“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்’ -மிஷ்கின்

 

இயக்குநர் மிஷ்கினும் ஒருவகையில் ‘கைப்புள்ள’ போலத்தான். வடிவேலுக்கு முட்டுச்சந்து என்றால் மிஷ்கினுக்கு நெட்டுச்சந்து.

ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, கலைஞானி கமல் தொடங்கி அனைவரையும் சகட்டுமேனிக்கு சந்திக்கு இழுக்க, அவருக்கு பதில் பந்தி வைத்திருக்கிறார்  ஃபேஸ்புக் பிரபலம் நண்பர் பாலகணேசன்.

இயக்குனர் மிஷ்கினுக்கு,

கணேசன் எழுதிக்கொள்வது. நலம். உங்கள் நலம் பாலாவின் தயவால் நன்றாக இருப்பதாய் அறிகிறேன். இன்று நீங்கள் தமிழ் ஸ்டூடியோ-வில் பேசிய அல்லது ஆற்றிய அற்புத உரையை கேட்கும் பாக்கியத்துக்கு ஆளானேன். இங்கே நிற்க.

“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்.. அவனை நான் திருப்திபடுத்தனும்..”என்று சொல்லியுள்ளீர்கள். அப்புறம் நீங்களே “எல்லாரும் விமர்சனம் எழுதுறான்” என்றும் கூறியுள்ளீர்கள். நான் வழக்கமாக குவார்ட்டர் அடித்துவிட்டுதான் விமர்சனம் எழுதுவதால் அது எனக்கு சொல்லப்பட்டதல்ல என்று ஒதுங்கி கொள்கிறேன். ஆனால் தண்ணி அடித்துவிட்டு படத்திற்கு வருபவனுக்கு நீங்கள் எடுக்கும் படம் பிடிக்காமால் போனதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் தண்ணியடிக்காமல் படம் பார்க்க வருபவன் இங்கே படம் முடிந்ததும் ஆர்வமாக அடுத்தவனை காப்பாற்றும் பொருட்டு, குறிப்பாய் அவன் 120 ரூபாயையும், பார்கிங் சார்ஜ் 200 ரூபாயையும் காக்கும்பொருட்டு “மச்சி..படம் மொக்கை..” என்று ஸ்டேடஸ் போடுவது எப்படி மச்சி தப்பாகும்?

அப்புறம் நீங்கள் இணையத்தில் “காப்பி அடிக்கிறான்” என்று சொல்லும் விமர்சனத்திற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு உண்மையை நீங்களே போட்டுடைத்துவிட்டீர்கள். அது வேறொன்றுமில்லை கமல் மேட்டர்தான்! “ஏங்க நாயகன் காப்பி இல்லையா?” என்று நீங்கள் கேட்டபோது நான் கை தட்டினேன். ஆகா கமல் படம் காப்பியடிக்கப்பட்டதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதாவது உங்கள் கோட்டிற்கு அருகில் கமல் என்கிற பெரிய கோட்டை வரைந்து உங்கள் கோடை கண்ணுக்கு தெரியாமல் ஆக்குகிறீர்கள்.

அவ்வளவு அறிவாளி இயக்குனரான நீங்களே (இந்த அறிவாளி-ங்கிற வார்த்தையை நான் சொல்லல.. அவரே நான் உலக இலக்கியத்தை படிக்கிறேன்.. உலகப்படங்கள் பார்க்குறேன்னு திரும்ப திரும்ப சொல்லி நான் அறிவளிதான்னு சொன்னாரு..) கமல் மேட்டரை ஆமாம் அப்படித்தான் என்று ஒப்புக் கொள்வதைத்தான் இங்கே இணையத்தில் நண்பர்கள் ஆதாரத்தோடு வெளியிடுகிறார்கள். ஆனால் அதை படித்துவிட்டு சில அம்மாஞ்சிகள் மற்றும் அவசரக் கொடுக்கைகள் உங்கள் படங்களை பார்த்துவிட்டு,”@#$%^&*()!) என்றெல்லாம் மெசேஜ் அனுப்பினால் அதற்கு உண்மையிலேயே பாண்டித்யம் பெற்றவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்ததால் அருண் விமர்சனம் எழுதலாம். அவர் சினிமா அறிவு நிரம்பியவர் என்பதை நீங்கள் நேரில் பார்த்ததால் அவருக்கு மேடையிலேயே வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள்.ஆனால் பிரபலமாகாத ஆனால் தினமும் குறைந்தது இரண்டு சினிமா பார்க்கின்ற மனிதர்களும் இங்கே நிறைய உண்டு. அவர்கள் எழுத்வது மட்டும் கசக்கிறதா?

உங்கள் நந்தலாலாவில் செண்டிமெண்ட் காட்சிகள் நன்றாக இருந்தது.ஆனால் அதையே இந்த மேடையிலும் அழகாக பயன்படுத்தி இருந்தீர்கள். அந்த குழந்தை உதாரணம் அருமையிலும் அருமை. நான் வாயடைத்தது மட்டும் அல்லாமல் வேறொன்றும் அடைத்து கஷ்டப்பட்டுவிட்டேன்.

அப்புறம் திடீரென கமல் இருக்கும் மேடையில் கமல் மட்டும்தான் பேசுவார் என்கிற உண்மையையும் உடைத்துவிட்டீர்கள். புத்தனின் பல் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

அப்புறம் நீங்கள் ஆம் ஆத்மி கட்சியா? விளக்குமாறு எல்லாம் எடுத்துக்கொண்டு வருவதாக சொல்லியிருக்கிறீர்கள் ?

ஓ ! நீங்கள் பாரதிய ஜனதாவா? சுவச்ச பாரத் திட்டத்திற்கு உங்களையும் அழைத்தார்களா? நல்லது.

இந்த கடிதம் இனிதே இத்துடன் முடிந்தது.

நன்றி. வணக்கம்.

அன்புடன்,

பால கணேசன்.

அந்த உளறல் யூடுப் லிங்க்