சிம்பு என்றாலே ஒரு கூடை நிறைய வம்பு என்ற நிலையில் ‘மாநாடு’படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பலர் சதி செய்கிறார்கள் என்று அவரது பெற்றோர் சானல்களுக்கு பேட்டி அளித்திருந்தனர். அந்த சதிகாரர்கள் யாரென்று மக்கள் குழம்பிப்போயிருந்த நிலையில்

சிம்புவை வைத்து படம் தயாரித்த அதிபர்களில் ஒருவரான மைக்கேல் ராயப்பன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த திரைப்படம் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து, இந்த படத்தை இத்துடன் ரிலீஸ் செய்து விடலாம் என்றும், ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நான் ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருவேன் என்றும் உறுதியளித்தார்.

எனவே நான் அந்த படத்தை வெளியிட்டேன். படம் சரியாக ஓடாததால் எனக்கு ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்னால் அடுத்த திரைப்படம் தயாரிக்க முடியவில்லை. அதேநேரம் சிம்பு தரப்பில், தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நான் அளித்த புகாரின் பேரில், அப்போதைய தலைவரான விஷால் மற்றும் நிர்வாகிகள் பல முறை விசாரித்து விரைவில் ஒரு திரைப்படம் நடித்து தர வேண்டும் என்று கூறிய போது சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால் நிர்வாகம் மாறிய பின்னர் அதெல்லாம் முடியாது என்று தற்போதுவரை இழுத்தடித்து வருகிறார்கள்.

எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எனக்கு நல்லதொரு முடிவை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொடக்கத்தில் இருந்தே பொய்யான உறுதியளித்து, எனக்கு பெரும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மற்றும் அவரது தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்….என்று அப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புகார் மனு மீது அன்பானவரான சிம்பு, அசராதவரான அவரது தாய் உஷா யாருக்கும் அடங்காதவரான டி.ராஜேந்தர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மொத்த இண்டஸ்ட்ரியும் ஆர்வத்தோடு காத்திருக்கிறது

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.