ஆடுகளம் படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற 36 வயது இளைஞர் எடிட்டர் கிஷோர்.   தற்போது விஜயா மருத்துவமனையில் மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.  மூளையில் ரத்தம் கசிவு ஏற்பட்டு, இப்போது பெருமளவு பரவி, அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டிருக்கிறார்.

மருத்துவமனை நிர்வாகம், ‘இவர் கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலைதான். இனி சிகிச்சையளிப்பதில் பலனில்லை’ என்றே கூறிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த வேதனையில் கிஷோரின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட, அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில்… இப்படி 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார் கிஷோர்.

இயக்குநர் வெற்றிமாறன்தான் கிஷோரை விஜயா மருத்துவமனையில் சேர்த்தாராம். அதன் பிறகு யாருமே அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். உடனிருந்து கவனிக்கவும் ஆளில்லையாம்.  தமிழ்ச் சினிமாவில் பெரிய பெயர்கள் வந்தாலும் கலைஞர்களின் நிதிநிலைமை அந்த அளவுக்கு பெரிதாக மாறிவிடுவதில்லை என்பதன் வெளிப்பாடே இது.  ஒரு தீவிரமான நோய் வந்தாலே அவர்களின் வாழ்க்கை நிலைமையும் நிதி நிலைமையும் கேள்விக்குள்ளாகிவிடுகிறது.

சினிமா கலைஞர்களில் ஹீரோ, ஹீரோயின் போன்ற பெரும் பாத்திர நடிகர்கள் தவிர மற்றவர்களின் வாழ்க்கை சாதாரண நடுத்தர வாழ்க்கைக்கும் அதற்கும் கொஞ்சம் மேலாகவுமே நிற்க முடிகிறது. இன்று கிஷோருக்கு யாராவது உதவி செய்வார்களா என்று அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் எதிர்பார்க்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

Related Images: