அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில்
கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட தாகவும், காண்பவர்களை எல்லாம் வெட்டிக் கொல்வ தாகவும் பதற்றத்தோடு சொன்னார்கள். செருப்பை மாட்டிக் கொள்ளவோ, மாற்றுத் துணிகளை
எடுத்துக்கொள்ளவோ நேரமின்றி கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு உற வினர்களோடு வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்த பள்ளிக் கூடத்தில் தஞ்சமடைந்தோம்.

அது பாது காப்பில்லை என்றார்கள். என்னோடு சேர்த்து 17 பேரும், என் வயிற்றில் இருந்த குழந்தையோடு 18 பேர் ஒரு மசூதிக்குள் தஞ்சமடைந்தோம்.
அதுவும் பாது காப்பில்லை என்றார்கள். ஊரை விட்டுக் கிளம்பினோம். ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டிருந்தோம். 18பேரும் ஊர் ஊராக பாதுகாப்பான இடம்தேடி உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடிக் கொண்டிருந்தோம். மார்ச் 3 அன்று ஒரு கும்பல் எங்களை வழிமறித்தது. 20, 30 பேர் இருப்பார்கள். அனைவரும்
எங்கள் ஊர்க்காரர்கள். நான் பிறந்தது முதல் அவர்களைப் பார்த்தே வளர்ந்திருக் கிறேன். அவர்கள் சிலரை நானும், என்னை அவர்களும் உறவு சொல்லி அழைத்திருந்திருக்கிறோம். அவர்களைக் கண்டதும் உள்ளூர்க்காரர்கள் என்பதால் பெரிய அச்சம் ஒன்றும் எனக்கு தோன்றவில்லை. ஆனால் அவர்கள் அப்போது வேறொன்றாக
மாறியிருந்தார்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் 17பேரில் 14 பேரை ஈவிரக்கமின்றி எனது கண் முன்பே படுகொலை செய்தார்கள். அதில் 7 பெண்கள் இருந்தோம். கைக்குழந்தையோடும், கரு வாக இருந்த குழந்தையோடும் இருந்த நான், எனது தங்கை, வீட்டிலிருந்து ஓடிவரும் போது நிறைமாத கர்ப்பிணியாக
இருந்து ஓடிக் கொண்டிருந்த இரண்டாம் நாளில் குழந்தையைப் பெற்றெடுத்த என் சித்தப்பா மகளும் அதில் இருந்தார். 7 பெண்களையும் அவர்கள் எவ்விதக் கரு ணையுமின்றி கொடூரமான முறையில் ஆயுத முனையில் வல்லுறவு செய்தார்கள். அவர்களின் தாய் வயது, தங்கை வயது, மகள் வயது, பேத்தி வயது இருந்த யாரையும்
விட்டு வைக்கவில்லை. எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்கள். அதற்கு முன்பு ஒருவரையும் விட்டுவிடாமல் வல்லுறவு செய்தார்கள்.

எந்த தாய்க்கும் நேரக்கூடாத துயரத்தை நான் அனுபவித்தேன். அய்யோ, நினைக்கவே மனம் இப்போதும் பதறுகிறதே, எனது மூன்று வயது மகளின் காலைப் பிடித்து அருகில் இருந்த
பாறையில் அவளது தலையை ஓங்கி அடித்து கொன்றார்கள். கர்ப்பிணிப் பெண் என்று பாராமல் என்னை பலரும் வல்லுறவு செய்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்று இருந்த எனது சித்தப்பா மகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. விலங்கினங்கள் கூட ஈன்ற ஒரு பெண் விலங்கோடு உடனடியாக
உறவு கொள்ளாது என்று கேட்டிருந்தேன். ஓட முடியாத நிலையிலிருந்த- அப்போது தான் ஈன்றெடுத்த மான் குட்டியை பசியில் இருக்கும் புலி கூட தின்னாது என்று பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தக் கயவர்களைப் பொறுத்தவரை அனைத்தும் பொய்யாய்ப் போனது. நானும் கொல்லப்பட்டு விட்டதாகவே நினைத்து அவர்கள்
சென்றுவிட்டார்கள்.
ஆனால் எனக்கு உயிர் இருந்தது. என்னோடு 7 வயது, 4 வயதுச் சிறுவர்கள் மட்டும் உயிர் பிழைத்திருந்தார்கள். அதாவது, எங்கள் குடும்பத்தில் 14 பேர் கொல்லப்பட்டு விட்டார்கள்.
தாயை, பெற்றெடுத்த மகளை, சுற்றத்தை, என் சுயமரியாதையை இழந்து நான் துயரின் விளிம்பில், ஆற்றாமையில்
நின்று கொண்டிருந்தேன். கொஞ்சம், கொஞ்சமாக மன வலிமையை உருவாக்கிக் கொண்டு புகார் கொடுத்தேன். 14 பேரையும் உடற்கூராய்வு செய்யா மலேயே எரித்துவிட்டார்கள். நான் பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டது பொய் என்றார்கள். எங்களை கொலை செய்தவர்கள் மட்டுமின்றி, காவல்துறையினர், மருத்துவர்,
விசாரணை அமைப்புகள் என அனைவரும் குற்றத்தையும், குற்றவாளிகளையும் பாதுகாத்து நின்றார்கள். மலைப்பு தான். ஆனாலும் தொடர்ச்சியாக முயற்சி செய்தேன். டீஸ்டா செதல்வாத் போன்றவர்கள் உத வினார்கள். மூடப்பட்ட வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத் தின் உத்தரவால் திறக்கப்பட்டது. குஜராத் காந்தியின் பூமி
மட்டுமல்ல, அது மோடியின் பூமியும் கூட. குற்றங்கள் நடப்பதும், குற்றமிழைத்தவர்கள் கொண்டாடப்படுவதும் வழக்கமாகியிருக்கும் காலம் இது. எனவே, அங்கு நீதி கிடைக்காது என்று அறிந்து வேறொரு மாநிலத்திற்கு வழக்கு விசாரணையை மாற்றக் கோரினோம். உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது
மகாராச்ட்ராவில் வழக்கு
நடந்தது. அந்த வழக்கில் முதலில் முதல் தகவல் அறிக்கையை முறையாக பதிவு செய்யாத காவல்துறையினரும், என்னை பரிசோதித்து தவறான சான்றளித்த மருத்துவரும் குற்றத்திலிருந்து விடு விக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு மேல்முறையீட்டில் அவர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டிருந்தார்கள்.

அதில் 11 பேர் சிறையில் அடைக்கப் பட்டார்கள். ஏற்கனவே ஒருவர் இறந்து போனார். நீதிமன்றம் எனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், வீடும், அரசு வேலை யும் தர உத்தரவிட்டிருந்தது. நினைவில் கொள்ளுங்கள், நான் இருப்பது குஜராத்தில். மோடியின் குஜராத்தில். பணம் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.

வீடும், அரசு வேலையும் தரவில்லை. ஆனால், எனக்கு நம்பிக்கை எஞ்சியிருந்தது. முன்னே நின்ற தடைக் கற்கள் அனைத்தை யும் இந்திய நாட்டின் நீதித்துறை விலக்கி, தகர்த்து நீதி வழங்கியிருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

அந்த நம்பிக்கையில் தான் இப்போது அமிலம் ஊற்றப்பட்டிருக்கிறது.

இந்தியா தனது சுதந்திர தினத்தை அதன் வைர விழாவைக் கொண்டாடிக் கொண்டி ருந்தது. தங்கள் முகப்புப் படங்களில் மூவர்ணக் கொடியை அடையாளமாக வைத்திருந்தார்கள். தங்களுடைய தனிப்பட்ட முகமல்ல; தனிப்பட்ட விருப்பமல்ல; எங்களு டைய ஒரே அடையாளம் மூவர்ணக் கொடி தான் என்று எல்லோரும்
கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருந்தது. இந்த மகிழ்ச்சி அனைத்தும் எவரையும் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். இந்த புன்னகை பூத்த முகங்களுக்கிடையே 11 முகங்கள் சிரித்த படியே வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் கழுத்தில் மாலைகள் தொங்குகிறது. அவர்கள் முகத்தில்
பெருமிதப் புன்னகை மலர்ந்திருக்கிறது. அவர்களைப் பாராட்டி சிலர் இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காலில் விழுந்து வணங்கி சிலர் அவர்களின் ஆசி கோரி நிற்கிறார்கள். ஒரு இலை முழுவதும் விருந்து படைத்து அதன் நடுவில் ஒரு துளி விஷத்தை வைத்தது போல பவளவிழா சுதந்திர
தினத்தை 140 கோடி மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இவர்களுடைய கொண்டாட்டமும் இருந்தது. ஆம். என் குடும்பத்தில் 14 பேரைக் கொன்றவர்கள். நான் உட்பட 7 பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவர்கள். இந்திய நீதி வழங்கும் அமைப்பில் உயர்ந்த பீடத்தால் குற்றவாளி கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தான் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியக் சுதந்திரமும், இந்தியக் குடியரசும் எப்படி மாறிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான அடையாளங்களில் ஒன்று இது.

