‘ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம். நீதியரசர் சந்துரு, நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன், நடிகை லிஜோ மோள் ஜோஸ் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நம் வணக்கத்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் திருச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் பழங்குடிமக்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவம் எனது நினைவில் வந்தது.
அந்த அனுபவம் குறித்து நான் எழுதி வெளிவரப் போகும் புத்தகத்திலிருந்து சில பக்கங்கள்:
Gnana Rajasekaran

●சிம்மினி அணையும் ஆதிவாசிகளும்●

அமரர் கே.கருணாகரன் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவரது சொந்த மாவட்டமான திருச்சூரில் என்னை கலெக்டராக நியமித்தார். முதன் முதலில் கலெக்டராக பொறுப்பு ஏற்பதற்காக திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தபோது வாசலின் அருகில் நான் ஒரு காட்சியைக் கண்டேன். அங்கே 37 ஆதிவாசி குடும்பங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்புடன் பந்தல் போட்டு ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

‘பராசக்தி’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரங்கூனிலிருந்து
சென்னை வந்திறங்கிய உடன் முதலில் காண்பது பிச்சை கேட்கும் ஒரு பிச்சைக்காரனை. அப்போது அவர் சொல்வார்: “தமிழ்நாட்டின் முதல் குரலா இது?’ என்று.

அதுபோல நான் கலெக்டராக நுழையும்போது முதன் முதலில் கண்டது ஆதிவாசி குடும்பங்களைத்தான். குழந்தைகள் அழுக்கு ஆடைகளுடன், பெண்கள் பட்டினியால் வாடிய முகங்களுடன் அங்கே குழுமி யிருந்தார்கள். நீண்ட நேரம், என்னை இந்தக் காட்சி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. அதிகாரிகள் புடைசூழ, கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டேன். எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு
சென்றார்கள். நான் ADM (Additional District Magistrate)ஐ கேட்டேன். “வாசலில் போராட்டம் ஏதோ நடக்கிறதே, என்ன விஷயத்துக்காக நடக்கிறது?”

அவர் சிரித்துகொண்டே சொன்னார் :
“அதை நீங்க கண்டு கொள்ள வேண்டாம். 15 வருஷமா இந்த போராட்டம் நடந்துகிட்டிருக்கு. பல கலெக்டர்கள் தீர்த்து வைக்க முயற்சி செஞ்சாங்க. ஆனா ஒன்னும் நடக்கலை”.

நான் “சரி, பிரச்னை என்ன என்று சொல்லுங்கள்” என்று கேட்க, ADM விளக்கிச் சொன்னார்.

“நம்ம மாவட்டத்திலேயே மிகப்பெரிய திட்டம் சிம்மினி அணை- 1976 ல் 400 கோடி ரூபாயில் கட்ட ஆரம்பிச்சாங்க.

கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னால், அணையின் ரிசர்வயர் பகுதியில் குடியிருந்த 17 ஆதிவாசி குடும்பங்க த்தனாங்க. அப்போ அரசாங்கம் ஒவ்வொரு ஆதிவாசி குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் நிலமும் வீடு கட்ட பணமும் தர்றதா வாக்கு கொடுத்ததுன்னு ஆதிவாசிகள் சொல்றாங்க. ஆனா அது சம்பந்தமான நம்ம பைல்களில் அப்படி அரசாங்கம் உறுதிமொழி கொடுத்ததா எந்த ரிக்கார்டும் இல்லை. அன்னைக்கு 17 குடும்பமா இருந்தவங்க இன்னிக்கு 37 குடும்பமாக ஆயிட்டாங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் தர்ற வரைக்கும் சும்மா விடமாட்டோம்னு சொல்லி வன்முறையில் ஈடுபடறாங்க. டேம் சைட்டிலிருந்த IRRIGATION OFFICEஐ பலமுறை கொளுத்திட்டாங்க. வேலை செய்ய வர்றவங்களுக்கு கொலை மிரட்டல் விடறாங்க. இதுவரைக்கும் இவங்க மேலே 200 கிரிமினல் கேஸ் பதிவாயிருக்கு.15 வருஷத்துக்குப் பின் இப்போதான் டேம் கட்டி முடிஞ்சிருக்கு. செலவு 400 கோடியிலிருந்து இப்போ 600 கோடி ஆயிட்டது. டேம் திறப்பு விழா உடனே நடக்கப் போகுது. அதுக்காகத்தான் ஆதிவாசிங்க இங்க வந்து உண்ணாவிரதம் நடத்தறாங்க.”

