதி ஆயோக் இலக்கை நிர்ணயித்திருக்கிறது. தேசிய பணமாக்கல் திட்டம் எனும் பெயரால் சாலைகள், ரயில், மின்சாரம், பொதுத்துறைகள் என அனைத்தையும் குத்தகைக்கு விடுவதன் மூலம் ஆறு லட்சம் கோடியை திரட்ட முடிவு செய்துள்ளீர்கள். இதன் மூலம் அனைத்து சேவைகளையும் வணிகமாக மாற்றுவதும், பொதுத்துறை நிறுவனங்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பதும், வளமான தேசத்தை சக்கர நாற்காலியில் அமர வைப்பது தான் உண்மையில் உங்கள் நோக்கமா..?

வரலாறு காணாத வேலையின்மை

வேளாண்மையை சிதைக்கும் ஆபத்தான சட்டங்களை எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றினீர்கள். இத்தகைய சட்டங்களை கைவிட வேண்டுமென கோரிக்கை விடுத்து உங்களின் வீட்டுக்கருகிலேயே கடந்த பத்து மாதங்களாக போராடும் விவசாயிகளின் குரல் தங்களுக்கு ஏன் கேட்கவில்லை? 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றிபல்வேறு மோசமான ஷரத்துகளை அதில் இணைத்ததோடு, வேலை நேரத்தையும் 8 லிருந்து 12 மணி நேரமாக அதிகரித்திட ஆவன செய்கிறீர்கள். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் ஏற்கனவே இருந்த 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்து விட்டீர்கள். இதனால் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு முறையாக வேலை கிடைப்பதில்லை. நீங்கள் ஆட்சிக்கு வரும் போது ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவதாக சொன்னீர்கள். ஆனால் ஏற்கனவேவேலையில் இருந்தவர்களும் தங்கள்வேலைகளை இழந்ததோடு வேலையின்மை விகிதமும் வரலாற்றில் இல்லாத அளவில் 8 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் எனும் எண்ணிக்கையில் வேலைக்காக காத்திருப்போர் பட்டியலில் கூடுகிறது.

நீங்கள் மட்டும் முதலிடம், எப்படி?

இத்தகைய மக்கள் பாடுகளை பொது
வெளியில் பேசினாலோ, எழுதினாலோ உடனே தேசவிரோதி என முத்திரை குத்தி உள்ளே தூக்கிப் போடுகிறீர்கள். இந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் 700 கைது நடவடிக்கைகளும், தேச விரோதச் செயலில் ஈடுபட்டார்கள் எனும் 124 ஏகுற்றச்சாட்டின் கீழ் 326 கைதுகளும் அரங்கேறியுள்ளன. உங்கள் ஆட்சியில் கேள்வி கேட்பது பயங்கரவாதமாகவும், போராடுவது தேச விரோதமாகவும் மாறியிருக்கிறது. ஊடகங்களும், சர்வதேச அமைப்புகளும் உலக அளவில் புகழ் மிக்க தலைவர்கள் பட்டியலில் நீங்கள் முதல் இடத்தில் இருப்பதாக அவ்வப்போது செய்தி வெளியிடுவதுண்டு. ஆனால் உலக அளவில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நாடுகளின் பட்டியலில் 53 வது இடத்திலும், மக்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்துள்ள நாடுகளின் பட்டியலில் 142வது இடத்திலும் நமது நாடு இருக்கிறது என்பதோடு தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் நாடுகளின் பட்டியலில் ஏற்கனவே இருந்த 94 வது இடத்திலிருந்து தற்போது 111 வது இடத்திற்கு கீழே இறங்கியிருக்கிறது. இத்தகைய குறியீடுகளில் நமது நாடு மோசமான நிலைமையில் இருப்பதும், ஆனால் நாட்டின் பிரதமரான நீங்கள் செல்வாக்கிலும் புகழிலும் முதல் இடத்தை பிடிப்பது மட்டும் எப்படி?

667 திட்டங்கள் என்னாயிற்று?

