விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து கார்ப்பரேட் அடிமைகளாக மாற்ற முயலும் இந்தக் கால அரசுகளின் திட்டத்தில் விவசாயிகள் படும் சிக்கல் ஒன்றை எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கஜேந்திரன். வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்யாமல் வேள்வியாகச் செய்து வருபவர் விதார்த்.
தனது நிலத்தில் ரசாயன உரங்களைப் போடாமல் இயற்கை விவசாய முறையை கையாண்டு வெற்றி பெற்று, ஊடகங்களின் பாராட்டையும் பெற்றவர் அவர்.
திடீரென ஒரு நாள் சில ஆட்கள் வந்து அவரது நிலத்தில் வேலி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் சண்டைக்குப் போகும் விதாரத்துக்கு அந்த நிலம் தனியார் வங்கியால் ஏலம் விடப்பட்டு விற்பனையானது தெரிய வருகிறது.
இறந்து போன விதார்தின் தந்தை, அந்த நிலத்தின் மீது கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி செலுத்தாததால் ஏலம் விட்டதாகவும் அந்த தனியார் வங்கி அதிகாரி பதில் சொல்கிறார்.
வாங்காத கடனுக்கு தன் நிலத்தை அபகரித்துக் கொண்டதில் ஏதோ மிகப்பெரிய சதி இருப்பதை உணர்ந்து அதை கண்டுபிடித்து தன் நிலத்தை மீட்க விதார்த் செய்யும் முயற்சிகள்தான் மருதம் படத்தின் கதை.
எப்போதும் போல் தனது யதார்த்தமான நடிப்பால் கன்னியப்பன் என்ற விவசாயி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் விதார்த்.
அவருக்கு மனைவியாக வரும் ரக்க்ஷனா, கணவன் படும் கஷ்டங்களை பார்த்து துயரப்படும் மென் சோகத்தை மிக அழகாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்.
கைப்பகுதி சற்று லூசாக இருக்கும் ஜாக்கெட்டை அணிந்து அவர் நடித்திருப்பது அப்படியே கிராமத்து பெண்ணை நினைவூட்டுகிறது.
விவசாய நிலம் ஜப்தி, டிராக்டர் பறிமுதல் என்றெல்லாம் சில வரி செய்திகளை படித்துவிட்டு கண்டு கொள்ளாமல் அவற்றை கடந்து சென்று விடுகிறோம்.
நிதி நிறுவனங்கள் வேளாண் பெருமக்களின் வாழ்க்கையை எப்படி நிர்மூலமாக்குகின்றன என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் மருதம் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பி கஜேந்திரன். இதற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.
மலையும் மலை சார்ந்த நிலங்களையும் அழகாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் கே எஸ் சோமசுந்தரம்.
என்.ஆர். ரகுநந்தன் இசையில் உருவான பாடல்கள் பலத்திற்கு பலம் சேர்க்கின்றன.
தமிழகத்தில் மட்டுமல்ல கிட்டத்தட்ட இந்தியா முழுக்க விவசாயிகள் நிலை இதுதான் என்பதால் இந்தப் படத்தை அனைத்து இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட வேண்டும்.
விதார்த் படம் என்றால் நிச்சயமாக நல்ல படமாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையை மருதம் திரைப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
குடும்பத்துடன் தாராளமாக சென்று பார்க்க வேண்டிய படம் மருதம்.
மதிப்பெண் 4/5
தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பு : சி. வெங்கடேசன்
நடிப்பு :
விதார்த், ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ்
எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்
எடிட்டிங் : B சந்துரு