இதோ, நான் பிறந்து, வளர்ந்து, தவழ்ந்து, விளை யாடி, படித்து, திருமணம் செய்து, குழந்தை பெற்ற அந்த ஊரில் அவர்கள்
கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக் கிறார்கள். நான் அந்த ஊரில், அந்த துயரமான நாளுக்கு பிறகு குடியேறவே முடியவில்லை. விசாரணையில் பல்வேறு கட்டத்திலும் என்னை, என் கணவர் யாகூப் ரசூலை, எனது கைக் குழந்தையை கொன்று விடுவதாக, எரித்து விடுவதாக, காணாமல் செய்து விடுவதாக 2002ஆம் ஆண்டிலிருந்து
தொடர்ச்சியாக மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். எனவே, நிரந்தரமாக இந்த 20 ஆண்டு களும் நிலையானதொரு இடத்தில் நான் தங்கியிருக்கவே முடியவில்லை. அகதிகளுக்கு கூட முகாம் உண்டு. காந்தி பிறந்த பூமியில் பிறந்த எனக்கு ஒரு முகாம் கூட அல்ல, நிரந்தரமாக ஒரு வீட்டில் கூட இருக்க முடியாத நிலைமையில்
ஓடிக் கொண்டே இருந்தேன். இந்த காலம் முழுவதும் நான் பட்ட துயரங்களும், துன்பங்களும், வேதனைகளும் உலகில் வேறெந்த பெண்ணுக்கும் ஏற்படவே கூடாது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அன்னை மரியாள் பார்த்துக் கொண்டிருந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இறந்திருந்தாலும் அந்த வலியை அவர்
உணர்ந்திருக்கக் கூடும். கம்சனால் தனது மகன் கண்ணன் கொல்லப்படக் கூடும் என்று அறிந்த போது, யசோதா என்ன பாடுபட்டிருப்பார். ஆனால் நான் என் குழந்தையை பறிகொடுத்துவிட்டு போராடிக் கொண்டி ருந்தேன். அது என் குழந்தைக்கு நீதி கேட்ட போராட்டம் மட்டுமல்ல; என்னைப் போன்று ஒரு தாய்,
தன் கண்முன்னே தன் குழந்தை காலைப் பிடித்து தலையை பாறையில் அடித்து கொல்லப்படுவதை பார்க்கும்படியான சம்பவம் நிகழவே கூடாது என்பதற்காக.

ஆனால், இப்போது நான் பார்ப்பது என்ன? இதோ, அந்தக் குற்றவாளிகள் என் ஊரில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நானோ மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
“பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப் பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து- குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான்-இது செய்யுமுன்னேமுடியேன்” என்றுரைத்தாள், பாஞ்சாலி.

நான் அப்படிக் கோரமாட்டேன். அவர்களைப் போல் யாரும் மிருகமாக மாறாமல் வாழ
வேண்டும். அதற்காக அவர்கள் சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கை.

கண்ணகியோ, “பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்”

என்று சாபம் உரைத்தாள். இது தன் கணவனை மட்டும் அநீதியாக இழந்ததால் வந்த கோபம் அது. ஆனால் 14 பேரை அதுவும் தாய்,
மகள், நெருங்கிய உறவுகள் அனைவரையும் பறிகொடுத்த பிறகும் நான் அப்படி கோரமாட்டேன்.
நான் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும், ஒவ்வொரு உயிரையும் அந்த உயிரின் உறவுகளையும் நான் நேசிக்கிறேன். யாருக்கும் தீங்கிழைப்பதோ, தீங்கிழைத்தோரை தீயிடுவதோ, தீ தின்னட்டும் என சாபம் விடுவதோ என் நோக்கமல்ல
ஆனால் இப்படி கொடிய குற்றவாளிகள் 11 பேரும் ஊருக்குள் தலைநிமிர்த்தி திமிரோடு அலைவது நீடிக்கும் என்றால், இந்த நாட்டை யார் நாடு என்பார்? இந்த மக்களை யார் மனிதர்கள் என்பார்? இந்த நீதித்துறையை யார் நீதி வழங்கும் அமைப்பு என்பார்?

என் தாய் நாடு நீதிமறுக்கப்பட்டவர்களின் தேசமாக வும்,
நீதி மறுப்போர் ஆளும் காடாகவும் மாறிவிடக் கூடாது.

எனவே,

இனி இது என் துயரம் அல்ல; இந்திய மக்களின் துயரம். இந்த தேசத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக னுக்கும் உண்டு. எனவே, ஒவ்வொரு இந்தியரும் உரத்துச் சொல்ல வேண்டும்.

இந்தக் கட்டுரையை படித்த பின்பு கோத்ரா கலவரத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்களை கண்மூடித்தனமாக ஆதரித்து வரும் பாஜக, ஆர்எஸ்எஸ், விஹெச்பி, போன்ற இந்துத்துவா அமைப்புக்களில் உள்ளவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.