ADM பேசி முடித்ததும் நான் கேட்டேன்: “நான் அவர்களை கூப்பிட்டு பேசலாமா?”

ADM: சார், தயவு செய்து வேண்டாம். தராதரம் தெரியாம பேசறவங்க
அவங்க. கெட்ட கெட்ட வார்த்தை யெல்லாம் உபயோகிப்பாங்க. முன்ன ஒரு கலெக்டர் அவங்களை பேச கூப்பிட்டுட்டு ரொம்ப அசிங்கபட்டுட்டார். அதனால தான் அரசியல்வாதிகள் யாரும் இவங்களை சப்போர்ட் பண்றதில்ல”

ADM க்கு நான் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிறிதும் விருப்பமில்லை என்று வெளிப்படையாக தெரிந்தது.

நான் மனம் தளரவில்லை. “பரவாயில்லை. அவர்களை வரச்சொல்லுங்கள். நான் அவர்களுடன் பேச விரும்புகிறேன். மலையாளத்தில் கெட்ட வார்த்தைகள் எனக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் பிரச்சனை இல்லை.”

அவர்கள் வருவதற்குள் சிம்மினி டேம் சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் வரவழைத்து என் மேஜை மேல் வைத்துக் கொண்டேன்.

ஆதிவாசிகள் வந்தார்கள், பெண்கள் குழந்தைகளுடன்.
நான் சொன்னேன்: “நான் புதிதாக வந்திருக்கிற கலெக்டர். சிம்மினி அணை சம்பந்தப்பட்ட பைல்கள் எல்லாத்தையும் இதோ வாங்கி வைத்திருக்கிறேன். நான் அவைகளை படித்து முடிக்க ஒரு வாரம் டைம் தாருங்கள். நீங்கள் சொல்வதில் உண்மையிருந்தால் நான் நிச்சயம் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன். அதுவரை உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” என்று நான் சொன்னதுதான் தாமதம்…

அவர்கள் பயங்கரமாக கூச்சலிட தொடங்கினார்கள். அரசாங்கத்தையும்,அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சகட்டு மேனிக்கு திட்டினார்கள். சத்தத்தை கேட்டு ADM மற்றும் போலீஸ்காரர்கள் உள்ளே ஓடி வந்தார்கள். நான் அவர்களை பொறுமை காக்க சொன்னேன். சிறிது நேரத்துக்குள் ஆதிவாசிகள் சுயமாகவே திட்டுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

பின்னர் என்னைப் பார்த்து, “கலெக்டர்களை ஒருகாலத்தில் நாங்கள் நம்பினோம். இப்போது நம்புவதாக இல்லை. எல்லோருமே அயோக்கியர்கள். உங்களை நாங்கள் நம்ப வேண்டும் என்றால் இதோ இதுதான் கவர்மென்ட் எங்களுக்கு கொடுத்த ஆர்டர். இது பிரகாரம் எங்க குடும்பம் ஒவ்வொன்னுக்கும் ஒரு ஏக்கர் நிலம் தந்துடுங்க. நாங்க உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிக்கறோம்” என்று சொல்லி ஒரு பழைய காகிதத்தை என்னிடம் நீட்டினார்கள்.

அந்த காகிதத்தை வாங்கி பார்த்தேன். பல வருடங்கள் பழமையான காகிதம். அதில் அரசாங்க முத்திரை இருக்கிறது. ஏதோ ஆர்டரை போன்று பைல் நம்பர்கள் இருக்கின்றன. வேறு ஒன்றும் அந்த காகிதத்தில் இல்லை. எல்லாம் மறைந்து போயிருக்கின்றன. ஆதிவாசிகளைப்
பொறுத்தவரை இதுதான் அரசாங்கம் அவர்களுக்கு தந்த வாக்குறுதி ஆர்டர். அரசாங்கத்தை பொறுத்த வரை இப்படியொரு தீர்மானம் எடுத்ததாகவோ ஆர்டர் தந்ததாகவோ பைல்களில் சான்று எதுவும் இல்லை.

“பரிசோதித்துவிட்டுத்தான் என்னால் எதையும் சொல்லமுடியும்” என்று நான் தயங்கியவாறு சொன்னேன்.

