வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் கங்காரு. மிருகம், உயிர், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்கேவி தியேட்டரில் நடந்தது.

அப்போது பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு நாள் பேட்டாவுக்காக ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்தினார் என்று குமுறினார். அவர் கூறியதாவது..

“இந்தக் கங்காருவை ரொம்ப நாள் சுமந்திருந்தேன். நான்கு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இயங்காமல் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. ஒரு கசப்பான அனுபவம், இதைச் சொல்லியே ஆக வேண்டும். கொடைக்கானலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்கவில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்..? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார். அவர் யாரு ? பெப்ஸி தலைவர் அமீரா..? ஆனால் அவரோ, செல்வமணியா விக்ரமனா யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று திமிராக மிரட்டுகிறார். எல்லா தொழிலிலும் முதலாளிதான் தொழிலாளிகளை கட்டுப் படுத்துகிறார்கள். சினிமாவில் மட்டும்தான் தொழிலாளிகள் முதல் போட்ட முதலாளிகளைக் கட்டுப் படுத்துகிறார்கள். இது என்ன கொடுமை? இதற்கு விடிவு காலம் என்ன? 150 பேர் வேலை பார்க்கும் ஒரு படப்பிடிப்பை ஒரு தனியாள் நிறுத்த முடியும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?” இவ்வாறு பேசினார்.

சுரேஷ் காமாட்சிக்குப் பதில் அளிக்கும் விதத்தில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பேசினார். அவர் கூறுகையில், “இது மாதிரி முன்பும் நடந்துள்ளன.’திருமதி பழனிச்சாமி’ படத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட் கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சி.அவுட்டோரில் எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம் அருகிலிருந்த ஹீரோ சத்யராஜ் சொன்னார்.. ‘டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல’ என்றார். ‘உனக்காக நடித்தவன் அவன். குதித்தவன் அவன்தான் ஒரிஜினல். நீதான் டூப். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 ரூபாய் சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ’ என்றேன்” – என்று பேசினார்.

டெக்னீஷியன்களின் உழைப்பின்றி சினிமா இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாக இருந்தது அவர் பதில். ஆனால் அத்தோடு நின்றால் தயாரிப்பாளர்கள் மனது நோகுமே என்று தயாரிப்பாளர்களர்களுக்கு ‘தயாரிப்பாளர் திமிர் வேண்டும்’ என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.

லட்சங்களில் புரள்பவர்களுக்கு லட்சம் என்றைக்கு கிடைத்தாலும் பிரச்சனையில்லை. ஒரு நாளில் கிடைக்கும் பேட்டாவைக் கொண்டு தங்களது அடுத்த வாரச் சாப்பாட்டை நடத்த வேண்டியிருப்பவர்களுக்கு ஒரு நாள் பேட்டா என்பது பெரிய விஷயம் தான். டிஜிட்டல் மயமாகிவிட்ட சினிமாவின் ‘தயாரிப்புச் செலவு’ பன்மடங்கு சுருங்கிவிட்ட சூழலில் ‘நிரந்தரமாக’ சினிமாவை நம்பி வாழவேண்டிய நிலையிலிருந்து அதன் டெக்னீஷியன்கள் விடுபட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. டெக்னீஷியன்களும் சமமான மரியாதையுடன், உழைப்புக்கேற்ற சமமான ஊதியத்துடன் நடத்தப்படும் காலம் வரும் போது சினிமாவும் பெரும் தயாரிப்பாளர்கள் மட்டுமே லாபம் பார்க்கும் நிலையிலிருந்து மாறும்.

Related Images: