இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பி.டி. சார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. படத்திற்கு ‘P T சார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

‘வேல்ஸ் திருவிழா’வில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் பெற்ற முனைவரும், நடிகருமான ஆர் பாண்டியராஜன், இசையமைப்பாளரும், நாயகனுமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடிகை கஷ்மிரா பர்தேசி, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே, கணேஷ் பேசுகையில், ” ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழாவில் எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறோம். இந்த படத்திற்கு ‘P T சார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் பி. டி. சாரை அனைவருக்கும் பிடிக்கும். இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி விரைவில் நம் கல்லூரியில் டாக்டர் பட்டத்தை பெறவிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி, அரசு பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து தன்னுடைய ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருக்கிறார். அதனால் ஹிப் ஹாப் தமிழா ஆதி, இனி டாக்டர் ஹிப் ஹாப் தமிழா அது என அழைக்கப்படுவார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில்,” இங்கு படக்குழுவினர் வரும்போது வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வியக்கும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கல்லூரி மாணவ மாணவிகளின் முன்னிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறோம். மாணவர்களாகிய உங்களை உற்சாகப்படுத்துவதற்காக விசிலை வழங்கினோம். 3000 விசில்களை எழுப்பும் ஒலிகளை விட, உங்களுடைய மகிழ்ச்சியான ஆரவாரம் வேற லெவலில் இருக்கிறது. ‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை இயக்கிய பிறகு, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் எனும் தரமான தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கணக்கு, அறிவியல், தமிழ் என ஒவ்வொரு ஆசிரியரையும் ஒவ்வொருவருக்கு பிடிக்கும். ஆனால் ‘பி.டி. சாரை’ அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் பிடிக்கும் ‘பி டி சார்’ வேடத்தில், அனைவருக்கும் பிடித்த நாயகனான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பது இரட்டை சந்தோசம். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்கு கிடைத்த இதே ஆரவாரமான வரவேற்பு, படத்தின் வெளியீட்டின் போது கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசுகையில், ” கல்லூரி வளாகத்தில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலை விழா.. என எந்த விழாவையும் நடத்தலாம். ஆனால் முதன்முறையாக தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா, கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவது பாராட்டுக்குரியது. இன்றைய சூழலில் பண்டிகைகளை மக்கள் விசேடமாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் பொங்கல் விழாவை, ஒரு திருவிழா போல் கொண்டாடுவது, தமிழ் உணர்வை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது போல் இருக்கிறது. இந்த எண்ணத்திற்கு பாராட்டுகள். இதற்கு அடித்தளமிட்ட பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான ஐசரி கணேஷ் அவர்களின் வாரிசு பிரீத்தா கணேசுக்கு பாராட்டுகள். இன்று உலக அளவில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், நாம் சிந்திப்பது தாய்மொழியில் தான். தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தாய்மொழிக்கும், அதனுடன் தொடர்புடைய திருவிழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவதை வெகுவாக பாராட்டுகிறேன். நீங்களும் கலந்துகொண்டு இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுங்கள். தீபாவளியை விட உற்சாகமாக கொண்டாடப்பட வேண்டிய திருவிழா பொங்கல் திருவிழா. இங்கு வருகை தந்தவுடன் இயக்குநரிடம் நீங்கள் வழங்கிய விசிலின் ஒலியை விட, மாணவர்களின் குரல் ஒலி அதிர்வை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டேன். ‘பி டி சார்’ படத்தை தற்போது தான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் கழித்து திரைக்கு வரும். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல் ‘பி டி சார்’ படத்திற்கும் வழங்குவீர்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கிறேன். ” என்றார்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பி. டி. சார்’. இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், ஆர். பாண்டியராஜன், இளவரசு, தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். .ஃபர்ஸ்ட் லுக்கில் ஹிப் ஹாப் தமிழாவின் தோற்றம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கடந்த ஆண்டில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.