ஆதிவாசிகள் புறப்பட ஆயத்தமானார்கள்.

“அரசாங்கம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வரை நாங்கள் உயிரே போனாலும் உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டோம்” என்று உரக்க அறிவித்துவிட்டு வெளியேறினார்கள்.

ஆதிவாசிகள் போன பிறகு ADM மற்றும் அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். “பார்த்தீர்களா, சார்? அவங்க பயங்கரமான ஆட்கள்” என்று ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

நான் சிம்மினி அணை சம்பந்தப்பட்ட பைல்களை வீட்டுக்கு எடுத்து சென்றேன். நேரம் கிடைத்தபோதெல்லாம், அரசாங்கம் ஆதிவாசிகளுக்கு வாக்குறுதி தந்த விஷயம் பைல்களில் எங்காவது எழுதப்பட்டு இருக்கிறதா என்று தேடியபடி இருந்தேன். சான்று ஒன்றும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் ஒவ்வொரு வார இறுதியிலும் முதலமைச்சர் எங்கள்
மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கமாக இருந்தது. சிம்மினி அணை ஆதிவாசிகள் விஷயத்தில் நான் கவனம் செலுத்தி வருவதைப்பற்றி அவரிடம் பேச்சு வாக்கில் குறிப்பிட்டேன்.
அவர் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக, எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார்: “நீங்க புதுசா வந்திருக்கிற கலெக்டர். நாங்க எல்லாம் எவ்வளவோ முயற்சி செய்து தோற்று போன விஷயம் அது. அதுல ஈடுபட்டு உங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம். எவ்வளவோ மேம்பாட்டு பணிகள் இருக்கு அதுல கவனம் செலுத்த பாருங்க”.

ஆதலால், இரவுகளில் மட்டும் சிம்மினி அணை பைல்களை புரட்டி பார்க்க ஆரம்பித்தேன். 6,7 இரவுகள் கழிந்திருக்கும். ஒரு நாள் நள்ளிரவு எனக்கு ஒரு “யுரேகா” கிடைத்தது.

1976 முதல் சிம்மினி அணை சம்பந்தமாக நான்கைந்து தனித்தனி பைல்கள் இருந்து வந்திருக்கின்றன அரசாங்கத்தில் கடைபிடிக்கிற வழக்கப்படி ஒரே விஷயம் சம்பந்தப்பட்ட தனித்தனி பைல்களை எல்லாம் CLUB செய்து ஒரேஒரு பெரிய பைலாக ஆக்கிவிடுவார்கள். இப்படி ஒரே பைல் ஆக்கும்போது அதிலுள்ள தனித்தனி பைல்கள் எல்லாவற்றுக்கும் ஒரே சீரியல் நம்பர்கள் கொடுப்பார்கள்.

1976ல் தயாரான முதல் பைலின் ஒரிஜினல் பக்க நம்பர்கள் இங்க் பேனாவினால் எழுதப்பட்டிருந்தன. எல்லா பைல்களும் கிளப் செய்யப்பட்டவுடன் Ball point பேனாவால் புதிய சீரியல் நம்பர்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது. Ball point நம்பர்கள் 1976 பைல் முதற்கொண்டு Latest பைல் வரை தொடர்ச்சியாக இருக்கிறது. ஆனால் 1976 பைலில் இங்க் பேனாவின் நம்பர்களை பின்பற்றி சென்றால் பக்கம் எண் 25 க்கு பிறகு பக்கம் 30 தான் காணப்படுகிறது. நான்கு பக்கங்கள் நடுவில் காணாமல் போயிருக்கிறது.

இந்த நான்கு பக்கங்கள் ஏன் அந்த ஆதிவாசிகளுக்கு கொடுத்த ஆர்டராக இருக்க கூடாது?

என்னிடம் அவர்கள் காட்டிய காகிதம் நிச்சயமாக அரசாங்க பேப்பர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஏனெனில் அதில் அரசு முத்திரை இருந்தது. ஆனால் அதற்கு கீழே எந்த விவரமும் இல்லை. பல வருடங்கள் ஆனதால் அவை அழிந்து போயிருக்கலாம். ஆதிவாசிகள் சொல்வது பொய் என்றால் அவர்களிடம் அரசு முத்திரையிட்ட தாள் எப்படி கிடைத்தது? அரசாங்க முத்திரை உள்ள பேப்பரை போலியாகத் தயாரிக்கும் அளவுக்கு அவர்களுக்கு திறமையும் விவரமும் கிடையாது. மேலும், அந்த காலத்தில் XEROX போன்ற வசதிகளும் இல்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆதிவாசிகள் பக்கம்
ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது என்று நான் உணர்ந்தேன். அதேபோல் பைல்களில் தாள்கள் கிழிக்கப் பட்டிருப்பதையும் இவர்கள் சொல்வதையும் இணைத்துப் பார்த்தால் இவர்கள் சொல்வதில் ஏதோ ஒரு உண்மை இருப்பதாகவும் எனக்கு தோன்றியது.

அப்போது சிம்மினி அணையில் ஏறக்குறைய எல்லா வேலைகளும் முடிந்து அணை திறக்கப்பட தயாராகியிருந்தது. அதேநேரம் அணைப் பகுதியில் நிறைய வன்முறைச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. நக்சலைட்கள் உள்ளே புகுந்து பிரச்சினையின் திசையை மாற்றி பெரிய வன்முறையாக்க முயலுவதாக போலீஸ் உளவுத்துறை எச்சரித்தது. அரசு அலுவலகங்களில் உள்ள பைல்களை எரிப்பதும் வாகனங்களை மறித்து தாக்குவதும் நடந்து கொண்டிருந்தன.
போலீஸ் அதிகாரியும் நீர்ப்பாசனத்துறை எஞ்சினியரும் என்னிடம் வந்தார்கள்.
“சார் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் ஆர்டர் கொடுத்தால் நாங்கள் போலீசை வைத்து அதை கையாளவும் கட்டுப்படுத்தவும் முடியும்” என்று கேட்டார்கள்.

“நான் ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறேன். அது தீர்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். அதுவரை சற்றுப் பொறுங்கள்” என்று சொன்னேன்.

அடுத்த நாளே நான் திருவனந்தபுரம் சென்று முதலமைச்சரை சந்தித்தேன்.
அவர் உற்சாகமாக என்னை வரவேற்றார். “என்ன விஷயம்?” என்று கேட்டார்.
“சிம்மினி அணை திறப்பு விழாவுக்கு
தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளது”
“நான் அன்றே சொன்னேன். அந்த ஆட்கள் சமூக விரோதிகள் என்று. போலீஸ் ACTION ஒன்றுதான் வழி” என்றார் அவர்.

நான் சொன்னேன்: “சார்,நான் எல்லா பைல்களையும் படித்துப் பார்த்தேன்.
முக்கியமான பைலில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் கையில் அரசாங்க முத்திரையுள்ள
ஒரு பேப்பர் இருக்கிறது. அரசு தரப்பில் ஏதோ ஒரு தவறு நடந்திருப்பதாக நான் சத்தேகப்படுகிறேன். ஆதிவாசிகள் பக்கம் நியாயம் இருக்கறதா நான் கருதுகிறேன்”

முதல்வர் கருணாகரன் அவர்கள் என்னை உற்றுப்பார்த்தார். ஓரிரு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு சொன்னார்.
“கலெக்டர் இவ்வளவு உறுதியா சொல்லும்போது அதுல உண்மை இருக்கும்னு நானும் நம்பறேன். அப்போ இந்த பிரச்சனையை எப்படி சால்வ் பண்ணலாம்? நான் என்ன செய்யணும்?”
அமரர் கருணாகரனின் சிறப்பே இதுதான். அவர் வைத்திருக்கிற கருத்துக்கு முற்றிலும் எதிரான கருத்தை ஒரு அதிகாரி சொல்லும்போது அதை திறந்த மனதோடு வரவேற்கும் விதம் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதற்கு உதாரணம்.

நான் சொன்னேன்: “சார், ஆதிவாசிகள் கேட்பதெல்லாம் நம்மால் செய்ய முடியாது. ஆனால் நல்ல விதத்தில் அவர்களை Rehabilitate செய்ய என்னிடம் 3 கோடி ரூபாய் தந்தால் அவர்கள் பிரச்சனையை என்னால் சுமூகமாக தீர்த்துவிட முடியும்”.

உடனே காலிங் பெல்லை அழுத்தி நீர்ப்பாசனத்துறை செகரட்டரி யை வரச்சொன்னார். அவர் ஓடி வந்தார்.

