’பூஜை’ விமர்சனம்- ‘ ஹரி வெரி ஸாரி..

படத்துக்குப் படம் ஹீரோ, ஹீரோயின்களை மாற்றினால் போதும் கதையை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் ஹரி ஸ்ட்ராங்காக நம்புகிறார் போல. இந்த கத்தி’யும் அவரது பட்டறையில் இருந்து வந்திருக்கும் அவரது ஷேம் ஃபார்முலா உத்தி.

நிகழ்வில் மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு நண்பர்களுடன் லூட்டி அடித்துக்கொண்டிருக்கும் விஷால், ஷ்ருதிஹாசனை கண்டதும் காதல்கொள்கிறார். பார்த்தவுடன் விஷாலிடம் விழுந்துவிடும் அவர், ஒரு  ஃப்ளாஷ்பேக் போட வழிவகுக்கும் வகையில், ‘ என் ஸ்டேட்டஸ் என்ன உன் ஸ்டேட்டஸ் என்ன ? நீ போய் என்ன லவ் பண்ணலாமா? என்று கேட்கிறார்.

அப்படியே ஃப்ளாஷ்பேக் போனால் கோவை ஏரியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரக்குடும்பம் விஷாலுடையது. அத்தை மகளுடன் தவறாகப்பார்க்கப்பட்டு, அம்மா ராதிகாவால் வீட்டை விட்டு விரப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகிறது.

கதையில் வில்லன் வேண்டுமே? முகேஷ் திவாரி வருகிறார். கூலிப்படை ஆட்களை அமர்த்தி முக்கிய புள்ளிகளை கொன்று பணம் குவிக்கும் மு.தி ஒருமுறை போலிஸ் அதிகாரி சத்யராஜைக் கொல்ல முயல ,அவரை விஷால் காப்பாற்றுகிறார்.

இப்படத்தின் கதையை விலாவாரியாக சொல்வதால் கடுப்பாகிறீர்களே அதே போல் விஷால் மேல் ஏகக்கடுப்பாகிவிடுகிறார் மு.திவாரி. அப்புறமென்ன ரத்தக்களறி பூஜைதான்.

சத்யராஜுக்கு மொத்தம் பத்துக்காட்சிகள் கூட தேறாது. ஆனந்த்ராஜ் நடித்திருந்தால் கூட ஆட்சேபனை இருந்திருக்காது. விஷாலுக்கு டெய்லர் மேட் கேரக்டர் என்றால் நம்ம ஸ்ருதிஹாசனுக்கு டெய்லரே தேவைப்படாத கேரக்டர். கவர்ச்சியில் புரட்சி படைக்கிறார் கலைஞானியின் அத்திரி புத்திரி. அவரது  சொந்தக்குரலை கேட்க நேரும்போது, அதற்குப்பதில் வில்லன் கூலிப்படை ஆட்களால் நாம் கொலை செய்யப்படுவது உத்தமம் என்று தோன்றுகிறது.

பத்து நிமிடத்துக்கு ஒரு பாட்டு, அடுத்த பத்து நிமிடத்துக்கு ஒரு ஃபைட்டு மூன்றாவது பத்து நிமிடத்துக்கு ஒரு காட்டு ச்சீ ஸாரி காமெடி என்ற அடிப்படையில் சூரி, ப்ளாக் பாண்டி மற்றும் இமான் அண்ணாச்சி வகையறாக்களை வைத்து வறுத்தெடுக்கிறார்கள்.

நடிகர் சங்கத்தில் பொதுக்குழு நடந்தபோது அப்படியே மொத்தப்பேரையும் லாரியில் அள்ளிக்கொண்டு போனது போல் படம் முழுக்க அவ்வளவு நட்சத்திரக்கூட்டம். அதற்காக முன்னாள் நாயகிகள் சித்தாரா, கவுசல்யா போன்றவர்களையெல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் ரேஞ்சுக்கு இறக்கியிருக்கவேண்டாம்.

ஒளிப்பதிவு ப்ரியன். இசை யுவன் சங்கர் ராஜா. இருவருமே கொடுத்த காசுக்கு மேலேயே கூவியிருக்கிறார்கள்.

பரணில் பல்வேறு ஃபைல்களில்  இருக்கும் ஒரே கதை[களை] கூடியவிரைவில் எடைக்குப்போட்டுவிட்டு, புதிய கதை ஒன்றைத்தேட வேண்டிய நேரம் இயக்குநருக்கு நெருங்கியிருக்கிறது.

ஹரி வெரி ஸாரி….