படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார்.
இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான பாதையில் பயணம், அதற்கான காரணம், அதன் விளைவுகள் ஆகியனவற்றை நகைச்சுவை இழையோடச் சொல்லியிருக்கும் படம் டங்கி.
இளமை மற்றும் வயதானவர் ஆகிய இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார் ஷாருக்கான்.நகைச்சுவை, காதல், கோபம், சோகம் ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். எதிலும் நான் குறைந்தவ்னில்லை என்று இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.டாப்சியிடம் காதல் சொல்லும் காட்சி,நீதிமன்றக் காட்சி ஆகியன அவருடைய நடிப்புக்குப் பலம் சேர்க்கின்றன.
நாயகியாக நடித்திருக்கிறார் டாப்சி. கதையின் தொடக்கமும் முடிவும் அவரைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஷாருக்கானுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். அவருடைய மெல்லிய புன்சிரிப்பு பல காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்கிறது.
பொம்மன் இரானி, விக்ரம் கோச்சார், அனில்குரோவர் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் வரும் விக்கிகவுசல் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
மனுஷ்நந்தன், சி.கே.முரளிதரன், அமித்ராய் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பல்வேறு வகையான நிலப்பரப்புகள் மற்றும் உணர்வுகளைக் காட்சிகளிலும் கடத்தியிருக்கிறார்கள்.
ப்ரீதம் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம், அமன்பந்தின் பின்னணி இசை அளவு.
பொருளாதாரத்தேவைகளுக்காக புலம்பெயர்பவர்களை, அவர்களுடைய சிக்கல்களைக் கவனப்படுத்த முயன்றுள்ளார் இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி.
சில உண்மை நிகழ்வுகளின் புகைப்படங்களும் ஷாருக்கான் தலைமையில் நடந்துசெல்லும்போது மண்டை ஓடு உள்ளிட்ட உடலெலும்புகளும் கிடக்கும் காட்சிகள் உட்பட பல குறியீட்டுக் காட்சிகளும் அதிர வைக்கின்றன.
இலண்டன் நீதிமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டுக்குள் பிற நாட்டினர் வர வைத்திருக்கும் நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என்கிற உலகந் தழுவிய ஆழமான கருத்து பேசப்படுகிறது.
அந்தக் கருத்தை நகைச்சுவைத் தேன் கலந்து கொடுத்து வரவேற்புப் பெறுகிறார் இயக்குநர் இராஜ்குமார் ஹிரானி.
– தனா