ஸ்ரீ பெரும்புதூரில் வழிப்பறி செய்த வடநாட்டுஇளைஞன் என்கவுண்டர் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை
அக் 19, 2021,
சென்னை

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் அருகில் உள்ள பென்னலூரில் வசிக்கும் சுங்கச் சாவடி ஊழியர் இந்திரா (வயது 55, – க/பெ: ரெங்கநாதன்) என்பவரது 5 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இரு இளைஞர்களில் முர்துஷா ஷேக் (30) என்பவர் கடந்த அக் 11 அன்று தமிழக காவல்துறையால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. இது குறித்த உண்மைகளை அறிந்து அறிக்கை அளிக்கும் நோக்கில் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு சென்ற வாரம் அமைக்கப்பட்டது.

குழுவில் பங்குபெற்றோர்

அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
செந்தில் தோழர், இளந்தமிழகம், சென்னை,
நவ்ஃபல், (NCHRO), கோவை,
வழக்குரைஞர் ஃபக்ருதீன் (NCHRO), சென்னை,
அயூப், காஞ்சிபுரம் (NCHRO),
இர்ஷாத், (NCHRO) காஞ்சிபுரம்,
காஜா மொஹிதீன், காஞ்சிபுரம்,
ஃபெரோஜ் கான், கோவை.,
கி.நடராசன் (Organisation for Protection of Democratic Rights -OPDR), வழக்குரைஞர், சென்னை,
யு.சர்புதீன், சுங்குவார் சத்திரம்.

இக்குழுவினர் இது தொடர்பாகச் சந்தித்தவர்கள்:
எங்கள் குழு அக்டோபர்14 மற்றும் 16 தேதிகளில் நகையைப் பறிகொடுத்த சுங்கச்சாவடி ஊழியர் இந்திரா, மற்றும் இருங்காட்டுக் கோட்டை கிராமத்தினர், நகையைப் பறித்த வட மாநிலத்தவர் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் அம்பேத்கர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்போர், கொள்ளையர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டிற்கு முன்னதாக உள்ள அஞ்சல் நிலைய ஊழியர்கள், அப்பகுதியில் பல்வேறு சிறு கடைகள் வைத்துள்ளோர், மற்றும் தொழில்கள் செய்வோர், முர்துஜா ஷேக்கால் கத்தியால் வெட்டப்பட்டவராகச் சொல்லப்படும் காவலர் மோகன்ராஜ் சிகிச்சை பெறுவதற்காகச் சேற்கப்பட்டிருந்த ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், வட மாநிலத்தில் இருந்து வந்து இப்பகுதியில் வாழும் ஏராளமான தொழிலாளிகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிலர் ஆகியோருடன் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்தோம்: காஞ்சிபுரம் டி.ஐ.ஜி சத்தியப் பிரியா, ஏ.டி.எஸ்.பி வினோத் சாந்தாராம், சம்பவத்திற்குப் பின் இப்பகுதியில் உள்ள வட மாநிலத்தவர் குறித்த கணக்கெடுப்புகளை மேற்பார்வை செய்யும் காவல் ஆய்வாளர் ந. முத்துச் சாமி எனப் பலரையும் சந்தித்தோம். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஏரி மற்றும் காட்டுப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டோம்.

நடந்தது என்ன என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஊர் மக்களும் சொல்வது:

