இன்று மார்ச் 28 மற்றும் நாளை 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் எதற்காக?

அனைத்து ஊடகங்களும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் படும் பாதிப்புகளைப் பாருங்கள் ஐயகோ, ஆட்டோ கிடைக்கவில்லை, பஸ் பிடித்து ஆபீஸ் போக முடியவில்லை, பேங்க்குகள் வேலை செய்யவில்லை, வேலை நிறுத்தத்தால் அன்றாட வேலை எல்லாமே பாதிப்பு, படிப்பு பாதிப்பு என்று பேட்டி எடுத்து விளக்குகின்றன. வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது , வேலை நிறுத்தம் செய்தால் 2 நாளும் சம்பளம் கிடையாது என்ற அரசின் அறிவிப்பு என்பது போன்ற செய்திகளை தொடர்ந்து சொன்னபடியேயுள்ளன. அதிக பட்சம் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் என்று மட்டும் சொல்கின்றன. சரி. என்ன அந்த 12 கோரிக்கைகள் ? யார் வயிற்றை நிரப்ப இந்த கோரிக்கைகள் அதன் காரணங்கள் ? இந்தக் கோரிக்கைகள் என்ன என்பது பற்றி எந்த தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிக்கை ஊடகங்களும் ஏன் விலாவரியாக விளக்கவேயில்லை ? இந்தக் கேள்விக்கு விடை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

இந்தக் கோரிக்கைகளை இங்கே விளக்க முயல்கிறோம். பின்வருபவை தான் இந்தக் கோரிக்கைகள் மற்றும் அந்தக் கோரிக்கைகள் எழுவதற்கான காரணங்கள்.

மத்திய மோடி அரசு 44 வகை தொழிலாளர் சட்டங்களை வெட்டி, ஒட்டி, சுருக்கி 4 வகைத் தொகுப்பாக மாற்றியது. அதில் முக்கியமாக (Highlights) செய்த மாற்றங்கள் என்னவெனில்…

100 தொழிலாளர்கள் பணிபுரியும் ஒரு நிறுவனத்தை மூடுவதற்கு (lock out) தொழிலாளர் துறையின் அனுமதியெல்லாம் கேட்கத் தேவையில்லை என்று இருந்ததை தற்பேது 300 தொழிலாளிகள் இருந்தாலும் தொழிலாளர் துறையிடம் அனுமதி கேட்காமல் கம்பெனிகள் இஷ்டத்துக்கு மூடிக்கொள்ளலாம் என்று மாற்றியது.

அதே போல, ஒரு நிறுவனம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டால், அதில் 100 பேர் தான் வேலை செய்கிறார்கள் என்றால், 7 வருடத்திற்கு தொழிலாளிகளுக்கு போனஸ் என்று எதுவும் நிர்வாகம் தர வேண்டியது இல்லை. 
இதுவரை சம்பளத்தில் மட்டும்தான் தொழிலாளியின் தண்டனைக்காக.அபராதம் பிடிக்கலாம் என சம்பள பட்டுவாடா சட்டம் 1936 ல் இருந்தது. இனி தொழிலாளிக்கு தரப்படும் போனசிலும் கூட கம்பெனி அபராதம் பிடிக்கலாம் என்று மாற்றிவிட்டது.

Fixed Term Employment(வரையறுக்கப்பட்ட காலஅளவு வேலை) என்று ஒரு புதிய வரையறையைச் செய்து, அதன் மூலம் 3 வருடம் வரை ஒருவரை நிரந்தர வேலையாக வைத்துக் கொள்ளலாம். அவர் நிரந்தர தொழிலாளியாக கருதப்படமாட்டார், நிரந்தரத் தொழிலாளிக்குரிய சலுகைகள் 3 வருடம் வரையும் தரப்பட வேண்டியதில்லை என்று மாற்றிவிட்டது.  கம்பெனிகள் 3 வருடம் வரை ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டு பின்பு வேலையை விட்டு நீக்கி விட்டு, பிறகு ஒருவாரம் கழித்து மீண்டும் 3 வருடத்திற்கு அதே ஆளை அதே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். இதனால் நிரந்தரமான வேலை செய்ய வேண்டி வந்தாலும் அதற்கான எந்த சலுகைகளும் அந்தத் தொழிலாளிக்குக் கிடைக்காமல் போகும். இவ்வாறு நிரந்தரத்தன்மையுள்ள வேலைகளைச் குறைத்து எவ்வளவு பேரை வேண்டுமானாலும் Casual, Apprentice தொழிலாளியாக ஆகவே வைத்துக்கொள்ளலாம் என்கிறது புதிய சட்டம்.

அதே போல 8 மணிநேர வேலை என்பது நிச்சயமாக கிடையாது. 8 மணி நேரத்திற்குமேல் 12 மணிநேரம் வரையிலும் வேலை இருக்கலாம். அந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டுமெனில் நிர்வாக அதிகாரியிடம் அனுமதி பெற்றுத்தான் வெளியே செல்லவேண்டும்

மேலும் சமீபத்தில் மோடி அரசினால் வெளியிடப்பட்ட ராணுவ உற்பத்தி தொடர்பான சட்டத் திருத்தத்தில், தொழிலாளி கூடுதல்வேலை-ஓவர்டைம் செய்யவில்லை எனில் அதுவும் கூட வேலைநிறுத்தமாக கருதப்படலாம்.  அதாவது வேறு வார்த்தைகளில் சொன்னால் ஓவர்டைம் செய் என்றால் கட்டாயம் செய்து தானாகவேண்டும்.

ஒரு நிறுவனம் அங்கீகரிக்காத தொழிற்சங்கத்துக்கு யாராவது நிதி கொடுத்தாலே அது சட்டவிரோதமாகும். அப்புறம் எப்படி தொழிற்சங்கங்கள் உருவாவது ? வளர்வது ?

அதே போல, ஒரு நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க குறைந்தது 7 பேர் வேண்டும். இனிமேல் 7 பேர் எல்லாம் வைத்துக்கொண்டு தொழிற்சங்கம் அமைக்க முடியாது. தொழிற்சங்க பதிவை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் உரிமை. தொழிலாளர் துறையில் தொழிலாளர் ஆய்வாளர் (Inspector of Labour) போன்ற பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டு விட்டது. தொழிலாளர்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டாலும் யாரும் எதுவும் இனி கேட்கமாட்டார்கள்.

14வயதுக்குட்டவர்கள் குழந்தை தொழிலாளர்கள் என்ற சட்டம் நீக்கம் செய்யப்பட்டது.

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் நடத்துனர் என்ற கேட்டகிரி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.

இனிமேல் விபத்துக்கு நஷ்ட ஈடாக காப்பீட்டு நிறுவனங்கள் அதிகபட்சம் ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு வழியில் சொல்வதானால் தொழிலாளியின் உயிர், வாழ்க்கை 5 லட்சத்துக்கு மேல் பெறாது.

இது போன்று மத்திய அரசு ஏராளமான சட்டத்திருத்தங்கள் செய்துள்ளது. இது போன்ற 44 வகை தொழிலாளர் நலச்சட்டங்களை 4 வகைதொகுப்பாக மாற்றியதை கண்டித்தும்,

பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் தரும் பொதுத்துறைகளை சில ஆயிம் கோடிகளுக்கு கார்ப்பரேட்டுகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்பது,

இன்னும் இது போன்ற தொழிலாளர் விரோதப் போக்குகளையும், அராஜக சட்டங்களையும், கண்டித்தும், இவற்றை தொடர்ந்து அமல்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்தும் இந்த பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

பொதுமக்களாகிய நீங்கள் இந்தக் காரணங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இது உங்களின் உரிமைக்கான போராட்டம். நீங்கள் தான் தச்சனாய், குயவனாய், மெக்கானிக்காய், எல்க்டீரிசியனாய், பஞ்சு தொழிலாளியாய், சுத்திகரிப்பு தொழிலாளியாய், டாக்டராய், நர்சாய், கடையில் விற்பனைப் பிரதிநிதியாய், உணவு விநியோகம் செய்பவராய் இப்படி அனைத்து தொழில்களையும் செய்து உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் உங்களின் உரிமைகள் மேம்பட, வாழ்க்கை மேம்படவே இந்தத் தொழிற்சங்கங்களின் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

உணருங்கள். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நீங்களும் ஆதரவு தாருங்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.