முதலமைச்சர் அவரிடம் சொன்னார்: “நீங்க கலெக்டர் பேரில் 3 கோடிக்கு
ஒரு செக் தாங்க. சிம்மினி டேம் விஷயத்தை அவர் சால்வ் செஞ்சிடறதா சொல்றார்”

செக்ரட்டரிக்கு ஒரே குழப்பம்.
அவர் சிஎம்மை பார்த்து “இவ்ளோ பெரிய தொகையா இருக்கறதால நாங்க டிஸ்கஸ் பண்ணி…..” என்று இழுத்தார்.

சிஎம்( குறுக்கிட்டு): டிஸ்கஸன் ஒன்னும் வேணாம். டேமுக்கு 600 கோடி செலவு பண்ணியிருக்கோம். வெறும் 3 கோடியில 15 வருஷமா இருக்கற பிரச்னைய சால்வ் பண்றேன்னு ஒரு ஜில்லா கலெக்டர் வந்திருக்கும்போது… அவர் இங்கேயே இருக்கட்டும் நீங்க செக்கை மட்டும் இங்கே அனுப்பிவைங்க.

செக்ரட்டரியுடன் நான் போய் விவாதித்தால் சீனியர் ஜூனியர் பிரச்னையில் என் கருத்து வெற்றி பெறாது என்று சிஎம்முக்கு நன்றாக தெரியும். நான் ரூ 3 கோடிக்கான செக்குடன் ஊர் திரும்பினேன்.

அடுத்த நாளே, ஆதிவாசிகளை நான் அழைத்தேன். அவர்களுடன் தற்போது நக்சல் தலைவர்கள் இருவர் வந்தார்கள். அவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்கள். நான் ஆதிவாசிகளிடம் பேச தொடங்குவதற்கு முன்னரே அவர்கள் குறுக்கிட்டார்கள்.

“சார், நீங்கள் எல்லாம் பூர்ஷ்வாக்கள். இந்த சிஸ்டம் மக்களுக்கு எதிரானது.
நீங்கள் என்னதான் நல்ல முயற்சிகள் எடுத்தாலும் இந்த சிஸ்டம் அவைகளை வெற்றி பெற விடாது” என்றார்கள் இருவரும்.

நான் சொன்னேன்: “எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்பதில் நீங்கள்
உறுதியாக இருக்கிறீரகள். ஆதிவாசிகள் பிரச்னையை தீர்ப்பதற்கு என்னால் ஆன சில முயற்சிகளை நான் செய்யப் போகிறேன். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? தயவுசெய்து இரண்டு மாதங்கள் இவர்களிடமிருந்து விலகியிருங்கள் உங்கள் ஆசைப்படி என் முயற்சிகள் தோற்ற பிறகு, பழையபடி உங்கள் போராட்டங்களை நீங்கள் தொடரலாம்”

“நோ பிராப்ளம். இரண்டு மாதமென்ன, மூன்று மாதம் நாங்கள் விலகி நிற்கத் தயார். ஒன்றும் நடக்க போவதில்லை”
பழையகால முனிவர்களைப்போல் சபித்துவிட்டு அவர்கள் இருவரும் வெளியேறினார்கள்.

நான் ஆதிவாசிகளிடம் மனம்திறந்து பேசினேன்: “அரசாங்கத்தில் உங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக கருதும் ஒரே ஆள் நான்தான். நீங்கள் எதிர்பார்ப்பது போல் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் அரசாங்கம் கொடுக்க ஆசைப்பட்டாலும் கொடுக்க நிலம் இல்லை. எனவே, உங்களது 37 குடும்பங்களுக்கும் ஒரு நல்ல இடத்தில் நானே பூமி வாங்கி எல்லோருக்கும் சௌகரியமாக வீடுகள் கட்டித்தருகிறேன்.

இதற்கு முதலில் சம்மதமா என்று சொல்லுங்கள்?”

