2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு ஆகியனவற்றுக்கு ஆட்பட்டு சொல்லொணாத் துயரடைந்து வருகிறார்கள் என்பதை ஆழமாகவும் அழகியலுடன் கூடிய கலைப்படைப்பாகவும் சொல்லியிருக்கிற படம் சினம்கொள்.

ஈழ ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி,புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளரான தமிழினி அவர்களின் சாவு இயற்கையானது அல்ல என குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இலங்கைச் சிறையிலிருந்து “விடுதலை“யான போராளிகள் அனைவருமே வெளி வந்து குறுகிய காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். 

அதோடு, 2009 ஆம் ஆண்டு கருவிப்போருக்குப் பின்னர், தமிழீழப்பகுதிகளில் தமிழ்மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களை பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது.
இவற்றை அடிப்படையான கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் சினம்கொள்.

சிறையிலிருந்து எட்டாண்டுகளுக்குப் பின் வெளியே வருகிற  போராளி அமுதனின் பார்வையில் விரியும் திரைக்கதை அடுத்தடுத்துப் பல அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

அமுதனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், அசல் போராளியாகவே மிளிர்கிறார். கண்களில் அவர் காட்டும் சோகமும் உறுதியும் சிறப்பு. கடத்தப்பட்ட பெண்ணை மீட்கப் படகில் செல்லும் காட்சியில் நெஞ்சு நிமிர்த்தி அவர் நிற்பதும் அண்ணனின் தம்பி என அடித்துப்பேசுவதும் அவருக்குப் பெருமை சேர்க்கின்றன.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் நாவினி டெரி மிகப்பொருத்தம். பல்லாண்டுகளுக்குப் பிறகு கணவன் முகம் கண்டதும் கதறிக்கொண்டு ஓடிவரும் காட்சியில் நம்மைக் கலங்கடித்துவிடுகிறார்.

போராளி யாழினியாக நடித்திருக்கும் லீலாவதி நடிப்பு அருமை. அவர் பேசும் வசனங்கள் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கான அறிவுரை.

பிரேம், தீபச்செல்வன்,தனஞ்செயன், பாலா,மதுமிதா, பேபி டென்சிகா உட்பட படத்தில் நடித்திருக்கிற அனைவரும் சரியாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

எம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவு ஈழத்தின் இயற்கை எழிலையும் ஈழத்துமக்களின் அவல வாழ்வையும் ஒருங்கே காட்சிப்படுத்தியிருக்கிறது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் உருகவைக்கின்றன. பின்னணி இசை திரைக்கதைக்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது.

படத்தின் வசனங்களையும் பாடல்களையும் எழுதியதோடு ஒரு போராளி வேடத்திலும் நடித்திருக்கிறார் தீபச்செல்வன். அவர் பொறுமையாகத் தெரிகிறார். அவருடைய வரிகள் ஒவ்வொன்றும் சினங்கொள்ள வைக்கின்றன.

ஒரே படத்தில் இவ்வளவு விசயங்களைப் பேசமுடியும், அதுவும் மிகப்பெரிய விசயங்களையும் ஒரு வசனம் ஒரு காட்சி மூலம் கடத்திவிட முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

கருவிப்போருக்குப் பின்னர் தமிழ் நிலங்களில் சிங்களர்களின் ஆக்கிரமிப்பு, போர்க்காலத்தில் இயக்கம் உருவாகிய தொழில்களின் மேற்பார்வையாளராக இருந்தவர்களே உரியவர்களாகி ஒதுங்கும் நிலை, தமிழினத்துக்குள்ளேயே இருக்கும் டக்களாட்டிகள், ஈழமக்களின் இன்றைய கையறுநிலை, குறிப்பாக போராளிகளின் நிலை ஆகிய எல்லாவற்றையும் நெறிபிறழாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஜெயில்ல இருந்து வர்ற பெடியள் எல்லாம் கொஞ்சநாள்ல இப்படி திடீர்னு செத்துப்போயிடுதுகள் என்கிற ஒற்றை வசனத்துக்குள் ஓராயிரம் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றையும் தாண்டி அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையெனினும் மனம் தளராமல் உளம் நடுங்காமல் அண்ணன் சொன்ன அறமே நம்மைக் காக்கும் நம் இனத்தைக் காக்கும் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கும் ரஞ்சித் ஜோசப்  இருளில் இருக்கும் இனத்துக்குக் கலை வெளிச்சமாக மின்னுகிறார்.

வாழ்த்துகள்.

இப்படம் இன்று முதல் (14.01.2022) eelamplay.com எனும் இணையத்தில் காணக்கிடைக்கிறது.

நன்றி…சினிமாவலை.காம்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.