எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா , சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இந்தப் படத்தின் வெற்றிச் சந்திப்பு-success meet ல் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முதலாவதாக சவுண்ட் டிசைனர் வினோத் பேசியதாவது, ” நல்ல படத்தை எல்லோரிடமும் சரியாக கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஒரு நல்ல படத்தில் வேலை பார்த்துள்ள திருப்தி கிடைத்துள்ளது. இது போன்ற படங்களை நீங்கள் கொண்டாடும் பொழுது தான் அடுத்து நிறைய நல்ல படங்கள் வரும். நன்றி!”

எடிட்டர் சுரேஷ் பேசியபோது, ” இது என்னுடைய முதல் படம். நான் ஏற்கனவே இரண்டு படங்களில் அருண் சாரிடம் அசிஸ்டெண்ட் ஆக இருந்தேன். இந்தப் படம் ஸ்ரீகர் சார் செய்ய வேண்டியது. அவர் வேறு இடத்தில் பிஸியாக இருந்ததால் என்னை செய்ய சொன்னார். வாய்ப்பு கொடுத்த அருண் சாருக்கும் சித்தார்த் சாருக்கும் நன்றி!”

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், “இது போன்ற நல்ல கதையம்சம் கொண்டப் படங்களை பார்த்து பாராட்டும் ஊடகங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. ஒன்றரை வருடமாக படத்தில் சிறு சிறு விஷயங்கள் கூட பார்த்து பார்த்து செய்திருக்கிறோம். அதற்கான சுதந்திரமும் வாய்ப்பும் கொடுத்த இயக்குநருக்கும் சித்தார்த் சாருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்ததற்கு மகிழ்ச்சியாக உள்ளது”.

பாடலாசிரியர் விவேக், “என் அருண் என்று இயக்குநரை சொந்தம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இதைவிட சிறந்த நடிப்பை கொடுக்க முடியுமா என சொல்லும் அளவிற்கு சித்தார்த் நடித்துள்ளார். இது போன்ற ஒரு கதையை நம்பி தயாரித்துள்ள சித்தாரத்துக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். என்னாலான சின்ன சமர்ப்பணமாக இந்த படத்துக்கு நான் சம்பளம் வாங்கவில்லை” என்றார்.

கலை இயக்குநர் பாலச்சந்திரன், “நல்ல படமாக உருவான இதை வெற்றி படமாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி!”

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ” இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். அந்த திருப்தி எனக்கு உள்ளது. படத்தில் உள்ள பேருந்து காட்சி, கிளைமாக்ஸில் நிமிஷா பேசும் காட்சிகளுக்கு எல்லாம் சிறப்பான இசை வேண்டும் என சித்தார்த் ஆர்வத்தோடு கேட்டார். அது பார்வையாளர்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!” என்றார்.

நடிகை சிந்துஜா விஜி, ” ஒரு நல்ல படத்தில் வேலை செய்துள்ள திருப்தி கிடைத்துள்ளது. இந்த படத்தில் பல இடத்தில் சித்தார்த் என்னை அழ வைத்துள்ளார்”.

நடிகர் பிரணவ், ” இப்படியான ஒரு நல்ல படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்களுக்கும் நன்றி”.

ஆக்டிங் கன்சல்டண்ட் ராஜேஷ், “ஆக்டிங் கன்சல்டன்ட் என்பது ஒன்றுமில்லை. படத்திற்கு முன்பு 40 நாள் ஒர்க் ஷாப் அனைவருக்கும் வைத்தோம். இதற்கு காரணம் சித்தார்த் சார்தான். எல்லா நடிகர்களுக்கும் நடிப்பு பயிற்சி கொடுக்க சுதந்திரம் கொடுத்த இயக்குநருக்கும் சித்தார்த்துக்கும் நன்றி”.

நடிகர் நாட்டு ராஜா பேசியதாவது, “படத்தின் இயக்குநர் அருணுக்கும், தயாரிப்பாளர் நடிகர் சித்தார்த்துக்கும் நன்றி. திரைத்துறையில் இது போன்ற நல்ல படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் கிடைப்பது சாதாரண விஷயம் கிடையாது. என்னிடம் உள்ள சிறந்த விஷயத்தை அருண் சார் வாங்கியுள்ளார். படத்தைப் பாராட்டும் அனைவருக்கும் நன்றி”.

நடிகர் தர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வரவேற்புக் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. படத்தைத் தயாரித்து நடித்துள்ள சித்தார்த் சாருக்கும் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. சித்தார்த் சார் படத்தில் அருமையாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது இயக்குநர் அருண் சார்தான். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த கனமான கதாபாத்திரத்தை அருண் சார் கொடுத்துள்ளார். அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்திருக்கிறேன். 20 வருடங்கள் வாய்ப்புத் தேடி அலைந்த எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ‘பிச்சைக்காரன்’ படத்தில் சசி சாரும் அருமையான கதாபாத்திரம் கொடுத்தார். பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர். மிக்க நன்றி!” என்றார்.

