சம்பாதிக்காமலே சுகமாக வாழ்ந்த குடும்பம் காந்தி குடும்பம் – அருண் ஜெட்லி

பார்லிமண்டில் நடக்கும் தெருக்கூத்து ரக வித்தைகளைக் கண்டால் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் மக்கள் மேல் பரிதாபமும் வருகிறது.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கடந்த வாரம் முழுக்க பார்லிமெண்ட்டில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவியதை வைத்து அவரை பதவி விலக வற்புறுத்தி குழப்பம் ஏற்படுத்த, சபாநாயகர் 36 காங்கிரஸ் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்ய, மேலும் இருபுறமும் குழாயடிச் சண்டை நாறுகிறது.

“சுஷ்மா ஸ்வராஜ் மனித நேயமுள்ளவர் தான். ஆனால் அதை ஏன் ரகசியமாய்ச் செய்கிறார் என்பது தெரியவில்லை.”
“நேற்று சுஷ்மா எனது கரங்களைப் பற்றி ‘மகனே ஏன் என் மீது கோபமாய் இருக்கிறாய்’ என்று கேட்டார். நான் சொன்னேன் ‘நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். அதனாலேயே உங்கள் கண்களைப் பார்த்து உண்மையைக் கேட்கிறேன். ஆனால் நீங்கள் பதில் கூறாது எங்கோ திரும்பிக் கொள்கிறீர்கள்.’ ”
“தேசத்திற்கே விரோதமான லலித் மோடிக்கு உதவிய நீங்கள் எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?”
இவை சுஷ்மா பற்றி ராகுல் உதிர்த்த முத்துக்கள்.

” ராகுல் !! உங்களது அடுத்த விடுமுறையில் வரலாற்றை நன்றாகப் படித்துவிட்டு அம்மாவிடம் போய்க் கேளுங்கள் ‘அம்மா ‘குவத்ரோச்சி வழக்கில் நாம் எவ்வளவு பணம் வாங்கினோம்?”
“ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான,35 வருடங்களாக அமெரிக்கச் சிறையில் வாடிய, ‘அதில் சஹர்யர்’ அமெரிக்க அதிபரின் மன்னிப்புப் பெற்று விடுதலையாவதற்குக் கைமாறாக போபால் விஷவாயு விபத்திலிருந்து அதன் முதலாளி வாரன் ஆண்டர்சனை கைதாகாமல் காப்பாற்றி அமெரிக்கா அனுப்பினாரா ராஜீவ்காந்தி?”
“நான் லலித் மோடிக்கு உதவவில்லை. இந்தியக் குடிமகளான அவரது அப்பாவி மனைவிக்கு மட்டுமே உதவினேன். ”
இவை சுஷ்மா உதிர்த்த முத்துக்கள்.

இந்தக் குழாயடிச் சண்டையில் நைசாக நில அபகரிப்புச் சட்டம், ஒருங்கிணைந்த வரிச் சட்டம், மோட்டார் வாகன விதிச் சட்டம் என்று பல சட்டங்களை இயற்றிவிடலாம் என்று கனவு கண்ட பி.ஜே.பியின் திட்டம் பலிக்காததுதான் பிரச்சனை. முன்பு காங்கிரஸ் ஆட்சியிலும் இதே டெக்னிக் கையாளப்படும். பார்லிமெண்டில் நடக்கும் குழாயடிச் சண்டைகள் நடுவே மக்களுக்கு ஆப்பு வைக்கும் பல சட்டங்கள் நைசாக இயற்றப்படும். எல்லோரும் தெருச்சண்டையைத் தானே பார்ப்பார்கள்.

இதில் போதாதென்று இப்போது அருண் ஜெட்லி ஜெட்லீ போல பாய்ந்து வார்த்தைத் தாக்குதல் தொடுக்கிறார். “நாட்டில் நிறைய நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் எல்லாம் தங்கள் அடிப்படை வாழ்க்கைக்கு ஒரு தொழில் செய்கிறார்கள். இந்தத் தேசத்தின் அரசியலில் பல தலைமுறைகளாக தாக்கம் செலுத்தி வரும் ஒரு குடும்பத்தினருக்கு வாழ்க்கை வாழ்வதற்கு உழைக்கவேண்டும் என்பதே தெரியாது. அவர்களுக்கு வேலை எதுவும் செய்யாமலேயே சொகுசாய் வாழத் தெரிந்திருக்கிறது.”. அருண் ஜெட்லி காந்தி குடும்பத்தைத் தான் இப்படி நடுரோட்டிற்கு இழுத்திருக்கிறார் என்பதை விளக்கவும் வேண்டுமா என்ன?