சல்மான் கான் நடிக்கும் ‘குற்றவாளி’ !!

இது சல்மானின் அடுத்த படமல்ல. 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் சல்மான்கான், மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில், வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில் ப்ளாட்பாரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார்; 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். மும்பை மாவட்ட நீதிமன்றத்தில் 13 வருடங்களாக இழுபட்ட இந்தக் கேஸூக்கு இன்று ஒரு வழியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

தீர்ப்பில் “2002-ம் ஆண்டு மும்பையில் நடந்த கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் தான் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் லைசென்ஸ் இல்லாமலும் கார் ஓட்டி இருக்கிறார். சல்மான்கான் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சல்மான்கானை குற்றவாளி என்று இந்த கோர்ட்டு அறிவிக்கிறது.” என்று நீதிபதி அறிவித்தார்.

உடனே சல்மான்கான் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியதாம். சல்மான் கான் நீதிபதியிடம் ‘‘நான் நிரபராதி. நான் கார் ஓட்டவே இல்லை’’ என்று கண்ணீர் மல்க கூறினாராம்.

தண்டனை விவரம் நாளை தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருக்கிறார். சல்மானுக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை என்று வரக்கூடும்.

ஏற்கனவே சல்மானின் கார் டிரைவர் அசோக்சிங் ‘நான் தான் காரை ஓட்டினேன்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே ஹைகோர்ட்டுக்கு ஒரு 5 வருடம், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு 5 வருடம் என்று கேஸை இழுத்தாலே இன்னொரு 10 வருடம் ஓடிவிடும்.

அதற்குள் யார் யாரை சரிகட்ட முடியுமோ அவ்வளவு பேரும் சரிக்கட்டப் படுவார்கள். பிறகென்ன படம் முடிஞ்சுபோச்சு வீடு கிளம்ப வேண்டியது தான்..