‘களவாடிய காசுகளில் களவாடிய பொழுதுகள்’

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதாவது 2009 மார்ச் 25, அன்று துவங்கப்பட்டு, 2010 -ல் முடிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு கிடந்த  தங்கர்பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐங்கரன் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, தயாரிப்பாளர்கள் குறித்து தங்கர் மச்சான் வாய்க்கொழுப்பாக அடித்த கமெண்டுகளே காரணம் என்று இண்டஸ்ட்ரி முழுக்க கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது தங்கர் மிகவும் நொந்துகிடக்கும் நிலையில் அவரை மன்னிக்க தயாராகிவிட்ட ஐங்கரன் தயாரிப்பாளர்கள் படத்தை தீபாவளி ரிலீஸ்களுக்கு அடுத்த இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்த திடீர் முடிவின் பின்னணியில் இன்னொரு களவாடல் கதையும் பேசப்பட்டு வருகிறது. ‘கத்தி’ படத்திற்கு இருக்கும் மிரட்டலைப் பயன்படுத்தி, லைக்கா நிறுவனத்திடமிருந்து ஐங்கரன் கருணாகரன் பெருங்கொள்ளை அடித்திருப்பதாகவும், அதில் ஒரு துளி பணத்தில்தான் ‘களவாடிய’ பொழுதுகள் ரிலீஸாவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.