நீங்கள் இந்துக்களின் பாதுகாவலன் என சொல்வதை வழக்கமாக வைத்துள்ளீர்கள். ஆனால் ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் உள்ள இந்துக்களுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிற தலித் – பழங்குடி துணை திட்டங்கள் தங்கள் ஆட்சியில் முடமாக்கப்பட்டதோடு, கடந்த 7 ஆண்டுகளில் 7.5 கோடி அளவிலான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டு விட்டது. தங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 667 தலித் – பழங்குடி திட்டங்களில் இதுவரை 167மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏழை பழங்குடி மக்களுக்கு நிலம் அளிக்கவகை செய்யும் வன உரிமை சட்டத்தையும் அமலாக்க மறுப்பதோடு இதுவரை விண்ணப்பம் அளித்துள்ள 43 லட்சம்மக்களுக்கும் நிலங்கள் எதுவும் வழங்கவில்லை. இவற்றையெல்லாம் நிறைவேற்ற மனமில்லாதவரான நீங்கள் இந்துக்களின் பாதுகாவலன் என சொல்லிவருவதை மட்டும் கைவிட மாட்டீர்கள். அப்படியெனில் பிற்படுத்தப்பட்டவர்களோ, ஒடுக்கப்பட்டவர்களோ, பழங்குடி மக்களோ உங்கள் அகராதியில் இந்துக்கள் இல்லை என்றோ அல்லது இந்த இந்துக்களுக்கான பாதுகாவலர் நீங்கள் இல்லை என்றோ எடுத்துக் கொள்ளலாமா?

ஊழலின் உறைவிடமாக…

மற்றொரு முக்கியமான விஷயம். மற்ற கட்சிகளெல்லாம் ஊழல் கட்சிகள். நீங்கள் மட்டுமே கறைபடியாத கரங்களுக்கு சொந்தமானவர் என்பது போல ஒரு பிம்பத்தையும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறீர்கள். அதிலும் கூட உண்மையில்லையே. ஏனெனில் ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது வாங்குவதாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு ரஃபேல் போர்விமானத்தின் விலை 526 கோடியாக இருந்தது. ஆனால் உங்கள் ஆட்சியில் அது திடீரென 1570 கோடியாக உயர்த்தப்பட்டதற்கான காரணத்தையோ, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் எனும் அரசு நிறுவனத்தை ஓரம் கட்டிவிட்டுரிலையன்ஸ் டிஃபென்ஸ் எனும் ஒரு தனியாரோடு ஒப்பந்தம் போடப்பட்டதற்கான காரணத்தையோ இதுவரை நீங்கள் சொல்லவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் பேர்வழி எனும் பெயரால் நீங்கள் கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் பாஜக தலைவர்கள் பொறுப்பில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஒரு சில நாட்களில் பல்லாயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டதையும், பாஜக தலைவர்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகளில் படுத்துப் புரண்ட காட்சிகளையும் தான் நாடு பார்த்ததே. தங்கள் வலதுகரமாக விளங்கும் அமித்ஷாவின் மகன் நிறுவனம் ஒரே ஆண்டிலேயே அபாரமாக வளர்ந்து முதலீடுகளை குவித்தது எப்படி. கார்ப்பரேட்டுகள் வ்ழங்கும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பாஜகவிற்கும் இதர கட்சிகளுக்கும் பெரும் இடைவெளி உள்ளதே அது எப்படி?இவற்றையெல்லாம் கூட காழ்ப்புணர்ச்சியோடு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என நீங்கள் கடந்து போகலாம். ஆனால் இந்த ஏழு ஆண்டுகளில் அதிக ஊழல் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறு நாடுகளை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது என டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் எனும் சர்வதேசஅமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியுமா?

இன்னமும் நிறைய இருக்கிறது பேசுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும். ஆனால் உங்களுக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்க விரும்புகிறோம். மக்களின் உண்மையான பிரச்சனைகளை திசை திருப்பும் நோக்கத்தோடு உணர்வுகளை கிளப்பி விடுவதன் மூலமோ, எங்களுக்கே அதீததேசபக்தி என கூச்சலிடுவதன் மூலமோ மட்டுமே நீங்கள் உங்களுக்கான அதிகாரத்தை நீட்டித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தேசம் என்பது வெறும் மண்ணல்ல. மக்களையும் உள்ளடக்கியதே தேசம் ஆகும். மண்ணின் விடுதலைக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடாதவர்களால் எப்படி மக்களை பாதுகாக்க முடியும்? மகுடத்தை அளிக்கும் மக்களே அதை மிக எளிதாக மண்ணிலும் தூக்கியெறிவார்கள் எனும் எளிய உண்மையை மறக்காமல் நினைவில் நிறுத்துங்கள் பிரதமரே!

கட்டுரையாளர் : ஆர்.பத்ரி

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.