1993 மும்பை குண்டுவெடிப்புகள் வழக்கில் முதல் குற்றவாளியான தாவூத் இப்ராஹீம் இந்திய அரசால் தேடப்பட்டு வருகிறான். அவனுக்குப் பதில் யாகூப் மேஹ்மானை அந்த வழக்கில் பிடித்து குற்றம் சாட்டி தூக்கிலும் போட்டாயிற்று. இந்நிலையில் பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹீம் இருப்பதற்கான ஆதாரங்களை தேசிய புலனாய்வுக் கழகம் கண்டுபிடித்துள்ளது.

இந்தியா பல வருடங்களாகவே தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் இருக்கிறான் என்று குற்றம் சாட்டி வந்துள்ளது. அதை பல காலமாகவே பாகிஸ்தான் மறுத்தும் வந்துள்ளது. இந்நிலையில் ஒரு டெலிபோன் பில்லும் மற்றும் ஒரு பாஸ்போர்ட்டும் இந்திய அதிகாரிகளிடம் ஆதாரமாகக் கிடைத்துள்ளன. அதன் படி தாவூத் இப்ராஹீம் கராச்சியில் இருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது.

அந்த டெலிபோன் பில் தாவூத் இப்ராஹீமின் மனைவி மேஜாபீன் ஷேக்கின் பெயரில் உள்ளது. அதில் டி-13, ப்ளாக் 4, கராச்சி டெவலப்மண்ட் அத்தாரிட்டி, எஸ்.சி.ஹெச் 5, க்ளிப்டான் என்கிற முகவரி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பாகிஸ்தான் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வழங்கியிருக்கும் ரசீது. கிடைத்துள்ள பாஸ்போர்ட்டில் உள்ள சமீபத்திய புகைப்படத்தில் தாவூத் இப்ராஹீம் க்ளீனாக ஷேவ் செய்து முடியை திருத்து வாரியிருக்கிறான். தாவூத் இப்ராஹீமுக்கு தற்போது 59 வயதாகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நேரத்தில் இந்த ஆதாரம் கிடைத்திருப்பதால் அது பற்றி பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்கப்படலாம் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் காஷ்மீர் ஹூரியத் தலைவர்களிடம் பேச விருப்பம் தெரிவித்ததை இந்தியா நிராகரித்துள்ளது. இந்நிலையில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹீம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது இந்திய-பாக் உறவுகளை மேலும் பாதிப்படையச் செய்யக் கூடும்.

Related Images: