ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் உருளும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். கருத்து வேறுபாட்டால் போங்கடா நீங்களும் உங்க சொத்துக்களும் என்று குடும்பத்திலிருந்து பிரிந்து ஜாலியாக இயற்கை ரசிகராக வாழ்கிறார் கடைக்குட்டி விஜய்.  இந்நேரத்தில் சரத்குமாருக்கு ஆபத்து நேரிட, குடும்பத்தையும் நிறுவனத்தையும் காத்து யார் அடுத்த வாரிசாக ஆவது என்பது மகன்களிடையே போட்டியாக மாறுகிறது. இத்துடன் பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ் நிறுவனத்தை அழிக்க என்னென்ன செய்தார், அதை வாரிசு விஜய் எப்படி தூள் பறத்தினார் என்பதுதான் `வாரிசு’ படத்தின் சுருக்கம்.

மிகப்பெரிய கார்ப்பரேட் தொழிலதிபர் சரத்குமார். அவர் மனைவி ஜெயசுதா, ஸ்ரீகாந்த், அடுத்த ஷாம். மற்றும் விஜய் ஆகியோர் தான் மகன்கள். அப்பாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் வீட்டை விட்டுப் போய் தனியாக வசிக்கிறார் விஜய்.

அம்பானி வீடாக இருந்தாலும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள். ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு உயிர்போகும் நிலை.அந்நேரம் திரும்ப அந்த வீட்டுக்குள் வந்து, சரத்குமாரின் தொழில் வாரிசாகிறார் விஜய். அதற்குக் கடும் எதிர்ப்புகள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்னவாகிறது? என்பதுதான் படம். அப்பா செய்வது சுரங்கத் தொழில். சுற்றுப்புறச் சூழலுக்கே கேடு விளைவிக்கும் இத்தகைய நிறுவனத்தைத் தான் விஜய் காக்கப் போராடுகிறார். இப்படத்தில் விஜய் தன்னுடைய சமூகப் பொறுப்பு என்பதை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டிருக்கிறார்.

விஜய் ஆரம்பத்தில் துள்ளுந்தில் ஊர்சுற்றுகிறார். பல இயற்கை அழகுகளைப் புகைப்படமாக்குகிறார். பல்வகை மனிதர்கள் சந்திப்பு. புதிய தொழில் தொடக்கம் என உற்சாகமாக வலம்வரும் நேரத்திலும் அம்மா பாசத்தால் வீட்டுக்கு வந்து அப்பா பாசத்தால் அதிரடி முடிவெடுக்கும் நேரம் என விஜய் தனது நடிப்பு முத்திரையைப் பதிக்கிறார். மிக இயல்பாக நடனம் ஆடக்கூடிய விஜய் இந்தப்படத்தில் கஷ்டப்பட்டு கவனமாக ஆடுகிறார். நகைச்சுவையில் யோகிபாபுவுடன் சேர்ந்து

எனக்கும் எங்க அப்பாவுக்கும் பிரச்சினைன்னா அதில் உனக்கென்ன? என்று பத்திரிகையாளரிடம் சீறும்போது நிஜ விஜய் தெரிகிறார்.

நாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு, ஜிமிக்கி பொண்ணு மற்றும் ரஞ்சிதமே ஆகிய பாடல்களில் இளைஞர்களைக் கிறங்கடிக்கும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார். ஜிமிக்கி பொண்ணு பாடலில் அவருக்கு உடை வடிவமைத்தவருக்குப் பாதி சம்பளம் கொடுத்தால் போதும்.

சரத்குமார் கம்பீரமான தொழிலதிபராகத் தோன்றுகிறார். மகன் விஜய் முன் உடைந்து நிற்கும் காட்சி அவருடைய நடிப்புத்திறனுக்குச் சான்று. ஜெயசுதா, தெலுங்குநடிகர் ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோருக்கு முக்கியமான வேடங்கள். அவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

வழக்கம்போல வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்.யோகிபாபு கொஞ்சநேரம் வருகிறார். ஓரிரு காட்சிகளில்  கெஸ்ட்ரோலில் வந்து எஸ்.ஜே.சூர்யா வரவேற்புப் பெறுகிறார்.

பெரும் நடிகர் படம் என்பதால் கார்த்திக்பழனியின் ஒளிப்பதிவு படத்தைப்  பெரும் செலவில் பளபளவென்று பெரிதாக்கி காட்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் செல்வச்செழிப்பு நிரம்பிவழிகிறது. தமனின் இசையில் ரஞ்சிதமே பாடல் ஆட்டம்போட வைக்கிறது.பின்னணி இசை தாழ்வில்லை.

பிரவீன் கே.எல் படத்தொகுப்பு. இன்னும் கொஞ்சம் நீளம் குறைத்திருக்கலாம்.

தெலுங்கு இயக்குநர் வம்சிபடிபள்ளி முழுக்க முழுக்க விஜய்யை நம்பியிருக்கிறார். அதனால் கதை திரைக்கதை லாஜிக் போன்ற எது பற்றியும் கவலைப்படவில்லை. கதையும் பெயருக்குத் தான் என்று இருப்பது போலவே இருக்கிறது. பணக்கார வீட்டு குடும்பக் கதை என்பதால் கொஞ்சம் ஆடியன்ஸிலிருந்து தள்ளி நிற்கிறதோ கதை என்று எண்ணும்படி இருக்கிறது. ஆனாலும் குடும்பத்தில் நிகழும் மெல்லிய உணர்வுகளை நன்றாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காட்சியமைப்புகள் தான் இன்னும் ஆழமாக வலுவாக இல்லை.

பல மொழிகளில் சுமார் 400 கோடிகளுக்கு மேல் பிஸினெஸ் கணக்கு வைத்து வெளியிடப்படும் இத்தகைய ஸ்டார் திரைப்படங்கள் ரசிகரை சும்மா மகிழ்விக்கத்தானா ? விஜய் கொட்டி நடித்த நடிப்பு அத்தனையும் சுரத்தேயில்லாமல் போகத்தானா ? குடும்பக்கதைகளையே சொன்னாலும் எவ்வளவோ ஆழமான நாவல்கள், கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எடுத்து திரைக்கதை பண்ணியிருக்கலாமே சார் என்று கேட்கத் தோன்றுகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.