அவர்களுக்குள் சிறிதுநேரம் கலந்து பேசினார்கள். “எங்களை கூப்பிட்டு பேசி இவ்வளவாவது செஞ்சிதர்றேன்னு சொன்னவர் நீங்க ஒருத்தர்தான். நாங்க சம்மதிக்கறோம்”

நான் எனது திட்டத்தை சொன்னேன்:
“நாளைக்கு காலை 8 மணிக்கு நீங்க உங்க 37 குடும்பத்தோடு வாங்க. உங்களுக்காக இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்திருக்கேன். தாசில்தாரும் உங்க கூட வருவார். சுற்றியிருக்கிற
கிராமங்களுக்கு போய் எந்த மாதிரி இடத்துல நீங்க செட்டில் ஆனா நல்லாயிருக்கும்னு தேர்வு செய்யுங்க. நான் அந்த இடத்தை உங்களுக்காக வாங்கி வீடு கட்டித் தர்றேன்”

அடுத்த நாள் பஸ்ஸில் அவர்களை ஏற்றிவிட்டு, தாசில்தாரிடம் நான் கூறினேன்: “அவர்களை நன்றாக நடத்துங்கள். காலை, பகல், மாலை மூன்று வேளையும் அவர்களுக்கு
சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். வில்லேஜ் ஆபீசர்களின் உதவியுடன் இடங்களை காட்டுங்கள்”

ஆதிவாசி குடும்பங்கள் ஒரு நாள் முழுவதும் தாசில்தாருடன் பஸ்ஸில் பயணம் செய்து பல ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் எங்குமே அவர்கள் இடம் பெயர் வதற்கு ஏதுவான ஓரிடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரவு 8 மணி போல என் கேம்ப் ஆபீஸிற்கு எல்லோரும் வந்து என்னைப் பார்த்தார்கள்.
“சார் நாங்கள் ஒருநாள் முழுக்க அலைந்தும் நிலம் கிடைக்கவில்லை. எங்கு போனாலும் நிலம் இல்லை என்று சொல்கிறார்கள்” என்று அவர்கள் சொன்னாலும் அவர்களது முகங்களில் ஏதோ புதிய நம்பிக்கையின் அடையாளம் தெரிந்தது.

ஆதிவாசிகளின் மூத்தவராக இருந்த ஒருவர் சொன்னார்:
“ஆனால் இந்த ஒருநாள் பிரயாணத்துல உங்க மேல எங்களுக்கு முழுசா நம்பிக்கை வந்துவிட்டது. இதுவரைக்கும் குற்றவாளியாகவும் கொலையாளியாகவும் தான் போலீஸ் ஜீப்பில் நாங்க போயிருக்கோம். எங்க வாழ்க்கையில் முதல் முறையா தாசில்தார்கூட அரசாங்க விருந்தாளி மாதிரி இன்னிக்கிதான் பிரயாணம் பண்ணியிருக்கோம். சார், இனிமே நாங்க வரணும்னு இல்லை. நீங்க எந்த இடத்தை வாங்கி தந்தாலும் அங்க நாங்க போக தயார். எங்களுக்கு நல்லது தான் நீங்க நினைப்பீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சி”

அடுத்த நாள். மாவட்டத்திலுள்ள அனைத்து வில்லேஜ் ஆபீசர்களின் கூட்டத்தைக் கூட்டினேன். 37ஆதிவாசி குடும்பங்களை Rehabilitate செய்ய மாவட்டத்தில் எங்காவது நிலம் கிடைக்குமா என்று கேட்டேன். சிறிதும் யோசிக்காமல் எல்லோரும் இல்லை என்று சொன்னார்கள். நான் வேறு விஷயங்களை பேசிவிட்டு இறுதியில் சொன்னேன்: ” நான் தனிப்பட்ட முறையில் எனக்கு கொஞ்சம் நிலத்தை நேரடியாக வாங்க ஆசைப்படுகிறேன். நல்ல நிலம் ஏதாவது விலைக்கு வந்தால் சொல்லுங்கள்”

கூட்டம் முடிந்து எல்லோரும் வெளியே சென்றவுடன், ஒரு வில்லேஜ் ஆபீசர் மட்டும் தயங்கியபடி என்னை தனியாக பார்க்க வந்தார்.
“சார், என் சகோதரருக்கு ஒரு எஸ்டேட் இருக்கு. அதில் ஒரு பாகத்தை விற்க ஆசைப்படறார். கவர்மென்ட்டுக்கு தர விருப்பமில்லை. உங்களுக்கு பர்சனலா வாங்கணும்னா நீங்க வந்து பார்க்கலாம்.”
அந்த நிலத்தைக் காண்பதற்கு நானும் தாசில்தாரும் போனோம். அது மிகச் செழிப்பான எஸ்டேட் நிலம். தென்னை, வாழை, பாக்கு, ஏலக்காய் மரங்கள் நிறைந்து பசுமையாக காட்சியளித்தது.

