‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ ஜேம்ஸ் ஹார்னர் !!

ஹாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவுக்குப் பிடித்த ஹாலிவுட் இசையமைப்பாளர்களில் ஒருவரும், சிறந்த இசையமைப்புக்காக இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றவருமான ஜேம்ஸ் ஹார்னர் நேற்று விமான விபத்தில் மரணமடைந்தார்.  அவருக்கு வயது 61.

அவதார், `எ பியூட்டிஃபுல் மைண்ட் , `டைட்டானிக், `பிரேவ் ஹார்ட்`, அப்பல்லோ 13  உட்பட எண்ணற்ற ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் ஹார்னரின்  இசைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. டைட்டானிக் இசை  மட்டும் 3 கோடி சி.டிக்கள் விற்பனையானது.

இசையமைப்பது தவிர விமான பயணம் ஹார்னருக்கு மனதுக்குப் பிடித்த ஒன்று. தனது ஹாபிக்காக சொந்தமாக மூன்று குட்டி விமானங்களை அவர் வைத்திருந்தார். கலிபோர்னியாவில் அவரது விமானத்தில் நேற்று அவர் பயணம் செய்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து சான்டா பார்பராவிற்கு அருகே விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. விமானத்தை அவர் தனியாக ஓட்டிச் சென்றுள்ளார்.

ஜேம்ஸ் ஹார்னரை ஹாலிவுட்டின் இளையராஜா என்று அழைக்கலாம் என்கிற அளவுக்கு சினிமா இசையில் மக்களை கொள்ளை கொண்ட கலைஞர். டைட்டானிக் படத்தில் மனத்தை உருக்கும் அவரது பாடலான ‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ என்கிற பாடலுக்கு ஆஸ்கார் கிடைத்தது.  புகழ் பெற்ற பாடகி ஸெலின் டயான் இப்பாடலை பாடியிருந்தார்.

இன்று அந்த டைட்டானிக் விமானம் நொறுங்கிவிட்டது.