நடிகர் பாலாஜி, “ என்னுடைய முதல் படம் இது என்பது பெருமையாக உள்ளது. இயக்குநர் அருண் சார், சித்தார்த் சார், ராஜேஷ் சார் இவர்களுக்கு நன்றி” என்றார்.

நடிகை அஞ்சலி நாயர், ” இந்த படம் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்று வருவதில் மகிழ்ச்சி. சித்தார்த் சாருடன் எளிமையாக நடித்தோம். ‘த்ரிஷ்யம்’ படம் பார்த்துவிட்டு தான் என்னை இந்த படத்தில் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு ஜித்து ஜோசப் சாருக்கு நன்றி! இந்த படம் ஆரம்பித்த சில நாட்கள் நடித்த பின்பு எனக்கு இரண்டாவது குழந்தை உருவானது. ஏழு மாதங்கள் வரை படத்தில் நடித்தேன்” என்றார்.

இயக்குநர் சசி, “’சித்தா’ படத்தில் ஒரு காட்சி வரும். தூய்மைப் பணியாளர்களைத் தவறாக பேசும் ஒருவரை கதாநாயகி அடிப்பது போல. அந்தக் காட்சியில் கண்கலங்கி விட்டேன். இதுபோல, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கேரக்டர் ஆர்க்கும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அருணின் ஃபிலிம் லாங்குவேஜ் சிறப்பாக வந்துள்ளது. எமோஷனலான, எண்டர்டெய்னிங்கான படம் இது. கிளைமாக்ஸை இதுபோல எடுப்பதற்கு ஒரு இயக்குநருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அது அருணுக்கு உள்ளது. தயாரிப்பாளராக சித்தார்த்தும் அந்த இடத்தை அருணுக்குக் கொடுத்துள்ளார். இதன் வெற்றி என் படத்தின் வெற்றி போல சந்தோஷமாக உள்ளது. அதைக் கொண்டாடவே இங்கு வந்தேன். தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான படம் கிடைத்துள்ளது”.

இயக்குநர் அருண்குமார், ” இந்த படத்தை எடுத்து செய்வதற்கு நானும் சித்தார்த்தும் ஒரு நாள் கூட யோசித்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இதில் வேலை பார்த்துள்ளோம். என்னை நம்பி வேலை பார்த்த படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கமர்சியலாகவும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்பிற்கு மிகப்பெரிய அங்கீகாரங்கள் வரும் என காத்திருக்கிறேன். இந்தப் பொறுப்போடு இனி வரும் படங்கள் செய்வோம்”.

நடிகர் சித்தார்த், “இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ‘சித்தா’ படம் அன்பு, குடும்பம், குழந்தைகள் வளர்ப்பில் உள்ள பொறுப்பு பற்றிய படம். குற்றம், தண்டனை சார்ந்த படம் கிடையாது. நடந்த ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்றி விடாதீர்கள் என சொல்லும் படம். அடுத்து ஒரு மிகப்பெரிய படம் வரப்போகிறது. அதுவரை இந்தப் படத்தை எத்தனை பேரிடம் சென்று சேர்க்க முடியுமோ கொண்டு போங்கள். இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு குடும்பத்தில் உரையாடல் ஆரம்பித்தால் கூட சந்தோஷம்தான்.
மணி ரத்னம், கமல்ஹாசன் என எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்த குருக்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஊக்கம் மிகப்பெரிது. ரஜினி சாரும் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். படக்குழுவினர் அனைவருடைய உழைப்பும் இப்போது பேசப்படுகிறது. பழனி என்ற ஊரும் அந்த முருகனும் எங்கள் படக்குழுவை நன்றாகப் பார்த்துக் கொண்டதற்கும் அங்குள்ள புது இடங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தில் நடித்துள்ள அந்த குழந்தைகள் தேவதைதான். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்கள். ’அஞ்சலி’ படத்தின் குழந்தைகள் போல இவர்கள் இயல்பாக நடித்துள்ளதாக மணி சார் பாராட்டினார்.
உனக்குதான் பாடல் மறக்கமுடியாத ஒன்றாக விவேக் கொடுத்துள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி. 99% படங்கள் ஆண்களுக்காகதான் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப் பெண்களுக்கான படம் என்று சொல்லவில்லை. மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும். இந்தப் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சசி சார் இரண்டு மணிநேரம் அழுது கொண்டே பேசினார். ஒரு நடிகனாக ‘சித்தா’ எனக்கு முக்கியமான படம். அஞ்சலி நாயர் படம் ஆரம்பிக்கும் போது கர்ப்பமாகிவிட்டார். எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் அது. படத்தில் சிறப்பாக வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் நன்றி!” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.