நான் தாசில்தாரிடம் ” நீங்கள் போய் அந்த 37 ஆதிவாசி குடும்பங்களையும் இங்கே அழைத்து வாருங்கள்.”
தாசில்தார் கேட்டார்: சார், பர்சனலா நீங்க வாங்கறதுக்காகத்தான் இவ்வளவு செழிப்பான நிலத்தை காட்டி யிருக்காங்க. இதப்போயி…”
தாசில்தாருக்கு மனசு கேட்கவில்லை.

“நீங்க நான் சொன்ன மாதிரி அவங்களை அழைச்சிட்டு வாங்க”

37 ஆதிவாசி குடும்பங்களும் அங்கே வந்து சேர்ந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் என்னருகே வந்தனர்.நான் அந்த எஸ்டேட் நிலத்தை காட்டி “இதுதான் உங்களுக்காக வாங்கப் போகிற நிலம். போய் பாருங்க.” என்றேன்.

அவர்கள் ஸ்தம்பித்து நின்றார்கள்.
“இப்படி ஒரு செழிப்பான நிலம், எங்களுக்கா?” என்று கேட்பது போன்று அவர்கள் என்னை பார்த்தார்கள்.
அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.

அவர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அங்குள்ள மரங்களை நோக்கி ஓடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் மரத்தை கட்டிப்பிடித்து கொள்கிறார்கள். அதோடு விடவில்லை.
மரத்தை கட்டிக்கொண்டு சப்தமிட்டு
அழுகிறார்கள். ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்த தெரியாமல் இந்த எளிய மக்கள் மரங்களை அணைத்து அழுகிறார்களோ?

சற்று முன் “இவர்களுக்கு இவ்வளவு செழிப்பான பூமியா” என்று கேட்ட தாசில்தார், இந்தக்காட்சியைக் கண்டு கண் கலங்குகிறார். எனக்கும் கண்களில் நீர் நிறைய ஆரம்பிக்கிறது. உலகில் வேறு எந்த சர்வீஸாவது- அது எப்படிப்பட்ட பதவியை தந்தாலும்- இப்படிப்பட்ட ஒரு தருணத்தை உருவாக்கித்தர முடியுமா?

இத்தகைய தருணத்தை உருவாக்கித் தந்த ஐ ஏ எஸ் ஸுக்கு நான் மனதளவில் நன்றி சொல்லிக்கொண்டேன்.

ஆதிவாசிகள், “இது நல்லா இருக்கு சார்” என்று கூட சொல்ல முடியாமல் தழுதழுத்தார்கள். நிலத்தின் விலையை தாசில்தார் மூலம் நிர்ணயித்து, என் பெயரில் வாங்கினேன். ஆபீசில் அதற்கும் ஆயிரம் தடைகள்.
“வேண்டாம் சார் பிரச்னை வரும். பிறகு சிறைக்கு எல்லாம் போக வேண்டியிருக்கும். இப்படிச் செய்யாதீர்கள்” என்றார்கள்.
பரவாயில்லை என்று நான் துணிந்து வாங்கினேன். “இந்த ஆதிவாசிகளுக்காக ஒருநாள் ஜெயிலுக்கு போனால் தான் என்ன? அது எனக்கு பெருமைதானே” என்றேன். நிலம் 37 குடும்பங்களுக்கும் சமமாக பிரிக்கப்பட்டு BDO மூலம் எல்லோருக்கும் வீடுகளும் கட்டித் தரப்பட்டன.

நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கு
யாரோ போதனை செய்திருக்கிறார்கள். நீர் பாசனத்துறை பணத்தில் ஆதிவாசிகளுக்கு வீடும் நிலமும் வாங்கிக்கொடுத்து ஜில்லா கலெக்டர் தனக்கு பேர் சம்பாதித்து கொண்டார் என்று. அவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார்: “நீங்கள் நீண்ட நாளாக தீராமல் இருந்த பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறீர்கள். நல்ல விஷயம் தான். ஆனால் எங்கள் டிப்பார்ட்மென்ட்டை கலந்துகொண்டு காரியங்கள் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.”