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பணி செய்யும் இந்திரா சென்ற ஆக 10 அன்று காலை சுமார் 8 மணி அளவில் சென்னை செல்லும் பொருட்டு சுங்கச் சாவடி அருகில் உள்ள EB காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது இரு வடமாநிலத்தவர் இந்திராவிடம் சென்று ஏதோ வழி கேட்பவர்கள் போலத் தங்கள் மொழியில் பேசி, அவர் அணிந்திருந்த 5 சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் அறுத்துக் கொண்டு ஓடினர். இந்திரா வாய்விட்டு அலறியதைக் கேட்ட அங்கிருந்த ஒரு சிலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முனைந்தபோது, அவ் இருவரும் சென்னை செல்லும் திசையில் ஓடி வெங்கடேஸ்வரா கல்லூரி பக்கமாகத் திரும்பி அங்கிருந்த காட்டுப் பகுதியுள் நுழைந்து மறைந்துள்ளனர். இதற்கிடையில் இந்திரா செல்போன் மூலம் தன் மகன் மதியிடம் நடந்ததைக் கூற அவரும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கொள்ளையர்கள் சென்ற திசையில் ஓடி, இருங்காட்டுக் கோட்டை ஏரிப்பக்கம் அமைந்துள்ள அடர்ந்த காடுகள் வழியே சிறிது நேரம் அலைந்து திரிந்து ஒன்றும் துப்புத் துலங்காமல் திரும்பியுள்ளனர் .

இதற்குள் செய்தி அறிந்து அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இந்திராவின் இன்னொரு மகன் சத்தியா நடந்ததை அறிந்து, தனது நண்பர் கலைச்செல்வன் என்பவருடன் தனது வாகனத்தில் கிங்ஸ் கல்லூரியின் பின்புறமாகச் சென்று இருங்காட்டுக் கோட்டை ஏரியை அடைந்தபோது அங்கே இரு இளைஞர்கள் உடைமாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி ஓடியுள்ளனர். இதைக் கண்ட அந்த இருவரில் ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக அவர்களை மிரட்டியுள்ளார். உடனே இவர்கள் இருவரும் தரையில் படுத்துவிட்டதாகவும், அதைக் கண்ட அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர் எனவும் அறிகிறோம்.

அவர்கள் ஓடியபின் அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற சத்தியாவும், கலைச்செல்வனும், ஓடியவர்கள் நின்றிருந்த இடத்தில் கைத் துப்பாக்கி ஒன்றின் ஒரு பகுதியும் சில தோட்டாக்களும் சிதறிக் கிடந்ததைக் கண்டு அவற்றை எடுத்து வந்து காவல்துறையினரிடம் தந்துள்ளனர். ஓடிச் சென்றவர்களிடம் இருந்த கைத் துப்பாக்கியின் எஞ்சிய பகுதியால் அவர்களுக்கு இனிப் பயனில்லை எனும் நிலை ஏற்பட்டது இதன் மூலம் விளங்குகிறது.

வழிப்பறி செய்தவர்கள் பிடிக்கப்பட்டது, அதில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது ஆகியன குறித்துக் காவல்துறையினர் சொல்வது:

சம்பவம் நடந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அருகில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப் பெட்டிகளைக் காத்துநின்ற காவல்துறையினர் மற்றும் ஊர்மக்கள் எனப் பெரிய அளவில் ஏரிக்கரையில் திரண்டுள்ளனர். அடர்ந்த காடு என்பதால் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மூன்று ட்ரோன்களைக் கொண்டுவந்து வழிப்பறி செய்த இருவரையும் தேடியுள்ளார். அப்படியும் ஒளிந்திருந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டைப் பகுதியில் காவல்துறையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அன்று அந்தக் காட்டுப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்தும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றது குறித்தும்

ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர், எஸ். கிருஷ்ணகுமார் தனது முதல் தகவல் அறிக்கையில் ((FIR No 1255, 11-10-2021, Sriperumbuddur) கூறுவது:

”செயின் வழிப்பறிச் சம்பவம் குறித்து சி1 திருப்பெரும்புதூர் காவல் நிலைய குற்ற எண் 1254/2021 பிரிவு 397 IPC யின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்தது………. அக்டோபர் 11 காலை சுமார் ஏழு மணி அளவில் காரந்தாங்கல் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது சந்தேகத்துக்குரிய நபர் (ஒருவர் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்து) அவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார்.

விசாரணையில் அந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நெயிம் அக்தர் எனத் தெரியவந்தது. (அவரை விசாரித்தபோது) தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தனது கூட்டாளியான மோர்துஜா ஷேக் என்பவர் மேவளூர்குப்பம் கிருஷ்ணா நதிநீர்க் கால்வாய் பக்கமாகப் படூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் அருகாமையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மறைந்திருப்பதாக் கூறினார். இந்தத் தகவலின் அடிப்படையில் நான் special team உதவி ஆய்வாளர் தர்மலிங்கம், தலைமைக் காவலர் மோகன் ராஜ் ஆகியோர் குற்றவாளியைப் பிடிக்க மதியம் சுமார் 12 மணிக்கு படூர் காட்டுப் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு ரோந்து மேற்கொண்டபோது மதியம் சுமார் 1 மணி அளவில் அடர்ந்த புதரில் இருந்து ஒரு நபர் ஓடி வந்து முன்னால் நடந்து சென்ற தலைமைக் காவலர் மோகன்ராஜின் கழுத்துப் பகுதியில் கையில் இருந்த அரிவாளால் தாக்க முற்பட்டார். அவர் அந்த வெட்டுப்படாமல் கையால் தடுத்தபோது இடது கை புஜத்தில் பலமான வெட்டுப்பட்டது. மோகன்ராஜ் நிலைகுலைந்து தடுமாறி வீழ்ந்தபோது, சந்தேகப்படும் நபர் தன் துப்பாக்கியை எடுத்துச் சுட முயன்றபோது நான் அவரை தற்காப்பிற்காக இரண்டு முறை சுட்டேன்.” இது கிருஷ்ணகுமாரின் வாக்குமூலம். ஆம்புலன்சில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு முர்துஜா ஷேக்கைக் கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டார் என ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தன் வாக்குமூலத்தை முடிக்கிறார்.

மொத்தத்தில் இது ஒரு வழக்கமான காவல்துறை என்கவுண்டர் படுகொலைதான் என்பது தெரிகிறது. அவரிடம் இருந்த துப்பாக்கியின் முன்பகுதி காணாமற் போனபின் அதைப் பயன்படுத்த முடியாது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. தவிரவும் அந்தத் துப்பாக்கியைக் காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் காட்டியபோது, அது முழுமையாக இல்லை என்பதையும் ”பீபிள்ச் வாட்ச்” அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக் காட்டுவது குறிப்பிசத் தக்கது. எனவே அந்த பயனற்ற பாதித் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மிரட்டினார், அதனால் சுட்டோம் என்பது ஏற்க இயலாத ஒன்று.

சுங்கச் சாவடி ஊழியர் இந்திராவின் சங்கிலியை அறுத்த இருவரில் மற்றொருவர் பெயர் மத்புல் ஷேக் என்றும், அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் சகோதரன் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்புல்ஷேக் இப்போது தீவிரமாகத் தேடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட .முர்துஜா ஷேக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஜார்கண்டில் உள்ள அவரது பெற்றோரைத் தொடர்பு கொண்டபோது அவரை இங்கேயே அடக்கம் செய்யுமாறு அவர்கள் கூறிவிட்டதாகவும். அதன்படி அவர் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் காஞ்ஜிபுரம் DIG சத்தியப் பிரியா நாங்கள் அவரைச் சந்தித்தபோது கூறினார்.

இது தொடர்பாக எங்கள் குழு சந்தித்த காவல்துறையினர்:

நகையைப் பறி கொடுத்த இந்திராவைச் சந்தித்தபோது அவர் சென்ற அக் 10 காலை சுமார் 8 மணி அளவில் தான் சென்னை செல்ல பேருந்துக்காக நின்றபோது புரியாத மொழியில் பேசிய இரு வட மாநிலத்தவர் தன்னிடம் ஏதோ கேட்பது போல வந்துத் செயினை அறுத்துக் கொண்டு ஓடியதையும், அவர் சத்தம் போட்டுக் கத்தியதையும், பின் அவர்கள் கொஞ்ச தூரம் ஓடி காட்டுப் பகுதியை நோக்கி சரிவில் இறங்கி ஓடி மறைந்ததையும் சொன்னார். பின் அவரது மகன்கள் வந்து சென்று காட்டுப் பகுதிக்குள் தேடியதையும் சொன்னார். செயினைப் பறிக்கும்போதோ, இல்லை தான் தப்பி ஓடியபோது துரத்தியவர்களை மிரட்டுவதற்காகவோ கொள்ளையர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்களா என நாங்கள் கேட்டபோது தன்னிடம் நகையைப் பறித்தபோது அப்படித் துப்பாக்கியைக் காட்டி எதையும் செய்யவில்லை என இந்திரா உறுதிபடக் கூறினார். செயின் அறுப்பு சம்பவம் நடந்த இடம் மற்றும் குற்றவாளிகள் தப்பிச் சென்ற வழி முதலியவற்றையும் பார்த்தோம்.

அடுத்து நாங்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் முதல் தகவல் அறிக்கை விவரங்களைக் கேட்டோம். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு FIR கள் போடப்பட்டுள்ளன. ஒன்று நகையைப் பறி கொடுத்த இந்திராவின் புகார். இந்த முதல் தகவல் அறிக்கை யாரும் தரவிரக்கம் செய்ய இயலாமல் இது முடக்கப்பட்டுள்ளது. மற்றது இந்த அறிக்கையில் நாங்கள் முன் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தான் முர்துஜா ஷேக்கை சுட்டுக் கொல்ல நேர்ந்தது குறித்த FIR. இதைத் தரவிரக்கம் செய்ய முடிந்தது.

உயர் அதிகாரிகள் சற்று நேரத்தில் வருவதாகச் சொன்னதால் சிறிது நேரம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலேயே காத்திருந்துவிட்டுப் பின் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டக் காவல் நிலையத்திற்குச் சென்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) விடுப்பில் இருந்ததால், கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) திரு வினோத் சாந்தாராமைப் பார்த்தோம். என்கவுண்டரில் கொல்லப்பட்ட மத்புல் ஷேக்கைக் கைது செய்து விசாரித்திருக்கலாம். நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனைகள் வாங்கித் தந்திருக்கலாம். என்கவுண்டர் செய்திருப்பதற்கான அவசியம் இல்லை, அந்த நபர் நகையைப் பறித்தபோது கூட இந்திராவையோ, துரத்தியவர்களையோ துப்பாக்கியைக் காட்டி மிரட்டவுமில்லை. அவரை இப்படிச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொன்னோம். மத்புல் ஷேக்கிடம் துப்பாக்கி இருந்தது உண்மை எனவும், தேவையானால் சுட்டுக் கொல்ல வாய்ப்பிருந்ததையும் மறுக்க முடியாது எனவும் அவர் பதிலுறைத்தார். நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த அன்று அப்படி ஒரு நபர் காஞ்சியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியதையும் குறிப்பிட்டார். ”எனினும் உங்கள் ஐயங்களை முன்வையுங்கள். நாங்கள் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

அடுத்து நாங்கள் DGP திரு சத்தியப் பிரியா அவர்களைச் சந்தித்தோம். அவர் சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தவர். அவரும் முர்துஜா ஷேக்கை என்கவுண்டர் செய்து கொன்றது தவிர்க்க இயலாத ஒன்று என்பதே தன் கருத்து எனக் குறிப்பிட்டார். முர்துஜாவிடம் கடைசிவரை மூன்று குண்டுகள் இருந்தன எனவும், அதை அவர் கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது பிரயோகிக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்ததை மறந்துவிடக் கூடாது எனவும் குறிப்பிட்டார். முர்துஜாவை என்கவுண்டர் செய்தது குறித்து I am convinced என்றார். முர்துஜாவால் கத்தியால் வெட்டப்பட்ட காவலர் மோகன்ராஜுக்குக் கடுமையான காயம் பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது எனவும் கூறினார்.

