உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
 
ஒரு கொலை நடந்துவிடுகிறது. கொலை செய்யப்பட ஆளின் உடலை வைத்து அரசியல் கட்சிகளும், மதத் தலைவர்களும் தங்களுடைய நலனுக்காகவும், உள்நோக்கத்திற்காகவும் நடத்தும் ‘பிண அரசியல்’தான் கதை.
 
படத்திற்கு நாயகன் இல்லை, நாயகி இல்லை, காதல் காட்சிகளோ பாடல்களோ இல்லை. வில்லன் இல்லை. கதாபாத்திரங்கள் யாரும் நல்லவர்கள் இல்லை, யாரும் கெட்டவர்களும் இல்லை. தங்களுடைய தன்னலத்திற்காகச் செய்யும் செயல்களை இரண்டு நாட்களில் நடக்கும் காட்சிகளாக எடுத்திருக்கிறார்கள்.
 
இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில், கட்சி, மதப் பாகுபாடின்றி அனைவரையும் கேலி செய்திருக்கிறார் இயக்குநர். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் ஒரு காட்சியில் பணம் வாங்குபவர், “ரெண்டு நாள் முன்ன வந்திருந்தா அவனுக்கும் சேர்த்துத்தானே பணம் கொடுத்திருப்பே?” என்று கேட்க, அதற்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதியோ, “அவனை ரெண்டு நாள் கழிச்சு சாகச் சொல்ல வேண்டியதுதானே?” என்று எதிர்க்கேள்வி கேட்டு மறுத்துவிடும் காட்சி ஒன்று உண்டு.
 
படம் முழுவதும் பிணமாகவே நடித்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் புளூ சட்டை மாறன். ஆரம்பத்தில் அவர் சொல்லும் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் புறாக் கதை ஒன்றில் மட்டும்தான் மாறனின் குரலைக் கேட்கமுடிகிறது. ராதாரவி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர பெரிய நடிகர் பட்டாளம் எதுவும் இல்லை. இருந்தாலும், நடித்தவர்கள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
 
படத்தில் ஆங்காங்கே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். அது படத்திற்குத் தேவைதான் என்றாலும், அவற்றையும் பெண்களைத் தாக்குவது போன்ற ஒரு காட்சியையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் அட்டகாசம்.

மிகுந்த துணிச்சலுடன் இப்படியோர் அட்டகாசமான திரைப்படத்தைக் கொடுத்த படக் குழுவினருக்கு

வாழ்த்துகள்

-கார்த்திக் சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.