எனக்கும் அது நியாயமாகத்தான் பட்டது.
37 ஆதிவாசிகள் குடும்பங்களுக்கு
முறைப்படி பட்டா வழங்க ஒரு சிறு நிகழ்ச்சியை தாசில்தார் ஏற்பாடு செய்திருந்தார். நான் அமைச்சருடன் இதுபற்றி பேசியபோது அவர் பட்டாக்களை ஆதிவாசிகளுக்கு தன்கையால், வழங்க ஒப்பு கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் நாங்கள் விளம்பரம் செய்யவில்லை.
பட்டாக்கள் வழங்கும் நாள் வந்தது. ஆதிவாசிகள் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தார்கள். “மாண்புமிகு நீர்பாசனத்துறை அமைச்சர் அவர்கள் இங்கு வருகை தந்து உங்கள் எல்லோருக்கும் நிலத்துக்கான பட்டாவை வழங்குவார்” என்று நான் அறிவித்தேன், அவர்கள் மகிழ்வார்கள் என்று நினைத்து.
நான் அறிவித்ததுதான் தாமதம்…

ஆதிவாசிகள் கோபமாக எழுந்து நின்றார்கள். ஒருவர் சொன்னார்:
“அரசியல்வாதி கையிலிருந்து பட்டா வாங்க நாங்கள் விரும்பவில்லை. கட்டாயம் அவரிடமிருந்துதான் வாங்க வேண்டுமானால்
எங்களுக்கு வீடோ நிலமோ ஒன்றும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு
எல்லோரும் வெளிநடக்க ஆரம்பித்தார்கள். நான் தாசில்தாரை
அனுப்பி அவர்களை சமாதானம் செய்யச்சொன்னேன். அதற்குள் அமைச்சரிடமிருந்து போன் வந்தது புறப்பட்டு வரலாமா என்று கேட்டபடி.
நான் அவருக்கு விஷயத்தை பக்குவமாக சொன்னேன்.

“ஆதிவாசிகள், 15 ஆண்டுகளாக வன்முறையாளர்களாக இருந்து
இப்போதுதான் சமாதான வாழ்க்கைக்கு மீண்டு வந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அவர்களை புறக்கணித்தார்கள் என்கிற கோபம் அவர்களுக்கு இருக்கிறது. அமைச்சர் தவறாக எடுக்கவில்லை என்றால்
விழா எதுவுமில்லாமல் எங்கள் Revenue Staff மூலம் பட்டாவை எல்லோருக்கும் விநியோகம் செய்துவிடுகிறேன்” என்று சொன்னேன். நீர்பாசனத்துறை அமைச்சர்(அமரர் TM ஜேக்கப்) பெருந்தன்மையோடு அவ்வாறே செய்துவிடச் சொன்னார்.

ஒருவாறாக சிம்மினி அணை ஆதிவாசிகள் பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது. அணையும் திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் என்னை வெகுவாக பாராட்டினார். பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுகியதால்தான் தீர்க்க முடிந்தது
என்று சொன்னார்.

திருச்சூர் கலெக்டராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தேன். அதன் பின்னர் சென்னையில் திரைப்பட தணிக்கை அதிகாரியாக பணியமர்த்தப்பட்டேன்.
சில வருடங்களுக்குப்பிறகு.
ஒருநாள் என்னைக் காண சிலர் வந்திருப்பதாக சொன்னார்கள். வரச் சொன்னேன்.

சிம்மினி அணை ஆதிவாசிகள்
நான்குபேர்! எனக்காக அவர்கள்
காட்டில் விளையும் பழங்களையும் தேனையும் கொண்டு வநதிருக்கிறார்கள்! எனக்கு சொல்லொணா ஆச்சரியம்!

“இவ்வளவு தொலைவு, என்ன வேலையாக வந்தீர்கள்? சென்னையில் ஏதாவது உதவி வேண்டுமா?”
“சார், உங்களை பாக்கனும்னு தோணுச்சி
அதனால வந்தோம். எங்க வாழ்க்கையையே மாத்திப்போட்டவங்க இல்லையா நீங்க. நாங்க இப்போ இருக்கிற இடத்துக்கு உங்க பேரைத்தான் வச்சிருக்கோம்”

அவர்கள் விடைபெற்று சென்றபோது ஏதோ என் நெருங்கிய சொந்தம் எனக்கும் பிரிந்து போனதுபோல் இருந்தது எனக்கு..!

— ஞானராஜசேகரன்.
தஞ்சை எழில் முகநூலில்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.