அடுத்து முர்துஜா ஷேக்கைப் பிடிக்கச் சென்றபோது அந்த நபர் தன் கையிலிருந்த கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் அந்தத் தலைமைக் காவலர் மோகன் ராஜ் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அவர் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பதாகக் காவல்துறையால் சொல்லப்பட்டாலும் நாங்கள் அவர் தங்கிச் சிகிச்சை பெறுவதாகச் சொல்லப்பட்ட மருத்துவமனை வார்டுக்குச் சென்றபோது அவர் அங்கில்லை. பக்கத்தில் இருந்தவர்கள் அவர் அன்று மதியம் வீட்டுக்குக் குளிக்கப் போனார், இன்னும் வரவில்லை எனக் கூறினார்கள். தினசரி அவர் வீட்டுக்குச் சென்று தன் தினசரிக் கடமைகளை முடித்து வருவது தெரிந்தது. பின் நாங்கள் அந்த வார்டுக்குப் பொறுப்பாக உள்ள செவிலியரைச் சென்று விசாரித்தோம். சிகிச்சை முடிந்து இன்று மோகன்ராஜ் ”டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் தலைமைக் காவலர் மோகன் ராஜுக்கு அப்படி ஒன்றும் பெரிய வெட்டுக் காயம் ஏதும் இல்லை என்பது விளங்கியது. இப்படியான என்கவுண்டர் கொலைகளைச் செய்யும்போது யாராவது ஒரு காவலருக்குப் பெரும் காயம் ஏற்படும் வகையில் தாக்கிய நிலையில் தற்காப்புக்காகத்தான் தாங்கள் என்கவுண்டர் செய்தோம் எனச் சொல்வது காவல்துறையில் வழக்கமாக உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் உண்மை இல்லை என்பதைப் பல முறை நாங்கள் நேரில் கண்டுள்ளோம். எங்களின் அறிக்கைகளிலும் பதிவு செய்துள்ளோம்.
காரந்தாங்கல் கிராமத்தவர்கள் கருத்து
பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதையும், அவற்றில் பெரிய அளவில் வட மாநிலங்களிலிருந்து தொழிலாளிகள் வந்து தங்கி வேலை செய்வதையும் அறிவோம். இந்தச் சம்பவம் நடந்த இறுக்கமான புதர்கள் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில் ஹ்யூண்டாய் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு பணி செய்யும் வடமாநிலத்தவர்கள் பெரிய அளவில் நெடுஞ்சாலை ஓரமுள்ள காரந்தாங்கல் கிராமத்தில்தான் வசிக்கின்றனர். சிலர் குடும்பமாகவும் இருக்கின்றனர்.

அக்டோபர் 16 அன்று எங்கள் குழு இரண்டாம் முறையாக இந்தக் கள ஆய்வு தொடர்பாக அங்கு சென்றபோது இந்தக் கிராமத்தில் இருந்து அங்குள்ள பலரையும் சந்தித்தோம். செயின் பறிப்பைச் செய்தவர்கள் தங்கி இருந்ததாகச் சொல்லப்படிம் வீடு, செயின் பறிக்கப்பட்ட இடம், கொள்ளையர்கள் துரத்தப்பட்டபோது ஓடி அவர்கள் ஒதுங்கிய காட்டுப்பகுதி, ஏரி முதலான பகுதிகளையும் பார்வையிட்டோம்.

இப்பகுதி மக்களைச் சந்தித்து நாங்கள் இது குறித்து விசாரித்தபோது முதலில் எதையும் சொல்வதற்குத் தயக்கம் காட்டினர். எங்கள் குழுவில் இருந்த வழக்குரைஞர் நடராசன், சர்புதீன் முதலானோர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சற்று இலகுவாக மக்களிடம் பேசவும், கருத்துக்களைச் சேகரிக்கவும் முடிந்தது.

நாங்கள் சென்றபோது காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள வெளிமாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரு குழுக்களாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொரு வீட்டாரையும் வரச்சொல்லி அவர்களின் ஆதார் அட்டை முதலானவற்றைப் பதிவு செய்து கொண்டுள்ளதைப் பார்த்தோம். காவல்துறை ஆய்வாளர் ந.முத்துச்சாமி அக்குழுவிற்குப் பொறுப்பேற்றிருந்தார். அவரைச் சந்தித்து என்கவுண்டர் தொடர்பான விவரங்களைக் கேட்டபோது, அந்த வழக்கு தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த விவரங்களைச் சேகரிப்பது மட்டுமே தன் பணி எனவும் குறிப்பிட்டார். தாங்கள் விசாரித்துப் பதிவு செய்வோரிடம் ஆதார் அட்டை இல்லாமலிருந்தால் வேறு முக்கியமான ஆதாரங்களைப் பதிவு செய்துகொள்வதாகவும் கூறினார். அவரது ஜீப் நின்றிருந்த இடத்திற்கு அருகாமையில்தான் கொள்ளையர்கள் இருவர் தங்கி இருந்ததாகக் சொல்லப்படும் தெருவும் இருந்தது. அது குறித்தும் அவர் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

நாங்கள் சந்தித்துப் பேசிய அத்தனை பேர்களும் அங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டதை இங்கே பதிவு செய்வது அவசியம். பெரும்பாலும் ஜார்கண்ட், மே வங்கம், ஒடிஷா, பிஹார் முதலான மாநிலத்தவர்களான இவர்களுக்கு எந்த அடிப்படையில் வீடுகளை வாடகைக்குத் தருகிறீர்கள் எனக் கேட்டபோது ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வீடுகளை வாடகைக்குத் தருகிறோம் என்றனர். அதில் ஒருவர் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வடமாநிலத்தவரின் ஆதார் கார்டின் ஒரிஜினலையே தான் வாங்கி வைத்துள்ளதாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இப்படி இங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவரில் பலர் முஸ்லிம்கள் என்பதால் இங்குள்ள முஸ்லிம் ஒருவர் தன் வீட்டு மாடியில் அவர்கள் தொழ இடமளிப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயன்றோம். இப்போது அங்கு அப்படித் தொழுகை நடப்பதில்லை எனத் தெரிந்தது. ஊருக்குள் இருந்த ஒரு கடையின் உரிமையாளரைச் சந்தித்துப் பேசியபோது அவரும் அப்பகுதியில் வாழும் இந்த வட மாநில மக்கள் குறித்த மிகவும் நல்ல அபிப்பிராயத்தையே முன்வைத்தார். அவர்களால் இதுவரை அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றார்.

சாலைக்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீசில் இருந்த பணியாளரைச் சந்தித்தபோது அவர் தபால்களை எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதும் நின்று அங்கிருக்கும் வட மாநிலத்தவர்கள் குறித்து மிகவும் நல்ல கருத்தையே கூறினார். போஸ்ட் ஆபீசை ஒட்டியுள்ள தெருவில்தான் கொள்ளையர்கள் இருந்ததாகக் கூறப்படுவதுபற்றிக் கேட்டபோது அதுவும் அவருக்கும் தெரியவில்லை.

கொள்ளையர்கள் வசித்ததாகச் சொல்லப்படும் அந்தத் தெருவில் ஒரு முன்னாள் கவுன்சிலரைச் சந்தித்தோம். வி.சி.க வைச் சேர்ந்த அவரும் அருகில் உள்ள ஒரு வீட்டைக் காட்டி அதற்குள்தான் இருந்தார்கள் எனச் சொல்லப்படுவதாகவும், அங்கு யார் இருந்தார்கள், எத்தனை பேர்கள் இருந்தார்கள் என்றெல்லாம் தனக்கு மட்டுமல்ல, அங்கு யாருக்கும் தெரியாது எனவும் சொன்னார். அவர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்றபோது, அது ஒரு பாழடைந்த குடிசை. எங்களைப் பார்த்துவிட்டு அந்த வீட்டுக்குள் படுத்திருந்த இரு நாய்கள் வெளியே ஓடின. அங்குதான் அவர்கள் இருந்தனர் என்பது நம்ப இயலாததாகவே இருந்தது.
மொத்தத்தில் அப்பகுதி மக்களுக்கு தங்கள் மத்தியில் வசித்த இந்த வடமாநில மக்கள் குறித்து எந்தப் புகாரும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடிந்தது.
எங்கள் குழுவின் பார்வைகளும் கோரிக்கைகளும்
1. காரந்தாங்கல் கிராமத்தில் எங்கள் குழு விசாரித்தபோது அக் 11 அன்று காலை10 மணிக்கு மேல் ஒரு வட மாநிலத்தவரைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றதாகக் கூறுகின்றனர். சிலர் இரண்டு பேர்கள் எனவும் கூறினர். அன்று காலை அப்பகுதி பரபரப்பாய் இருந்ததையும் அம் மக்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். அப்படிப் பிடிக்கப்பட்டவர் நயிம் அக்தர் எனும் ஜார்கண்ட் மாநிலத்தவர் எனவும் அவரது டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டுதான் முர்துஜா ஷேக்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற கருத்து ஒன்றும் உள்ளது. அந்த நயிம் அக்தர் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டுச் சிறையில் உள்ளார்.
2. முர்துஜா ஷேக்கும் இன்னொருவரும் வழிப்பறி செய்து நகையைப் பறித்துச் சென்றனர் என்பது குற்றச்சாட்டு. அவர்கள் கைது செய்யப்பட்டு. வழக்குத் தொடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சுமார் 300 ஆயுதம் தாங்கிய படையுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை எளிதில் உயிருடன் பிடித்திருக்க முடியும். இப்படி முர்துஜா ஷேக்கைக் காவல்துறை கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்பதற்கு அங்கு அவசியம் இருக்கவில்லை. காவல்துறை சொல்லும் கதையில் எந்த நியாயமும் நம்பகத் தன்மையும் இல்லை. நகைப் பறிப்புச் சம்பவம் நரந்த்து அக் 10. அடுத்த நாள் (அக் 11) காலையே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டபோதே ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் ஏற்பட்டது. அப்படியே நடக்கவும் செய்த்து.
3. முர்துஜா ஷேக்கிடம் இருந்த துப்பாக்கி முந்திய நாளில் காட்டுக்குள் தப்பி ஓடும்போது விழுந்து உடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இந்த வழக்கு தொடர்பான இரு முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்றுதான் தரவிரக்கம் செய்யும் நிலையில் உள்ளது என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்திராவிடமிருந்து செயின் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையைத் தரவிறக்கம் செய்து பார்க்க இயலாதவாறு வைக்கப்பட்டுள்ளதன் காரணமும் விளங்கவில்லை.
4. மொத்தத்தில் இது ஒரு அப்பட்டமான போலி மோதல் படுகொலை. இது குறித்து வழக்கு விசாரணையை என்கவுண்டர் செய்த காவல்துறையினரிடமே கொடுத்தால் நீதி கிடைக்காது. CBCID போன்ற வேறு புலனாய்வு முகமை ஒன்றிடம் இந்த விசாரணை ஒப்புவிக்கப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.
5. போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முர்துஜா ஷேக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எந்தப் பிரச்சினையையும் சாதி, மதம், இனம் என்கிற ரீதியில் பார்க்கப்படும் இன்றைய சூழலில் இந்தப் பிரச்சினை அப்படியான ஒரு கோணத்தில் இதுவரை அணுகப்படாதது ஓரளவு ஆறுதலாக இருக்கிறது. இந்நிலை தொடர வேண்டும். எனினும் கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலத்தவர் என்றால் வெறுப்பாகப் பார்க்கும் ஒரு நிலை இங்கு உருவாக்கப் பட்டுள்ளள்ளது வருந்தத் தக்கது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில் எல்லோரும் பல மாநிலங்களிலும், நாடுகளிலும் சென்று படிப்பதும் பணியாற்றுவதும் இயல்பாக உள்ளது. இந்நிலையில் இப்படியாகக் கட்டமைக்கப்படும் அந்நிய வெறுப்பு மிகவும் வருந்தத் தக்க, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. காவல்துறையினரும் அந்தக் கோணத்திலிருந்து வடமாநிலத்தவரை அணுகக் கூடாது. இதே சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் இப்படிக் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து வடமாநிலத்தவரை நம் காவல்துறை சுட்டுக் கொன்றது நினைவிற்குரியது. அப்போதும் அது ஒரு என்கவுண்டர் படுகொலைதான் என்பது இவ்வாறு உண்மை அறிந்து இங்கு வெளிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் புதிய ஆட்சி உருவாகியுள்ள இந்தச் சில மாதங்களில் எதிர்க்கட்சிகளாக உள்ள பா.ஜ.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியக் கூட்டணிக் கட்சிகள் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதும் இந்த என்கவுண்டர் படுகொலைக்குப் பின்னணியாக உள்ளது எனவும் கூறலாம். இந்த என்கவுண்டர் நடந்த அடுத்த இரண்டு நாட்களில் தூத்துக்குடியிலும் ஒரு என்கவுண்டர் கொலை நடந்துள்ளதையும் காண்கிறோம். இப்படி அரசியல் நோக்கங்கள் குடிமக்களின் உயிர் பறிப்பிற்குக் காரணமாவது வேதனைக்குரியது. கண்டிக்கத் தக்கது.
“திருப்பெரும்புதூர் என்கவுண்டர் எதிரொலி: வீடுவீடாக அதிரடி வேட்டை; சிக்கப்போகும் வடமாநிலத்தவர்கள்!” எனும் தலைப்புச் செய்தியுடன் இரண்டு நாட்கள் முன்னர் ஜனனி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று (EMIS in India, Industry Reports, Oct 17, 2021 ) ஒன்று வெளிவந்துள்ளது. வடமாநிலத்தவர் வசிக்கும் வீடொன்றில் சோதனை நடைபெறும் படத்துடன் அது வெளியிடப்பட்டுள்ளது. அருகில் வடமாநில இளைஞர்கள் நிற்கின்றனர். இவை எல்லாம் இங்கு வந்து பணிசெய்யும் பிறமொழியினர் மீது வன்முறைகள் பெருகவே வழி வகுக்கும். சில ஆண்டுகள் முன்னர் தமிழகத்தில் இப்படி வடமாநிலத்தவர்கள் சந்தேகத்தின் பேரில் ஆங்காங்கு நம் மக்களால் தாக்கப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த 4 ஆம் தேதி ஓரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் ஊழியர் இருவர் தாக்கப்பட்டு, அதில் ஒருவர் மரணம் அடைந்ததும், இன்னொருவர் உடலில் துப்பாக்கிக் குண்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் இப்போது இந்த நகைப் பறிப்புடன் தொடர்புபடுத்தி ஒட்டு மொத்தமாக வடமாநிலத் தொழிலாளர் மீது வெறுப்பு பரப்பப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுதல் அவசியம். ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு “அந்நியர்” எதிர்ப்புக்கு வழிவகுக்கும் வகையில் சொல்லாடல்கள் பரப்பப்படுவது வருந்தத் தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. அரசும் காவல்துறையும், ஊடகங்களும் இதில் கவனமாக இருத்தல் வேண்டும்.

தொடர்பு முகவரி
அ.மார்க்ஸ், 1/33, G2, செல்ல பெருமாள் தெரு, லட்சுமிபுரம், திருவான்மியூர், சென்னை (600041). தொடர்பு : 9444120582

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.